மனிதர்களாகிய நமக்கு எப்போதுமே நம் எதிர்காலத்தைப் பற்றியும், நாம் எவ்வளவு காலம் பூமியில் வாழ்வோம் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வதில் ஒரு விருப்பம் உண்டு. இதற்காக நாம் ஜோதிடர்களையோ அல்லது கைரேகை நிபுணர்களையோ தேடிச் செல்வது வழக்கம். ஆனால், நம் உடல் எப்போதுமே நமக்குச் சில நுட்பமான சமிக்ஞைகளை கொடுத்துக்கொண்டே இருக்கிறது.
நாம் பெரும்பாலும் அழகிற்காக மட்டுமே பராமரிக்கும் நம் கை விரல் நகங்கள், நம் ஆரோக்கியத்தின் கண்ணாடியாகச் செயல்படுகின்றன. நம் உடலின் உள் உறுப்புகள் எப்படி இயங்குகின்றன என்பதையும், நாம் எவ்வளவு காலம் ஆரோக்கியமாக வாழ்வோம் என்பதையும் நம் நகங்களின் வளர்ச்சி வேகத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஹார்வர்ட் நிபுணரின் கண்டுபிடிப்பு!
முதுமை மற்றும் நீண்ட ஆயுள் குறித்து ஆய்வு செய்து வரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் சின்க்ளேர் என்ற நிபுணரின் கருத்துப்படி, நகங்கள் வேகமாக வளர்வது ஒரு மிகச்சிறந்த ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். பொதுவாக, நாம் நகங்களை வெட்டி எறிந்துவிட்டு, மீண்டும் எப்போது வளர்கிறது என்று கவனிப்பதில்லை.
ஆனால், உங்கள் நகங்கள் மிகக் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து, நீங்கள் அடிக்கடி நெயில் கட்டரைத் தேட வேண்டிய சூழல் இருந்தால், உங்கள் உடல் மிகவும் இளமையாக இருக்கிறது என்று அர்த்தம். உங்கள் உடலுக்குள் இருக்கும் இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகள் எந்தவிதச் சோர்வும் இன்றித் துடிப்புடன் செயல்படுவதையே இது காட்டுகிறது.
முப்பது வயது!
இயற்கையின் நியதிப்படி, மனிதர்களுக்கு வயது ஆக ஆக உடலின் செயல்பாடுகள் மெதுவாகும். 1979 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆய்வின் முடிவில், முப்பது வயதைக் கடந்த மனிதர்களுக்கு நகங்களின் வளர்ச்சி வாரம் ஒருமுறை 0.5 சதவீதம் என்ற அளவில் குறையத் தொடங்கும் என்று கண்டறியப்பட்டது. ஆனால், முப்பது அல்லது நாற்பது வயதைக் கடந்தும் ஒருவருக்கு நகங்கள் வேகமாக வளர்ந்தால், அவர் தனது வயதை விடக் குறைவான உயிரியல் வயதைக் கொண்டிருக்கிறார் என்று பொருள்.
ரத்த ஓட்டம்!
நமது உடலில் ரத்த ஓட்டம் சீராக இருந்தால் மட்டுமே அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்று சேரும். நகங்களின் வேர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து ரத்தத்தின் மூலமே கிடைக்கிறது. வயதாகும்போது ரத்த ஓட்டம் குறைவது இயல்பு. ஆனால் நகங்கள் வேகமாக வளர்கிறது என்றால், அந்த நபரின் ரத்த ஓட்டம் மிகச்சிறப்பாக இருக்கிறது என்று அர்த்தம் கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பருவ வயதினருக்கு ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் அதிகப்படியான ரத்த ஓட்டம் காரணமாக நகங்கள் வேகமாக வளர்வதைக் காண முடியும்.
ஊட்டச்சத்து!
வேகத்தை மட்டும் வைத்து நாம் ஆரோக்கியத்தை முழுமையாக எடைபோட்டுவிட முடியாது. நகங்களின் தோற்றமும் மிக முக்கியம். நகங்களில் வரிகள் விழுவது, வெள்ளைப் புள்ளிகள் தோன்றுவது அல்லது பள்ளம் விழுவது போன்றவை உடலில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுகின்றன. இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஏ போன்றவை குறையும்போது நகங்கள் பொலிவிழந்து சொரசொரப்பாக மாறும். எனவே நகங்களின் வளர்ச்சியோடு சேர்த்து, அதன் தோற்றத்தையும் கவனிப்பது அவசியம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)