சாப்பிட்ட உடனே 10 நிமிடம் நடந்தால் இத்தனை நன்மைகளா?

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது முதல் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்வது வரை நடப்பதால் கிடைக்கும் பலன்கள்.
Dinner and walk | நடைப்பயிற்சி
Dinner and walk | நடைப்பயிற்சி
எஸ்.விஜயலட்சுமி

விஜி ரவி என்கிற பெயரில் இதுவரை 40 சிறுகதைகள், 55 ஒரு பக்க கதைகள் 17 புத்தக விமர்சனங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகளை கல்கி, மங்கையர் மலர், அவள் விகடன் பெண்கள் மலர, குங்குமம் தோழி போன்ற பிரபல இதழ்களில் எழுதியுள்ளார். மங்கையர் மலர், வைகை இணைய இதழ் அனிச்சம், ஆனந்தசந்திரிகை மின்னிதழ் சங்கப் பலகை முகநூல் குழுமம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். தோனி எஃப் எம் ல் வாரம் ஒரு முறை கதை சொல்கிறார். கல்கி இணைய இதழில் தன்னம்பிக்கை, குடும்பம் வாழ்வியல், ஆரோக்கியம் ஆன்மீகம், ஃபேஷன், உளவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

அலுவலகங்களில் நாள் முழுவதும் உட்கார்ந்து பணிபுரியும் சூழல் பலருக்கும் உண்டு. என்னதான் நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் மேற்கொண்டாலும், நாள் முழுவதும் அமர்ந்து வேலை செய்வதால் உடல் பருமன், இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல் மற்றும் அதன் விளைவாக சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன. தினமும் ஏதாவது ஒரு வேளையில், சாப்பிட்டதும் 10 நிமிடங்கள் மட்டும் நடைப்பயிற்சி செய்வதால் ஏராளமான நன்மைகள் ஏற்படும் என்று நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல்:

உணவு அருந்திய பின்பு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது இயல்பான ஒன்று. இதைத் தடுத்து சர்க்கரையைச் சீரான அளவில் பராமரிக்க உணவுக்குப் பிந்தைய நடைபயிற்சி பெரிதும் உதவுகிறது. ஆய்வின்படி, டைப்-2 நீரிழிவு நோயாளிகள் ஒரே நேரத்தில் அரை மணி நேரம் நடப்பதை விட, உணவிற்குப் பிறகு 10 நிமிடங்கள் நடப்பது அவர்களது உணவுக்குப் பிந்தைய இரத்த சர்க்கரை அளவை மிகச் சிறப்பாகக் குறைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, இரவு உணவிற்குப் பிறகு நடப்பது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது.

தசைகளின் குளுக்கோஸ் நுகர்வு:

நாம் உண்ணும் உணவு செரிமானமாகி குளுக்கோஸாக மாறும்போது, அதை உடலின் தசைகள் திறம்படப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சாப்பிட்ட பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் வரை மிதமான வேகத்தில் நடப்பது கூட இரத்தத்தில் இன்சுலின் மற்றும் சர்க்கரை அளவின் திடீர் உயர்வைத் தடுக்கிறது. நாம் நடக்கும்போது தசைகள் சுருங்கி விரிந்து இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை இன்சுலினின் தேவையின்றி நேரடியாக உறிஞ்சிக் கொள்கின்றன. இதனால் கணையத்திற்கு அதிக சுமை ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, இன்சுலின் உணர்திறன் அதிகரிக்கிறது.

Walking | நடைப்பயிற்சி
Walking | நடைப்பயிற்சி

செரிமானம் மற்றும் வயிறு உப்பசம் குறைதல்:

உணவு உண்ட பின் பலருக்கும் ஏற்படும் முக்கியப் பிரச்சினை செரிமானமின்மையும் வயிறு உப்பசமும் ஆகும். இவர்கள் உணவுக்குப் பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் மிதமான நடைபயிற்சி மேற்கொண்டால், அவர்களின் குடல் அசைவுகள் சீராகி செரிமானப் பிரச்சினைகள் குறைகின்றன. நடைபயிற்சி செரிமான மண்டலத்தைத் தூண்டி, உணவு எளிதாகக் குடலுக்குள் நகர உதவுகிறது. இதனால் நெஞ்செரிச்சல் மற்றும் வாயுத் தொல்லைகள் பெருமளவில் தவிர்க்கப்படுகின்றன.

இதய ஆரோக்கியம்:

உணவுக்குப் பிந்தைய சிறு நடைபயிற்சி இதயத்திற்கும் நன்மை செய்கிறது. நடக்கும்போது இரத்த அழுத்தம் சீராகிறது. உணவு உண்டபின் நடப்பது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தமனிகளின் அழுத்தத்தைக் குறைக்கிறது. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்தைப் பெருமளவு குறைக்கிறது. தொடர்ச்சியாக இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கும் போது இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து இதயம் வலுவாகிறது.

இதையும் படியுங்கள்:
மழை, குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகரிக்க இதுதான் காரணமா? மருத்துவர் தரும் எளிய தீர்வுகள்!
Dinner and walk | நடைப்பயிற்சி

யாரெல்லாம் உணவுக்குப் பிறகு நடக்கக் கூடாது?

உணவுக்குப் பிறகு மிதமான நடைபயிற்சி பெரும்பாலானோருக்கு நன்மை என்றாலும், குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். குறிப்பாக, மாரடைப்பு அல்லது கடுமையான இதயச் செயலிழப்பு உள்ளவர்கள் மருத்துவரின் வழிகாட்டுதல் இன்றி சாப்பிட்ட உடனே நடப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், கடுமையான மூட்டுவலி, கீல்வாதம் அல்லது கால் நரம்பு பிரச்சினைகள் உள்ளவர்கள், அதிக நேரம் நடப்பது வலியை அதிகரிக்கும் என்பதால் மருத்துவரின் அறிவுரைப்படி சிறிய அளவில் மட்டுமே நடக்க வேண்டும்.

வயிற்றுப் பகுதியில் சமீபத்தில் பெரிய அறுவை சிகிச்சைகள் செய்தவர்களும், மருத்துவர் இயல்பு நிலைக்குத் திரும்ப அனுமதிக்கும் வரை இத்தகைய நடைப்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும். உணவுக்குப் பின் செய்யப்படும் நடைபயிற்சி என்பது வேகமாகச் செய்யும் உடற்பயிற்சி அல்ல, மாறாக மிக மெதுவான மற்றும் மிதமான நடை மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோயாளிகளா நீங்கள்? பாதங்களை இப்படிப் பாதுகாக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து!
Dinner and walk | நடைப்பயிற்சி

Reference:

logo
Kalki Online
kalkionline.com