இரவில் இரண்டு மூன்று முறை சிறுநீர் கழிக்க நேர்ந்தால் உஷார்! மருத்துவர்கள் எச்சரிக்கை!

படுக்கைக்கு முன் நீர் பருகுதல், சர்க்கரை நோய், புரோஸ்டேட் வீக்கம் மற்றும் மருத்துவரை அணுக வேண்டிய அவசர அறிகுறிகள்.
Frequent Night Urination | அடிக்கடி சிறுநீர் கழித்தல்
Frequent Night Urination | அடிக்கடி சிறுநீர் கழித்தல்Image Credit: ChatGPT
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

இரவில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிப்பது நம் தூக்கத்தை தொந்தரவு செய்யும். பலர் இதனை வயதானதன் அறிகுறி என்றோ, மன அழுத்தத்தின் ஒரு பகுதி என்றோ கருதி புறக்கணிக்கிறார்கள். ஆனால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது பெரும்பாலும் மருத்துவ கவனிப்பு தேவைப்படும் ஒரு அடிப்படை உடல்நல பிரச்சனையைக் குறிக்கிறது. இரவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை சிறுநீர் கழிக்க எழுந்திருப்பது மருத்துவ மொழியில் 'நோக்டூரியா' (Nocturia) என்று அழைக்கப்படுகிறது. இது நம் தூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். இதற்கு நம் வாழ்க்கை முறை பழக்கங்கள் முதல் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் வரை பல காரணங்கள் உள்ளன.

சிறுநீர் கழித்தல் என்பது கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவங்களை அகற்ற உதவும் ஒரு இயற்கையான உடல் செயல்பாடாகும். இரவில் தடையற்ற தூக்கத்தை அனுமதிக்க உடல் பொதுவாகவே குறைவான சிறுநீரை உற்பத்தி செய்கிறது. இந்த சமநிலை தொந்தரவு செய்யும்போது, இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் மோசமான தூக்கத்திற்கு வழி வகுக்கிறது.

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க 5 முக்கிய காரணங்கள்:

படுக்கைக்கு செல்வதற்கு முன் அதிக திரவம் குடிப்பது:

இரவு நேரங்களில் தூங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அதிக அளவில் தண்ணீர், காபி, டீ அல்லது மது அருந்துவது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும். காஃபின் மற்றும் ஆல்கஹால் சிறுநீர்ப்பையைத் தூண்டி அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும்.

சர்க்கரை நோய் (Diabetes):

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது, அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்ற உடல் அதிக சிறுநீரை உற்பத்தி செய்கிறது. கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோயால் உடலில் அதிக சிறுநீர் உற்பத்தியாகி பகல் மற்றும் இரவு ஆகிய இரு நேரங்களிலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும்.

சிறுநீர் பாதை தொற்று (UTI):

சிறுநீர்ப்பை அல்லது சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று சிறுநீர்ப்பையில் எரிச்சலை ஏற்படுத்தி அடிக்கடி சிறுநீர் வரும் உணர்வு ஏற்படும்.

புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் (Prostate Enlargement):

ஆண்களுக்கு வயதாகும் பொழுது புரோஸ்டேட் சுரப்பி பெரிதாகி சிறுநீர்ப்பையை அழுத்துவதால் முழுமையாக சிறுநீர் வெளியேறாமல் அடிக்கடி இரவில் எழுந்து சிறுநீர் கழிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

மருந்துகளின் தாக்கம் அல்லது இதயப் பிரச்சனைகள்:

உயர் ரத்த அழுத்தம் அல்லது இதய நோய்களுக்காக எடுத்துக் கொள்ளப்படும் சில மருந்துகள் குறிப்பாக சிறுநீர்ப் பெருக்கிகள் (Diuretics/Water pills) உடலில் இருந்து அதிக நீரை வெளியேற்றி இரவில் சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கக் காரணமாகலாம்.

Frequent Night Urination
Frequent Night Urination

தூக்கத்தில் மூச்சுத்திணறல் (Sleep Apnea) போன்ற பிரச்சனைகள் தூக்கத்தைக் கலைப்பதோடு, சிறுநீர் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

வயதாகும் பொழுது இரவில் சிறுநீர் உற்பத்தியைக் குறைக்கும் ஆன்டி-டையூரிடிக் ஹார்மோன்(ADH) சுரப்பு குறையலாம். மேலும் சிறுநீர்ப்பையின் கொள்ளளவும் குறைய வாய்ப்புள்ளது. அத்துடன் சிறுநீர்ப்பை தசைகள் தன்னிச்சையாக சுருங்குவதால், சிறுநீர்ப்பை நிரம்புவதற்கு முன்பே திடீரென சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
தினமும் நாம் சாப்பிடும் உப்பில் இத்தனை ஆபத்துகள் இருக்கிறதா? உஷார்!
Frequent Night Urination | அடிக்கடி சிறுநீர் கழித்தல்

கர்ப்பிணி பெண்களுக்கு கருப்பை வளரும் பொழுது சிறுநீர்ப்பையில் அழுத்தம் ஏற்படுவதால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இப்படிப் பல காரணங்களால் சிறுநீர் கழிக்க நேரிடலாம்.

மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

  • இரவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை தொடர்ந்து எழுந்திருக்க நேரிட்டால்.

  • சிறுநீர் கழிக்கும்போது வலியோ அல்லது எரிச்சலோ இருந்தால்.

  • சிறுநீரில் ரத்தம் வெளியேறினால்

  • அதிகப்படியான தாகம், உடல் சோர்வு அல்லது காரணம் இன்றி உடல் எடை குறைதல் இருந்தால்.

  • திரவம் குடிப்பதைக் குறைத்தும் இதிலிருந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் போனால்.

இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தைக்குக் காய்ச்சலா? இந்த 4 ஆபத்தான தொற்றுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
Frequent Night Urination | அடிக்கடி சிறுநீர் கழித்தல்

Reference: