

சிலரது காயங்கள் திறந்த நிலையில் இருந்துக் கொண்டு எளிதில் ஆறாமல் நீண்ட காலமாக இருக்கின்றன. பொதுவாக தீவிர நீரிழிவு நோயாளிகளுக்கு காயங்கள் (Diabetic Foot Ulcer) எளிதில் ஆறாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதற்கு தீர்வு எப்போது கிடைக்கும் என்று நீண்ட காலமாக நீரிழிவுநோயாளிகள் காத்திருக்கின்றனர். உலகளவில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருப்பதால், இந்த விஷயத்தில் இந்தியா தான் அதிகப் பாதிப்படைகிறது. ஆனால், இதற்கானத் தீர்வை முதலில் சிங்கப்பூர் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைமையில் ஒரு சர்வதேச ஆராய்ச்சிக் குழு, நீரிழிவு நோயாளிகளின் தீராத பிரச்சனையான காயங்களை (Diabetic Foot Ulcer) ஆற்றும் வழியினைக் கண்டுபிடித்துள்ளது. இதில் சாதரணக் காயங்கள் மற்றும் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட காயங்களும் அடங்கும். நீண்டகாலமாக ஆறாத காயங்கள், சர்வதேச அளவில் வளர்ந்து வரும் ஒரு சுகாதாரப் பிரச்சனையாகும். ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் சுமார் 18.6 மில்லியன் மக்கள் நீரிழிவு கால் புண்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
சிங்கப்பூரில் வயதானவர்கள் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்களிடையே நீரிழிவு கால் புண்கள் மிகவும் சாதாரணமாகி வருகின்றன. நீரிழிவு கால்புண் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 16,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு தங்கள் வாழ்நாளில், ஆறாத கால் புண் ஏற்படலாம். தொடர் தொற்றுகள் காயத்தை மோசமாக்கி ஆறாத நிலைக்கு கொண்டு சென்று விடுகின்றன. இந்த ஆறாத காயங்கள், கால்கள் துண்டிக்கப்பட ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றன.
நீரிழிவு கால் புண்கள் போன்ற நாள்பட்ட காயங்களில் பெரும்பாலும் 'என்டோரோகோகஸ் ஃபேகாலிஸ்' என்ற பாக்டீரியா காணப்படுகிறது. இந்த பாக்டீரியா தொடர் தொற்றினை உருவாக்கி காயத்தினை ரணமாக்கி விரைவில் ஆற விடாமல் செய்கிறது. இந்த பாக்டீரியா ஆண்டிபயாடிக் எதிர்ப்பை உருவாக்கி புண்ணின் மீது ஆறாத ஒரு சரும அடுக்கை சேர்க்கிறது. இவை மேலே இருப்பதால், பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல மருந்துகளால் காயத்தினை ஆற்ற முடிவதில்லை. இதனால் புண் பெரிதாக மாறுவதை கட்டுப்படுத்துவது சவாலாகிறது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் "நீரிழிவு கால் புண்களுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம்; இதனால், உறுப்பு துண்டிக்கப்படும் அபாயம் அதிகரிக்கிறது." என்று கண்டறிந்தனர். இந்த காரணங்களை மருத்துவர்கள் நீண்ட காலமாக அறிந்திருந்தாலும், அதற்கான முடிவினை கண்டறியவில்லை.
நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின், உயிரி அறிவியல் துறையைச் சேர்ந்த குய்லூம் திபோ மற்றும் ஜெனீவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிம்பர்லி க்லைன் ஆகியோர் தலைமையில் புதிய ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் ஆறாத கால் புண்கள் மீது ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் கேட்டலஸ் ரசாயனத்தை தடவி சோதனை செய்தனர். இந்த ரசாயனங்கள் வினைபுரிந்து இயற்கையாக ஆக்சிஜனேற்றிகளை உருவாக்கி, காயத்தின் மீது பாக்டீரியாக்களால் உருவாக்கப்பட்ட புண் அடுக்குகளை நீக்குகின்றன.
ஹைட்ரஜன் பெராக்சைசடு மற்றும் கேட்டலஸ் ஆக்சிஜனேற்றிகள் தனது வேதியியல் பண்புகளை வெளிப்படுத்தி, காயத்தினை விரைவாக ஆற்றும் செயல்முறைகளை ஊக்குவிக்கின்றன. ஆண்டிபயாடிக் எதிர்ப்பு என்டோரோகோகஸ் ஃபேகாலிஸ் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுகளை செயலிழக்க வைக்கிறது. இந்த முறையில் அது பாக்டீரியாவை அழிக்காமல், அதன் செயல் திறனை முற்றிலும் தடுத்து விடுகிறது.
வரும் காலத்தில் ஆறாத காயத்தினை குணப்படுத்த கேட்டலேஸ் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் கலந்த மருந்துகள் பயன்பாட்டிற்கு வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, கேட்டலேஸ் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் பரவலாகப் மனிதர்களிடம் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், இந்த செயல்முறை ஆராய்ச்சியிலிருந்து மருத்துவ பயன்பாட்டிற்கு வேகமாக வரும். இதனால், நீரழிவு நோயினால் ஆறாத புண்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)