

பாதியிலேயே கண்களை மூடிக்கொண்டு, புருவங்களை உயர்த்த வைக்கும் திகில் திரைப்படங்களை இரவு நேரத்தில் பார்க்க விரும்புபவர்களில் நீங்களும் ஒருவரா?
இரவு உறங்கச் செல்வதற்கு முன் நீங்கள் திகில் திரைப்படங்களைப் பார்த்தால், உங்கள் தூக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல் காத்திருக்கிறது. அமானுஷ்யம் முதல் கொடூரமான படுகொலைகள் வரை, திரையில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சியும், ஒரு பயங்கரமான இரவை உங்களுக்கு பரிசளிக்கக்கூடும்.
படுக்கையறை கதவு அருகே சிதைந்த உருவம் வந்துவிடுமோ என்ற பயம் ஒருபுறம் இருக்க, உங்கள் முழு உடலும் அதிக எச்சரிக்கை நிலையில் இருக்கும். நீங்கள் பயத்தில் கத்துவது, வியர்த்துக் கொட்டுவது, உடல் முழுவதும் சிலிர்ப்பது, இதயத் துடிப்பு அதிகரிப்பது போன்றவற்றுக்குப் பிறகு, உங்கள் உடல் எப்படி அமைதியடைந்து தூங்க முடியும்?
திகில் திரைப்படங்கள் (Horror movie) தூக்கத்தில் ஏற்படுத்தும் மோசமான விளைவுகள் குறித்து 'பெட்வே' (Betway) ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு மிகவும் பயங்கரமான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள், திகில் படம் பார்த்த பிறகு, இரவில் சுமார் 26 நிமிடங்கள் விழித்திருந்தனர். ஆனால், அதே சமயம் தியானம் செய்தவர்கள் வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே விழித்திருந்தனர்.
மேலும், உண்மை குற்றச் சம்பவங்கள் (True Crime) தொடர்பான திரைப்படங்களைப் பார்ப்பதன் மூலம், ஒரு இரவுக்கு ஒரு மணிநேரம் வரை தூக்கத்தை இழக்க நேரிடும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
வெறுமனே பயத்தை மட்டும் கொடுப்பதோடு நிற்காமல், திகில் திரைப்படங்கள் (Horror movie) உங்கள் பரிவு நரம்பு மண்டலத்தை (Sympathetic Nervous System) நேரடியாகத் தாக்குகின்றன. நீங்கள் நிஜமான ஆபத்தில் இருக்கும்போது எப்படிச் செயல்படுமோ, அதேபோல் உங்கள் உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் ஹார்மோன்களின் அளவு விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரிக்கிறது.
அதாவது, உங்கள் உடல் முழுவதுமே உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்படுகிறது. இந்த மனநிலை, தூக்கத்தில் உங்களுக்கு தேவையான அமைதிக்கும் ஓய்வுக்கும் முற்றிலும் எதிரானது.
திகில் படங்களைப் பார்த்த பிறகும் சிலரால் நிம்மதியாகத் தூங்க முடிவது ஆச்சரியம்தான். ஒரு கோட்பாட்டின் படி, இந்த திகில் சூழலுக்குப் பிறகும் ஒருவரால் இலகுவாகத் தூங்க முடிந்தால், அவர்களுக்கு லேசான உளப்பிணிப் போக்குகள் (Psychopathic tendencies) இருக்கலாம். என்றாலும், இது வெறும் ஒரு குறைந்த அளவிலான யூகமே.
அதிக உணர்ச்சிவசப்படுபவர்களாகவோ அல்லது ஏற்கனவே தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்களாகவோ இருந்தால், திகில் திரைப்படங்கள் (Horror movie) உங்களுக்கு நிச்சயம் வேண்டாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)