கை கால் மரத்து போவதற்கான 6 காரணங்கள் மற்றும் சோதனைகள்!

Numbness | மரத்துப்போகும் உணர்வு
Numbness | மரத்துப்போகும் உணர்வு
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

கை மற்றும் கால்களில் அடிக்கடி அல்லது தொடர்ந்து மரத்துப்போகும் உணர்வு (Numbness) ஏற்படுவது நரம்பு மண்டலத்தில் ஏதோ ஒரு பாதிப்பு உள்ளது என்பதற்கான முக்கிய அறிகுறியாகும். கை, கால் மரத்துப் போவதற்கு முக்கிய காரணங்கள் மற்றும் அதைக் கண்டறியும் சோதனைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.

கை கால் மரத்து போவதற்கான முக்கிய 6 காரணங்கள்:

1. நீரிழிவு நோய் (Diabetic Neuropathy):

ரத்தத்தில் சர்க்கரை அளவு நீண்ட காலம் அதிகமாக இருக்கும் பொழுது, அது புற நரம்புகளை (Peripheral Nerves) சேதப்படுத்துகிறது. இது பொதுவாக பாதங்களில் தொடங்கி பின்னர் கைகளுக்கும் பரவுகிறது.

2. நரம்பு நசுங்குதல் (Nerve Compression):

தவறான உடல் தோரணை, மணிக்கட்டில் நரம்பு அழுத்தம் (Carpal Tunnel Syndrome) அல்லது முழங்கை நரம்பு அழுத்தம் ஆகியவற்றால் தற்காலிகமாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ மரத்துப் போகுதல் ஏற்படலாம். கழுத்து அல்லது இடுப்புப் பகுதியில் நரம்பு நசுங்குவதால் கூட (Sciatica/Slipped Disc) கை, கால்கள் மரத்துப் போகலாம்.

3. வைட்டமின் குறைபாடு:

நரம்புகளின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு வைட்டமின் பி12 மிகவும் அவசியம். இதன் குறைபாடு நரம்புப் பாதையை பாதித்து, கை, கால்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். நரம்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் B12 மற்றும் வைட்டமின் E குறைபாடு ஏற்படுவதன் காரணமாக கை கால் மரத்துப் போவதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளது.

4. ரத்த ஓட்டக் குறைபாடு:

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வது, கைகளை அமுக்கித் தூங்குவது அல்லது கை கால்களுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் சுருக்கம் அல்லது அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டம் குறைந்து தற்காலிக உணர்வின்மையை, மரத்துப் போவதை ஏற்படுத்தலாம்.

5. தைராய்டு குறைபாடு (Hypothyroidism):

தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறைவாக இருக்கும் பொழுது உடலில் நீர் தேங்கி, நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி மரத்துப்போகச் செய்யும்.

6. பக்கவாதம் (Stroke):

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதால் திடீரென உடலின் ஒரு பக்கக் கை மற்றும் கால் மரத்துப்போதல் உண்டாகும். இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய அவசர நிலையாகும்.

கை கால் மரத்து போவதை கண்டறியும் சோதனைகள்:

எந்தக் காரணத்தால் மரத்துப் போகுதல் ஏற்படுகிறது என்பதை நரம்பியல் நிபுணர் (Neurologist) சோதனைகள் மூலம் கண்டறிவார்.

Numbness | மரத்துப்போகும் உணர்வு
Numbness | மரத்துப்போகும் உணர்வு

ரத்தப் பரிசோதனை (Blood Tests):

ரத்தத்தில் சர்க்கரை அளவு (HbA1c), வைட்டமின் B12 அளவுகள் மற்றும் தைராய்டு (TSH) ஹார்மோன் அளவுகள் மற்றும் சிறுநீரக செயல்பாடு ஆகியவற்றை சரிபார்க்க இது செய்யப்படுகிறது.

நரம்பு கடத்தல் சோதனை (NCV - Nerve Conduction Velocity):

நரம்புகள் மின் தூண்டல்களை எவ்வளவு வேகமாகவும் துல்லியமாகவும் கடத்துகின்றன என்பதை அளவிட்டு நரம்பு சேதமடைந்து உள்ளதா என்பதைக் கண்டறியும் சோதனை இது.

இ.எம்.ஜி (EMG - Electromyography):

தசைகள் மற்றும் அவற்றை இயக்கும் நரம்புகளின் மின் செயல்பாட்டைப் பரிசோதித்து, பாதிப்பு நரம்பிலா அல்லது தசையிலா என்பதை உறுதி செய்ய இது உதவுகிறது.

எம்.ஆர்.ஐ ஸ்கேன் (MRI Scan):

மூளை அல்லது தண்டுவடத்தில் ஏதேனும் நரம்பு அழுத்தம், வட்டு விலகல் (Slip Disc) அல்லது பக்கவாத பாதிப்புகள் உள்ளதா என்பதைத் துல்லியமாக பார்க்கவும், கழுத்து அல்லது முதுகுத்தண்டில் நரம்புகள் நசுக்கப்பட்டுள்ளதா (Disk Herniation) என்பதைக் கண்டறிவதற்கும் இந்த சோதனை உதவும்.

இதையும் படியுங்கள்:
சாப்பிட்ட உடனே 10 நிமிடம் நடந்தால் இத்தனை நன்மைகளா?
Numbness | மரத்துப்போகும் உணர்வு

மருத்துவ நரம்பியல் பரிசோதனை (Clinical Neurological Exam):

மருத்துவர் உங்களை தொடுதல் உணர்வு, தசை வலிமை மற்றும் நரம்பு அனிச்சைச் செயல்களை நேரடியாக பரிசோதிப்பது.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (Ultrasonography):

கார்பல் டன்னல் சிண்ட்ரோம் போன்ற மணிக்கட்டு நரம்பு அழுத்தப் பிரச்சனைகளை எளிய முறையில் கண்டறிய தசைநார் மற்றும் நரம்புகளை ஸ்கேன் செய்து பார்ப்பது.

எப்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் தெரியுமா?

திடீரென உடலின் ஒரு பக்கம் மட்டும் கை கால் மரத்துப்போனால், மரத்துப்போகும் உணர்வுடன் திடீரென பேசுவதில் தடுமாற்றம், பேச்சுக் குளறுதல், முகக்கோணல், ஒரு பக்கக் கை கால் பலவீனம் அல்லது கடுமையான தலைவலி, தலைசுற்றல், பார்வை குறைபாடு ஏற்பட்டால் அது பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

உணர்வின்மை படிப்படியாகக் காலில் இருந்து மேல்நோக்கி உடலுக்குப் பரவினால் சுய மருத்துவம் எதுவும் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க பெண்கள் தினமும் சாப்பிட வேண்டிய அற்புத உணவுகள்!
Numbness | மரத்துப்போகும் உணர்வு

Reference:

logo
Kalki Online
kalkionline.com