
கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த நாட்களில் மக்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள, பிரஷ் ஜூஸ் குடிப்பார்கள். அதில் கிர்ணிப் பழஜூசும் உண்டு. வெயில் காலத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் பழ வகைகளில் ஒன்று கிர்ணிப்பழம். இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.
கோடை காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். உடலுக்கு தேவையான மினரல்கள், வைட்டமின்கள் ஆகியவற்றை வழங்குகிறது கிர்ணி. வெயிலின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. எனவே கோடையில் உணவில் இதை சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
கிர்ணி பழத்தில் வைட்டமின் ஏ சி ,பொட்டாசியம் மாங்கனீஸ் போன்றவை நிறைந்துள்ளன. நமது ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கிர்ணிப் பழத்தில் பீட்டா கரோட்டின் நிறைந்து உள்ளதால் கண்ணின் விழித்திரை சேதமடைவதையும் பார்வை குறைவு ஏற்படுவதையும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
கிர்ணிப் பழத்தில் மிகக் குறைவான கிளைசிமிக் இன்டெக்ஸ் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்கு பலனளிக்கும்.
கிர்ணிப் பழத்தில் கரையக் கூடிய நார்ச்சத்து உள்ளதால் வயிற்றுக்கோளாறுகளை குறைக்கிறது.
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.
நுரையீரல்களில் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் தன்மை கொண்டது.
அமெரிக்காவின் கான்சஸ் மாநில பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து துறை 2003 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் சிகரெட் புகைப்பவர்களின் நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை உயிர் சத்து 'ஏ' மூலம் சீர் செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கிர்ணிப் பழத்தின் மூலம் இந்த பாதிப்புகள் கட்டுப் படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டது.
முக்கிய கவனம்...
கிர்ணிப் பழத்தை வெட்டிய உடனே சாப்பிட வேண்டும். இதை வெட்டி அப்படியே வைத்து விட்டால் பழம் சீக்கிரம் கெட்டுவிடும். அதனால் பலன்கள் கிடைக்காது.
*கிர்ணிப் பழத்தில் பலவிதமான வகைகள் உள்ளன. மஸ்க் மெலன், ராக் மெலன்..
ராக் மெலன் அளவில் சிறியதாக இருக்கும். வெளிப்புறத் தோல் பகுதி பச்சை நிறம் கலந்திருக்கும்.
மஸ்க் மெலன், பூசணி போல பெரியதாக இருக்கும். அதன் தோல் பகுதி ஆரஞ்சு கலந்த பிரவுன் நிறத்தில் இருக்கும்.
கிர்ணிப் பழத்தை நறுக்கி சாப்பிடலாம். ஜீஸாகவும் குடிக்கலாம். மிக்ஸியில் சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து அடித்து குடிக்கலாம். உடலை குளிர்ச்சியாக வைக்கும். இப்பழத்தை தயிருடன் ஸ்மூத்தியாகவும், சாலட்டாக சாப்பிடலாம். கிர்ணி விதைகளை வறுத்தும் சாப்பிடலாம். உடலுக்கு நல்ல சத்துகளை அளிக்கும்.