

பெண்கள் முதல் ஆண்கள் வரை உடல் நலம் பேணுவது தற்போது சவாலான விஷயமாக உள்ளது. தலை முதல் கால் வரை ஏதேதோ பாதிப்புகள் வேதனையுடன் மருத்துவ செலவுகளையும் தருகிறது. அந்தக் காலத்தில் இருந்த சத்தான சமச்சீர் உணவுகள் மற்றும் அதிக உடலுழைப்பு இல்லாததும் முக்கிய காரணங்களாக சொல்லப்பட்டாலும் நமது உடல் பாதிப்பை கண்டறிந்து தகுந்த சிகிச்சை எடுப்பது முக்கியமானதாகிறது.
இந்த வகையில் இரவு நேரங்களில் வரும் கால் தசைப்பிடிப்பினால் பலரும் கடும் வலியுடன் போராடி வருகின்றனர். சிறிது நேரம் வந்தாலும் உயிர் போகும் வலி தந்து விடுகிறது இந்த தசைப்பிடிப்பு.
இது எதனால் வருகிறது?
வராமல் தடுக்க வழியுண்டா?
மருத்துவர்கள் சொல்லும் காரணங்களை இங்கு காண்போம்.
இரவு நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென காலில் தசை இறுக்கமாகி, தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. குறிப்பாகக் கெண்டைக்கால் பகுதியில் தசை சுருண்டு பிடித்துக்கொள்வது பலருக்கும் ஏற்படும் பிரச்சினை. இதனை மருத்துவத்தில் இரவு நேரக் கால் தசைப்பிடிப்பு (Nocturnal Leg Cramps) என்கிறார்கள்.
கால் தசைப்பிடிப்பு ஏற்படுவதற்கான மருத்துவர்கள் கூறும் 8 காரணங்கள்;
உடலில் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாடு இதற்கான காரணமாகும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, அதிகமாக வியர்ப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படுவது ஆகியவை தசைகளின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கலாம்.
தசைகளுக்கு அதிகப்படியான வேலை தருவதும் காரணமாகலாம். வேலை பளுவினால் நீண்ட நேரம் நடப்பது, அதிக நேரம் நின்றுகொண்டே வேலை செய்வது, தேவைக்கு மேல் கடுமையான உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றால் தசைகள் சோர்வடைந்து இரவில் பிடிப்பு ஏற்படலாம்.
இயல்பாகவே வயது அதிகரிக்கும்போது தசைகளின் அளவும் செயல்திறனும் குறையலாம். இதனால் குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரவு நேரத் தசைப்பிடிப்பு அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
தாது உப்புகளின் சமநிலையின்மை மாறுபாடு இந்த பிரச்சனை தரலாம். உடலில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற தாதுக்களின் சமநிலை பாதிக்கப்பட்டால் தசைச் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். ஆனால் எல்லா தசைப்பிடிப்புக்கும் இந்தச் சத்துக் குறைபாடுகள்தான் காரணம் என்று சொல்ல முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கர்ப்பகால மாற்றங்கள் இந்த பிரச்சனை தரலாம். பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு, குறிப்பாக பிற்காலக் கர்ப்ப காலத்தில் இந்த கால் தசைப்பிடிப்பு ஏற்படுவது இயல்பு.
நீரிழிவு பாதிப்பு இதன் காரணமாகலாம். ஆம். நீரிழிவு பாதிப்பால் நரம்புகள் பாதிக்கப்படும்போது கால்களில் வலி, உணர்வின்மை மற்றும் தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
சிறுநீரகச் செயல்பாடு பாதிக்கப்படும்போது உடலில் தாதுக்கள் மற்றும் திரவங்களின் சமநிலை மாறி தசைப்பிடிப்பு ஏற்படலாம்.
சில மருந்துகளின் பக்கவிளைவுகள். ரத்த அழுத்தத்திற்கான சில மருந்துகள், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஸ்டாட்டின் மருந்து, சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்கும் மருந்துகள் சிலருக்கு தசைப்பிடிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆனால் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை நிறுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இரவு கால் தசைப்பிடிப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
பதற்றமடையாமல் காலை மெதுவாக நீட்டி, பாதத்தை உடலை நோக்கி மேலே இழுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட தசையை மெதுவாக மசாஜ் செய்யலாம்.
எழுந்து நின்று மெதுவாக நடக்கலாம்.
வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அல்லது தசைப்பகுதியில் வெந்நீர் ஒத்தடம் அல்லது ஐஸ் பேக் வைக்கலாம்.
மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டியது முக்கியம்.
இரவில் தசைப்பிடிப்பு வராமல் தடுக்க இந்த வழிகளை கடைபிடித்து பார்க்கலாம்
பகல் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
தூங்குவதற்கு முன்பு கால் தசைகளை மெதுவாக நீட்டும் பயிற்சி செய்யவும்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதைத் தவிர்க்கவும்.
உடல் உழைப்புக்குப் பிறகு தசைகளுக்கு ஓய்வு கொடுக்கவும்.
தூங்கும்போது கால்களை மிகவும் இறுக்கமாக மூடும்படி போர்வையைப் பயன்படுத்த வேண்டாம்.
மேலும் சரிவிகித உணவு மூலம் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துகள் உடலுக்குக் கிடைப்பதை உறுதி செய்யவும். தூங்கும் போது காலை கீழ்நோக்கி நீட்டுவதைத் தவிர்த்து, பாதங்கள் இயல்பான நிலையில் இருக்க (Neutral position) தலையணை பயன்படுத்தலாம்.
பின்வரும் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம் என தெரிந்து கொள்ளுங்கள்
அடிக்கடி இரவில் தசைப்பிடிப்பு ஏற்படுவது.
வலி காரணமாகத் தூக்கம் பாதிக்கப்படுவது.
காலில் வீக்கம் அல்லது உணர்வின்மை ஏற்படுவது.
தசைப்பிடிப்பு 10 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது.
கால்களில் பலவீனம் ஏற்படுவது.
குறிப்பாக ஒரு காலில் திடீர் வீக்கம், சிவப்பு, சூடு மற்றும் வலி இருந்தால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவப் பரிசோதனை அவசியம்.
மருத்துவர் செய்யும் பரிசோதனைகள் என்னென்ன?
அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்பட்டால் அதன் பின்னணியைக் கண்டறிய மருத்துவர் பாதிக்கப்பட்டவரின் உடல் நிலை பார்த்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, சிறுநீரகச் செயல்பாடு, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் அளவுகள், தைராய்டு செயல்பாடு மற்றும் நாள்பட பயன்படுத்தும் மருந்துகளின் விவரங்கள் ஆகியவற்றைப் பரிசோதிக்கலாம்.
எல்லோருக்கும் இத்தனை பரிசோதனைகளும் அவசியமில்லை.
இந்த முக்கிய குறிப்பு உங்களுக்காக..
இரவில் கால் தசைப்பிடிப்பு ஏற்படுவதற்கு இவைகள் மட்டுமே காரணம் கிடையாது. சிலருக்கு எந்தவிதமான உடல்நலப் பிரச்சினையும் இல்லாமலேயே ஏற்படலாம். எனவே தசைப்பிடிப்பு வந்தவுடன் கால்சியம், மெக்னீசியம் மாத்திரைகளைத் தாங்களாகவே எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த தசைப்பிடிப்பு பொதுவாக சில விநாடிகள் முதல் 10 நிமிடங்கள் வரை நீடிக்கலாம். பெரும்பாலான நேரங்களில் ஆபத்தில்லாதது என்றாலும், அடிக்கடி ஏற்பட்டால் கவனிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது.