நாட்கள் வேகமாக கடந்து கொண்டிருக்க நம் வயதும் ஏறிக் கொண்டே செல்கிறதே!
இந்த கவலை எல்லோருக்கும் இருக்கும் ஒன்றுதான். நாட்கள் செல்வதை எப்படி தடுக்க முடியாதோ, அதேபோல் நம் வயது ஏறுவதையும் நம்மால் தடுக்கவே முடியாது. சரி கவலை கொள்ளாதீர்கள்.... இருக்கும் காலத்தில் இளமையாகவும் சந்தோசமாகவும் இருக்கலாமே!
நான் கூறிய இந்த இளமையை அடைய பலர் இயற்கை வைத்தியம், சாப்பிடும் உணவுகள் என அனைத்திலும் கவனம் செலுத்தி அவர்களுடைய வெளித் தோற்றத்தை இளமையாக காட்டிக் கொள்கின்றனர் அல்லவா? இந்த இளமை தோற்றம் மட்டும் இருந்தால் போதுமா? உங்கள் உள் தோற்றம் இளமையாக வேண்டாமா?
நம் உடல் உறுப்பு சரியாக செயல்பட முக்கிய பங்களிப்பது நமது மூளை தான். அந்த மூளை சரியாக இருந்தால் மட்டுமே நாமும் சரியான முறையில் செயல்பட முடியும். எனில், அந்த மூளையை நாம் சரியாக பார்த்துக்கொள்வது அவசியம் அல்லவா? மூளையை எப்படி பார்த்து கொள்வது? மூளையை சரியான முறையில் பார்த்துக் கொள்ள நாம் உண்ணும் உணவிலும், நம் பழக்கவழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மூளையினை இளமையாக வைத்துக்கொள்ள இந்த ஊட்டச்சத்துகள் முக்கிய பங்கு வகிக்கும்.
வால்நட்
அக்ரூட் பருப்புகள் என்று அழைக்கப்படும் வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது மூளையின் ஆரோக்கியத்தை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆளி விதைகள்
ஆளி விதைகளிலும் ஒமேகா-3, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகமாக உள்ளது. இவை மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு அதிக பயனளிக்கின்றன.
அவகேடோ
அவகேடோ பழத்தில், மூளையின் செயல்பாடு மற்றும் நினைவாற்றலை ஆதரிக்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இந்த பழத்தை சாலட் உள்ளிட்டவைகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும் போது மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
கீரைகள்
மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தினமும் கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில், கீரைகளில் வைட்டமின் B9 அதிகமாக உள்ளது. இது அறிவாற்றல் குறைவை தாமதப்படுத்த உதவியாக இருக்கும்.
டார்க் சாக்லேட்
உயர்தர டார்க் சாக்லேட்டில் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கும் (70% கோகோ அல்லது அதற்கு மேல்) ஃபிளாவனாய்டுகள் உள்ளன. டார்க் சாக்லேட் உட்கொள்வதால் ஞாபக சக்தி, மூளை செயல் திறன், ஆற்றல் ஆகியவை அதிகரிக்கும். மூளையை சுறுசுறுப்பாக வைக்கவும் உதவியாக இருக்கும்.
இது போன்ற உணவுகளை நீங்கள் அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு மூளையும் இளமையாக இருக்கும். ஆனால் இந்த உணவுகளை மட்டும் சரியாக உட்கொண்டால் போதாது, நேரத்திற்கு தூங்குவது, தண்ணீர் குடிப்பது, மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது என உங்கள் தினசரி பழக்கவழக்கங்களும் இதற்கு மிக அவசியம்.