

மழைக்காலத்தில் காலையில் எழுந்தவுடன் பலருக்குத் தங்கு தடையின்றி அடுக்குத் தும்மல் ஏற்படுவது மிகவும் பொதுவான ஒரு பிரச்சனையாகும். மருத்துவ மொழியில் இது 'அலர்ஜிக் ரைனிடிஸ்' (Allergic Rhinitis) என்று அழைக்கப்படுகிறது. நம் மூக்கின் சளி, ஜவ்வுப் பகுதியில் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களே இதற்குக் காரணங்களாக அமைகின்றன. மழைக்கால வேளைகளில் இந்தத் தும்மல் ஏன் இவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதற்கு மருத்துவர்கள் கூறும் காரணங்களைப் பார்க்கலாம்.
காற்றில் அதிகரிக்கும் அதிகப்படியான ஈரப்பதம் (High Humidity):
மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் மிக அதிகமாக இருக்கும். இந்த ஈரப்பதம் நமது மூக்கின் உள்ளே இருக்கும் மேன்மையான திசுக்களில் ஒருவித எரிச்சலை அல்லது மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் காற்றில் உள்ள தூசிகளைப் பெரிய ஆபத்தாகக் கருதி அவற்றை வெளியேற்ற 'ஹிஸ்டமைன்' என்ற ரசாயனத்தை வெளியிடுகிறது. இந்த ரசாயனம் தான் தொடர் தும்மலைத் தூண்டுகிறது. அத்துடன் மூக்கில் நீர் வடிதல் மற்றும் கண் அரிப்பையும் ஏற்படுத்துகிறது.
படுக்கையில் பெருகும் 'டஸ்ட் மைட்ஸ்' (Dust Mites):
மழைக்கால ஈரப்பதமான சூழல் நம் வீட்டுப் படுக்கை விரிப்புகள், மெத்தை, தலையணைகள், போர்வைகள் மற்றும் சோபாக்களில் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய தூசிப் பூச்சிகள் (Dust Mites) பெருகுவதற்கு சாதகமாக அமைகிறது. இரவு முழுவதும் இந்த தூசிப் பூச்சிகளின் அலர்ஜியை உண்டாக்கும் துகள்களை நாம் சுவாசிப்பதால், காலையில் எழுந்த உடனேயே அடுக்குத் தும்மல் ஆரம்பமாகி விடுகிறது.
பூஞ்சைக் காளான்களின் பெருக்கம்:
மழைக்காலத்தில் வீட்டின் சுவர்கள், குளியலறை, ஏசி போன்ற ஈரப்பதம் நிறைந்த இடங்களில் பூஞ்சைகள் (Molds) மற்றும் பூஞ்சைக் காளான்கள் எளிதாக வளரும். இவை காற்றில் பரப்பக்கூடிய மிக நுண்ணிய வித்திகளை (Spores) நாம் சுவாசிக்கும் பொழுது மூச்சுக்குழாய் மற்றும் நாசித் துவாரங்களில் சென்று அலர்ஜி ஏற்பட்டுத் தும்மல் தீவிரமாகிறது.
திடீர் வெப்பநிலை மாற்றம்:
இரவு முழுவதும் கதகதப்பான போர்வையினுள் தூங்கிவிட்டு அதிகாலையில் எழுந்திருக்கும் பொழுது உடலின் வெப்பநிலை மற்றும் சுற்றியுள்ள குளிர்ந்த காற்றுக்கு இடையே திடீர் மாற்றம் ஏற்படுகிறது. காலையில் நிலவும் குளிர்ந்த காற்று முகத்தில் படும்பொழுது அல்லது குளிர்ந்த நீரில் கை வைப்பது கூட மூக்கின் நரம்புகளைத் தூண்டி தும்மலை வரவழைக்கும். அதிகப்படியான ஈரப்பதம் மூக்கின் உட்பகுதியை எரிச்சல் அடையச் செய்வதால் இது ஏற்படுகிறது.
இரவில் தேங்கும் சளி:
சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு இரவு தூங்கும் பொழுது மூக்கின் காற்றுப் பாதைகளில் சளி அல்லது நீர் கோர்த்துக் கொள்ளும். காலையில் எழுந்ததும் உடல் இயங்கத் தொடங்கும் போது, இந்தத் துகள்களையும் நீரையும் வெளியேற்ற உடல் இயற்கையாகவே தும்மலைப் பயன்படுத்துகிறது.
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் எளிய தீர்வுகள்
காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த காற்றில் நேரடியாகச் செல்வதைத் தவிர்த்து தேவையெனில் முகக் கவசம் அணியலாம்.
காலையில் எழுந்ததும் லேசான வெந்நீரில் ஆவி பிடிப்பது மூக்கடைப்பை நீக்கி தும்மலைக் கட்டுப்படுத்தும்.
பகல் நேரங்களில் ஜன்னல்களைத் திறந்து வைத்து வீட்டிற்குள் சூரிய ஒளியும், நல்ல காற்றும் வர அனுமதிக்க வேண்டும்.
படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகளை வாரத்திற்கு ஒரு முறை வெந்நீரில் துவைத்து நன்றாக காய வைத்து பயன்படுத்த வேண்டும்.
மழைக்காலக் குளிர்ச்சியின் பொழுது ஏசி பயன்பாட்டை குறைப்பது நல்லது. அப்படியே பயன்படுத்தினாலும் அதன் ஃபில்டர்களை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.
குளிர்ந்த உணவுகள், ஐஸ் வாட்டர் போன்றவற்றைத் தவிர்த்து காலையில் இஞ்சி டீ அல்லது மிளகு கலந்த வெதுவெதுப்பான நீர் பருக தும்மல்கள் கட்டுப்படும்.
தூங்குவதற்கு முன்பு வாசனை திரவியங்கள், ஊதுபத்தி மற்றும் அறையை நறுமணமாக்கும் ஸ்பிரேக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
வீட்டு வைத்தியங்கள் தற்காலிக நிவாரணம் மட்டுமே தரும். இந்தத் தும்மல் பிரச்சனை தொடர்ந்து நீடித்து நாள்பட்டதாக மாறி தலைவலி, மூச்சுத் திணறல் அல்லது ஆஸ்துமாவாக மாறாமல் தடுப்பதற்கு ஒரு காது மூக்கு தொண்டை மருத்துவரை (ENT) அணுகி உரிய அலர்ஜி மாத்திரைகள் அல்லது நாசி ஸ்ப்ரேக்களை ஆலோசனையின் பேரில் பயன்படுத்தலாம்.