

நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமலிருக்க, இனிப்பு வகைகளை அதிகம் உட்கொள்ளாமலிருக்க அறிவுறுத்தப்படுவார்கள். இதற்காக அவர்கள் ஸ்வீட் சாப்பிட தயங்குவார்கள். சிலர் இனிப்புகள் விற்கப்படும் கடைகளுக்குச் சென்றால், அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இனிப்பு வகைகளை ஏற இறங்கப் பார்த்து விட்டு, கால் கிலோ பாகற்காய் சிப்ஸை வாங்கிக் கொண்டு வீடு திரும்புவதும் உண்டு.
இவர்கள் சாப்பிடும் உணவுகளில் சர்க்கரைக்குப் பதிலாக எந்தப் பொருட்களை சேர்த்துக் கொண்டால் அதிக பாதிப்பில்லாமல் ஆரோக்கியத்தைக் காக்கலாம் என்பதை இப்பதிவில் காணலாம்.
1. மாங்க் ஃபுரூட் (Monk Fruit):
சீனாவில் காணப்படும், இனிப்பு சுவை கொண்ட பூஜ்ஜிய கலோரி (Zero calorie) பழம் இது. இதிலிருந்து தயாரிக்கப்படும் திக்கான திரவம் (concentrated sweetener), நீரிழிவு நோயாளிகள் காப்பி, டீ போன்றவற்றில் உபயோகிப்பதற்கு ஏற்றதாக உள்ளது. நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யாத இயற்கையான பழம் என்பதால், பவுடர் வடிவிலும் கிடைக்கக் கூடிய இதை, இனிப்பு வகைகளிலும் சேர்த்து தயாரித்து டயாபெட்டிக் பேஷண்ட்களுக்கு உண்ணக் கொடுக்கலாம்.
2. ஆப்பிள் சாஸ்:
இனிப்பு சேர்க்காமல் தயாரிக்கப்படும் ஆப்பிள் சாஸை பிரௌனி மற்றும் மஃபின்களின் மீது ஊற்றி நீரிழிவு நோயாளிகளுக்கு உண்ணக் கொடுக்கலாம். இது அவர்களுக்கு ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்தைக் கொடுப்பதுடன் கலோரி அளவு குறையவும் உதவும்.
3. பேரீச்சம்பழ பசை (Date Paste):
கொட்டை நீக்கிய பேரீச்சம் பழங்களிலிருந்து தயாரிக்கப்படுவது இது. இதில் அதிகளவு பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. இதன் கேரமல் சுவையானது நீர்ச்சத்தும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் அளிக்கக் கூடியது.
4. ரா ஹனி (Raw Honey):
இனிப்பூட்டிகளில் மிக ஆரோக்கியமானது இந்த சுத்தமான தேன். தனித்துவமான பூ வாசனை கொண்ட சுவையுடன் சில கனிமச் சத்துகளும் இதில் அடங்கியுள்ளன. சர்க்கரையில் உள்ளதை விட அதிக இனிப்பு சுவை தேனில் இருப்பதால், தேனை குறைந்த அளவில் பயன்படுத்துவதே ஆரோக்கியம்.
5. கோகனட் சுகர் (Coconut Sugar):
இது குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது. இதில் குறைந்த அளவில் இரும்புச் சத்து மற்றும் சிங்க் சத்தும் உள்ளன. பிரௌன் சுகரில் உள்ள சுவையும், வறுத்த மணமும் கொண்ட இந்த கோகனட் சுகரை நேரடியாக வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம்.
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்குப் பதிலாக, மேற் கூறிய மாற்று உணவுப் பொருட்களை பயன் படுத்தித்தான் பாருங்களேன்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)