

நம்மில் பலருக்கும் சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துவிட்டுச் சட்டென்று எழும்போதோ அல்லது படுக்கையிலிருந்து காலையில் எழுந்திருக்கும்போதோ தலை சுற்றி உலகம் ஆடுவது போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும். கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போலவும், கால்கள் பூமியில் நிற்காமல் தள்ளாடுவது போலவும் தோன்றும் அந்தத் தருணத்தை நாம் அனைவரும் கடந்திருப்போம்.
பெரும்பாலும் இதை நாம் வெயில் காலம் என்றோ அல்லது சரியாகச் சாப்பிடவில்லை என்றோ நினைத்துச் சாதாரணமாகக் கடந்துவிடுகிறோம். ஆனால், அடிக்கடி இவ்வாறு நிகழ்வது சாதாரண விஷயம் அல்ல என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது நம் உடலில் உள்ள ரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாறுபாட்டை உணர்த்தும் ஒரு முக்கியமான அறிகுறியாகும். இதை மருத்துவத் துறையில் ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன் (Orthostatic Hypertension) என்று அழைக்கிறார்கள்.
புவிஈர்ப்பு விசை Vs ரத்த ஓட்டம்:
நாம் உட்கார்ந்திருக்கும்போதோ அல்லது படுத்திருக்கும்போதோ நமது உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆனால் நாம் திடீரென எழுந்து நிற்கும்போது, பூமியின் புவிஈர்ப்பு விசையானது நமது உடலில் உள்ள ரத்தத்தை கால்களை நோக்கி இழுக்கிறது. இதனால் மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்தத்தின் அளவு மற்றும் வேகம் குறைகிறது.
வழக்கமாக, நமது நரம்பு மண்டலம் இந்த மாற்றத்தை உடனே உணர்ந்து, இதயத்தைத் துரிதமாகச் செயல்பட வைக்கும். இதயம் வேகமாகத் துடித்து, ரத்தக் குழாய்களைச் சுருக்கி, மூளைக்குத் தேவையான ரத்தத்தை மேலேற்றி அனுப்பும். இந்தச் செயல்பாடு சரியாக நடக்காதபோது அல்லது தாமதமாகும் போதுதான் ரத்த அழுத்தம் குறைந்து நமக்குத் தலைச்சுற்றல் ஏற்படுகிறது.
மயக்கத்திற்குப் பின்னால் உள்ள ஆபத்து!
இந்தத் தலைச்சுற்றலுக்குப் பல காரணங்கள் உள்ளன. உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாதது மிக முக்கியமான காரணமாகும். மேலும் ரத்த சோகை உள்ளவர்களுக்கும், நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்தத் தொந்தரவு அதிகம் இருக்கும். வயதானவர்களுக்கு இயற்கையாகவே உடலின் அனிச்சைச் செயல்கள் வேகம் குறைந்திருக்கும் என்பதால், அவர்கள் அடிக்கடி இந்தப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
சமீபத்திய ஆய்வுகள் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளன. அதாவது, நடுத்தர வயதில் இப்படி அடிக்கடி ரத்த அழுத்தம் குறைவது, பிற்காலத்தில் டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய் வருவதற்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தடுக்கும் முறைகள்!
இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடச் சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களே போதுமானது. முதலாவதாக, படுக்கையிலிருந்து எழும்போது அவசரப்பட்டுத் துள்ளிக்குதித்து எழக்கூடாது. மெதுவாக எழுந்து, கட்டிலின் ஓரத்தில் சில நொடிகள் அமர்ந்து, கால்களைத் தரையில் ஊன்றி, ரத்த ஓட்டம் சீரான பிறகு நிதானமாக எழுந்து நடக்க வேண்டும். இது மூளைக்கு ரத்தம் செல்ல அவகாசம் கொடுக்கும்.
இரண்டாவதாக, நாள் முழுவதும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். உடலில் நீர்ச்சத்து மற்றும் உாப்புச்சத்து சமநிலையில் இருந்தால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
எப்போதாவது தலை சுற்றினால் பரவாயில்லை, ஆனால் அடிக்கடி இந்த நிலை ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது கட்டாயமாகும். ஏனெனில், மயக்கம் வந்து கீழே விழுந்தால் கை, கால் எலும்பு முறிவு அல்லது தலையில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக முதியவர்கள் குளியலறையிலோ அல்லது படிக்கட்டுகளிலோ இருக்கும்போது தலை சுற்றினால் அது பெரும் விபத்தில் முடியலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)