

பொதுவாக பருவமடைதல் என்பது வாழ்க்கையில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் விரைவான வளர்ச்சி ஏற்பட்டு இறுதி உயரத்தை அடையும் ஒரு காலகட்டமாகும். மேலும் அக்காலத்தில் எலும்புகள் விரைவாக உருவாகி, எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, இரு பாலினருக்கும் தசை அடர்த்தியும் பாலுறுப்புகளின் வளர்ச்சியும் அதிகரிக்கின்றன. இந்த நேரத்தில் தேர்வு செய்யும் தவறான உணவுகள் இந்த செயல்முறைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் பருமனுக்கும் வழிவகுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
பருவ வயதில் பொதுவாக இருபாலருக்கும் பின்வரும் அம்சங்கள் இன்றியமையாதவை
வயது மற்றும் எடைக்கு ஏற்ற கலோரி உட்கொள்ளல். ஒரு ஊட்டச்சத்து நிபுணர் இதற்கு வழிகாட்டுவது சிறந்தது.
பருவ வயதில் தசை வளர்ச்சிக்கு புரதம் இன்றியமையாதது. அது முட்டை, கோழி இறைச்சி, மீன், கொழுப்பற்ற இறைச்சி, கொட்டைகள், விதைகள், பயறு வகைகள் மற்றும் சோயா பொருட்கள் போன்ற மூலங்களிலிருந்து கிடைக்கும்.
கால்சியம் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. உணவில் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், ப்ரோக்கோலி, டோஃபு, கொட்டைகள் மற்றும் விதைகள் இடம்பெற வேண்டும்.
விரைவான வளர்ச்சி, தசை வளர்ச்சி மற்றும் இரத்த அளவு ஆகியவற்றிற்கு இரும்புச்சத்து இன்றியமையாதது. இரும்புச்சத்து நிறைந்த நல்ல ஆதாரங்களில் பருப்பு வகைகள், செறிவூட்டப்பட்ட தானியங்கள், கீரை வகைகள், கோழி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி ஆகியவை அடங்கும்.
ஃபோலேட், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை பெறுவதற்கு, பழங்களையும் கீரைகளையும் தவறாமல் பயன்படுத்துவது நல்லது.
சரி.. பருவ வயதில் அடியெடுத்து வைக்கும் ஆண் பிள்ளைகளுக்கு உணவு விஷயத்தில் தனிகவனம் தேவையா என்றால் நிச்சயமாக தேவை என்பதே பதில். அடுத்த தலைமுறைக்கான உயிரணுக்களின் உற்பத்தி உடலில் ஆரம்பிக்கும் பருவத்தில் நுழையும் ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவில் தாய்மார்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்கிறது மருத்துவம்.
12 வயதில் துவங்கும் உடல் மற்றும் மன மாற்றங்கள் 18 வயது வரை தொடரும் என்பதால் அந்த வயதுகளில் சமச்சீர் சத்துக்கள் கொண்ட ஆரோக்கியமான உணவு அவசியம். ஏனெனில் அச்சமயம் நிகழும் பிள்ளைகளின் உடல் வளர்ச்சி, தசை வலிமை மற்றும் எலும்பு உறுதிக்கு ஊட்டச்சத்து மிகுந்த சமச்சீரான உணவு மிகவும் அவசியமாகும்.
இந்த காலகட்டத்தில் ஆண் பிள்ளைகளுக்கு அதிக பசி ஏற்படும். அவர்கள் பருவமடையும் வளர்ச்சியே இதற்கான காரணம். 12 வயதில் சுமார் 40 முதல் 50 கிலோ எடையுடன் இருப்பவர்கள் அடுத்த ஆறு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 70 முதல் 80 கிலோ எடையை அடைவார்கள். அதே சமயம் உயரத்திலும் மாற்றம் ஏற்படும். ஐந்து அடியில் இருந்து சுமார் ஆறு அடி உயரத்தை எட்டுவார்கள்.
உடல் வளர்ச்சிகளுடன் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும் என்பதால் அதிக கவனம் வேண்டும். மேலும் இந்தப் பருவத்தில் சரியான ஊட்டச்சத்து கிடைக்கத் தவறினால், அவர்களின் முழுமையான வளர்ச்சி பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதுடன் பின்னாளில் மலட்டுத்தன்மை கூட ஏற்படும் வாய்ப்பு உருவாகலாம்.
இனி இந்த பருவத்தில் அவசியம் ஆண் பிள்ளைகளுக்கு தர வேண்டிய உணவுகள் குறித்து காண்போம்
குறிப்பாக தசை வளர்ச்சிக்கும் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்கவும் தேவையான புரதங்கள் நிறைந்த உணவுகளான பாசிப்பருப்பு, சுண்டல், மொச்சை போன்ற பருப்பு வகைகள், பால், தயார், சீஸ் (பாலாடைக்கட்டி), முட்டை, மீன் மற்றும் கோழி இறைச்சி.
எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்பெற உதவும் கால்சியம் மற்றும் வைட்டமின் டி (Calcium & Vitamin D) அடங்கிய உணவுகளான பால் (தினமும் 300 - 500 மில்லி), தயிர், பன்னீர், ராகி, எள்ளு மற்றும் கீரைகள்.
உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து தரும் பழங்கள் மற்றும் காய்கறிகளான கேரட், கீரை வகைகள், இனிப்பு உருளைக்கிழங்கு, ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் இதர பழங்கள்.
நீண்ட நேரம் ஆற்றலைத் தரவும், உடல் இயக்கத்திற்கும் கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் உள்ள முழு தானிய உணவுகளான கம்பு, சோளம், ஓட்ஸ், பார்லி மற்றும் சிவப்பு அரிசி (Brown rice).
மூளை வளர்ச்சிக்கும் ஹார்மோன் உற்பத்திக்கும் உதவும் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நட்ஸ் (Healthy Fats & Nuts) வகைகளான பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை மற்றும் விதைகள்.
விரைவான உடல் வளர்ச்சிக்குத் தேவையான இரத்த அணுக்களை உருவாக்க உதவும் இரும்புச்சத்து (Iron) கொண்ட கீரைகள், உலர் திராட்சை, பேரீச்சம்பழம் மற்றும் பருப்பு வகைகள்.
இப்போது நிச்சயமாக தவிர்க்க வேண்டியவற்றை காண்போம்
பர்கர், பீட்சா போன்ற துரித உணவுகள் (Junk Foods) மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அதிக சர்க்கரை பானங்கள் அடங்கிய செயற்கை குளிர்பானங்கள், பேக்கரி பொருட்கள் மற்றும் அதிகப்படியான சர்க்கரை சேர்த்த உணவுகளைக் குறைக்க வேண்டும்.
உணவுகளில் மட்டுமின்றி தினமும் குறைந்தது 6 முதல் 8 கப் தண்ணீர் குடிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
பெற்றோர் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள் இவை
ஜங்க் உணவை முழுமையாகத் தடை செய்ய வேண்டியதில்லை; ஆனால் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
குளிர்பானங்கள், அதிக சர்க்கரை உள்ள பானங்கள் மற்றும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்கவும்.
'உடல் எடை அதிகரிக்க வேண்டும்' என்று புரோட்டீன் பவுடர் (protein powder) அல்லது துணை உணவுகளை (supplements) மருத்துவ ஆலோசனை இன்றி தானாக கொடுக்க வேண்டாம்.
பருவ வயதில் பசி அதிகரிப்பது இயல்பானது; உணவின் தரத்தையும் அளவையும் மட்டுமே கவனிக்க வேண்டும்.
தினசரி உடற்பயிற்சி/விளையாட்டு மற்றும் போதுமான தூக்கமும் உணவுக்கு இணையாக முக்கியம்.
திடீரென எடை குறைதல், தொடர்ந்து சோர்வு, பசி இல்லாமை அல்லது வளர்ச்சி எதிர்பார்த்த அளவில் இல்லாதது போன்றவை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
குறிப்பாக பருவ வளர்ச்சிக்கு ஏற்ற உணவுத் தேவைகளையும், உடல் பருமனைத் தடுப்பதையும் அறிந்துகொள்ள, உங்கள் உணவியல் நிபுணரிடம் கலந்தாலோசிப்பது எப்போதும் நல்லது.