அரிசியா, சிறுதானியமா? நீரிழிவு நோயாளிகளுக்கு எது நல்லது? 7 முக்கியமான உணவுகள்!

Diabetic diet - நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுமுறை
Diabetic diet - நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுமுறை
பத்மினி பட்டாபிராமன்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2002 லிருந்து 14 வருடங்கள் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் துறையில் வருகைப் பேராசிரியர் பிரபல எழுத்தாளராக பல பத்திரிகைகளில், நூற்றுக் கணக்கான சிறுகதைகள், பேட்டிகள், மருத்துவக் கட்டுரைகள், குறுநாவல்கள் வெளிவந்து பல பரிசுகளைப் பெற்றுள்ளன. அவை புத்தக வடிவிலும் பல தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. சென்னை தொலைக்காட்சியில் பகுதி நேர அறிவிப்பாளராக, தொகுப்பாளராக, 15 வருடங்கள் பணி. சென்னை வானொலி பண்பலையில் இரண்டு வருடங்கள் செய்தி வாசிப்பாளர் மற்றும், நாடக ஆசிரியர். சமூக சேவை இலக்கியம் இரண்டிலும் சிறப்பாக பணி செய்துவரும் உரத்த சிந்தனை அமைப்பின் தலைவர்.

Updated on: 

சரியான உணவு மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம். தெரிந்த செய்திதானே என்று நினைக்காமல்..

Dr. A. Srivatsa, Senior Consultant Physician & Diabetologist
Dr. A. Srivatsa, Senior Consultant Physician & Diabetologist

அடையாரில் உள்ள Sri Clinic & Diabetes Centre Dr. A. Srivatsa, Senior Consultant Physician & Diabetologist என்ன சொல்கிறார் கேட்போமா?

நீரிழிவு நோய் வந்தவர்கள், மிக ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் அல்லது பரம்பரையாக குடும்பத்தில் நீரிழிவு இருந்தால் வர வாய்ப்புள்ளவர்கள் யாகாவாராயினும் எந்த உணவை உட்கொள்வது நல்லது என்பதை அறிந்து கொள்ளலாமா?

Diabetic diet - நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுமுறை
Diabetic diet - நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுமுறை

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஏழு வகையான உணவுகள் சொல்ல முடியுமா டாக்டர்?

நீங்கள் குறைவாக உண்டு வயிற்றைக் காயப் போட வேண்டாம் அல்லது எப்போதுமே உப்புச் சப்பில்லாத ப்ளாங்க் உணவைச் சாப்பிடவேண்டும் என்பதில்லை.

டயட்டில் இருந்தாலும் பிடித்த உணவுகளை, பசியோடு இருக்கிற உணர்வு இல்லாமல் சந்தோஷமாக சாப்பிடலாம்.

டயபடீஸ்க்கு ஏற்ற சத்தான உணவு வகைகள் என்ன என்று தெரிந்து கொண்டால் போதும்.

தானியங்கள்

கம்பு, சோளம், தினை, குதிரைவாலி, சிவப்பரிசி, பிரவுன் அரிசி, சோளம், ராகி, பார்லி, ஓட்ஸ், புழுங்கலரிசி போன்றவற்றை உட்கொள்ளும் போது செரிமானம் மெதுவாக நடப்பதால் ரத்ததில் குளுகோஸ் அளவு கட்டுப்படும்.

நீரிழிவுக் காரர்களுக்கு ஏற்றது, இவை காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும்.

(பொதுவாக ஷுகர், ஸ்டார்ச் அடங்கிய கார்போஹைட்ரேட் உண்வுகள், நாம் உட்கொண்ட ஒரு மணி நேரத்துக்குள் ரத்தத்தில் குளுகோஸாக மாற்றப்பட்டு விடும்)

மற்றோர் வகையான சிம்பிள் கார்போஹைட்ரேட்ஸில், தீட்டப்பட்ட அரிசி, தேன், சக்கரை, வெல்லம், உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்றவை உடனே செரிமானம் ஆகிவிடுவதால் ரத்தத்தில் குளுகோஸ் அளவு அதிகரிக்கும். இவற்றைக் குறைந்த அளவில் சேர்க்கலாம்.

கோதுமை, அரிசி இரண்டிலும் கார்போஹைட்ரேட்ஸ் சம அளவில் தான் இருக்கிறது. எனவே அரிசிக்கு மாற்று, மில்லட்ஸ் என்னும் சிறுதானியங்கள் நல்லது. சிறுதானியங்களில் இருக்கும் நார்ச்சத்து, செரிமானத்தை தாமதப்படுத்துவதால், சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது.

பருப்பு, பயறு வகைகள்

சைவ உணவைப் பொறுத்தவரை, முழு தானிய வகைகள், பருப்புக்கள், இவற்றில் புரதச் சத்தும், நார்ச்சத்தும் இருப்பதால் டயபடிக் காரர்களுக்கு ஏற்ற உணவு.

அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, முழு உளுந்து, மைசூர் பருப்பு, கடலைப் பருப்பு போன்றவற்றை சமைப்பதற்கு முன்னர் சிறிது நேரம் ஊறவைத்தால் செரிமானப் பிரச்னையைத் தடுக்கலாம்.

கொண்டைக் கடலை, காராமணி, தட்டைப் பயறு, பாசிப் பயறு, ராஜ்மா, சுண்டல் போன்றவை கூடு செய்து சாப்பிடும்போது, மெதுவாக செரிமானம் ஆவதோடு வயிறு நிறைந்த உணர்வையும் தருகின்றன.

அசைவ உணவு

லீன் மீட் எனப்படும் சிக்கன், மீன் போன்றவற்றில் புரதச் சத்தும், கொழுப்பும் தேவையான அளவில் இருப்பதால் நீரிழிவு உள்ளவர்கள் உட்கொள்ளலாம்.

ஒமேகா 3 கொண்ட மீன் வகைகள் உண்ணவேண்டும்.

ஆனால், பன்றி, மாட்டு இறைச்சி, சாசேஜ், இறால், நண்டு, மட்டன் போன்றவற்றையும் தவிர்த்தல் நல்லது.

சிக்கன், மீன் இவற்றையும் 50 கிராம் அள்வில் உட்கொள்ளலாம்.

ஈரல், மூளை போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ரெட் மீட் சாப்பிடுவதும் வேண்டாம்.

எதையும் பொரித்து சாப்பிடுவதை விட, வேகவைத்து சாப்பிடுவதே நல்லது.

கொட்டைகள் (Nuts)

வேர்க்கடலையில் மிகக் குறைவான Low Glycemic Index (ரத்த சர்க்கரை அளவைக் குறிக்கும் குறியீடு) கொண்டது. ரத்த சர்க்கரையை சீராக வைக்க சிறந்த, மலிவான உணவு.

பாதாம் பருப்பில் உள்ள மெக்னீஷியம், இன்சுலின் கட்டுப்படுத்தி சர்க்கரையை சமநிலையில் வைக்க உதவும்.

பிஸ்தா குறைந்த கலோரிகளுடன் அதிக நார்ச்சத்தும் கொண்டது.

வால்நட் பருப்பு, ஒமேகா 3 (உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு வகை பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம்) அதிகம் கொண்டது.

முந்திரிப் பருப்பு குறைந்த அளவில் உண்ணலாம்.

பொதுவாக நட்ஸ், ஹைச்டிஎல் என்னும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, Triglycerides அளவையும் குறைத்து நன்மை பயக்கும்.

கடலை எண்ணைய், ரைஸ் ப்ரான் எண்ணை, நல்லெண்ணை, கடுகு எண்ணெய், கனோலா எண்ணெய், சோயா மற்றும் ஆலிவ் எண்ணை இவை உபயோகிக்கலாம்.

ஆனால் எல்லாமே அளவுடன் தான்.

வெண்ணைய், நெய், வனஸ்பதி, மற்றும் தாவர எண்ணைகளில் வெளிப்படையாகவே கொழுப்புச் சத்து இருப்பதால் இவையும் குறைவாகவே பயன்படுத்தவும்.

காய்கறிகள்

கீரை வகைகளில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட், மக்னீஷியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இன்சுலினை கட்டுப் படுத்துகின்றன.

பாகற்காய், ரத்த சர்க்கரையைக் குறைக்கும் மருந்தாகும்.

சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கொத்தவரங்காய் இவற்றில் நீர்ச் சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் (Antioxidants) இருப்பதால் இவையும் ஏற்ற உணவு வகைகளே.

நெல்லிக்காய் Low Glycemic கொண்டிருப்பதால் உணவில் அடிக்கடி சேர்க்கலாம்.

முட்டைக் கோஸ், புரோகொலி இவையும் சர்க்கரை அளவை கட்டுப் படுத்துபவையே.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் அதிகரிக்கும் மாரடைப்பு! இதயத்தைக் காக்க நீங்கள் செய்ய வேண்டியவை!
Diabetic diet - நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுமுறை

பழங்கள்

நாவல் பழம் நீரிழிவு நோய்க்கு சிறந்தது என்று பாரம்பரியமாக பரிந்துரைக்கப்படுவது.

கொய்யாவில் நார்ச்சத்து அதிகம். ஆப்பிள் ரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது.

பெர்ரி பழங்களில் இருக்கும் Antioxidants, ஆரஞ்சு எலுமிச்சை இவற்றில் விட்டமின் சி, நார்ச்சத்து இருப்பதால் உகந்த பழங்களே.

பழச்சாறாக அருந்துவதை விடவும் அப்படியே பழங்களாக சாப்பிடுவதுதான் நல்லது.

பழுத்த வாழைப்பழம், மாம்பழம், தர்பூஸ், அன்னாசி, திராட்சை இவற்றை மிகக் குறைவாக சாப்பிடலாம்.

பால், பால் பொருட்கள்:

கொழுப்பு நீக்கிய பால் (Skimmed Milk) குடிப்பதால் ரத்தத்தில் திடீரென சர்க்கரை அதிகரிக்காது.

இனிப்பு கலக்காத தயிரில் செரிமானத்துக்கு உதவும் Probiotics இருப்பதால் இதுவும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

மோரில் இருக்கும் நீர்த்தன்மையும் உகந்ததே.

சர்க்கரை கலக்காத பாதாம் பால் அருந்தலாம்.

சர்க்கரையே இல்லாத சோயா பாலும் நல்லது.

இதையும் படியுங்கள்:
ரத்த சோகையா? மாத்திரை இல்லாமல் ஹீமோகுளோபினை உயர்த்தும் உணவுகள்!
Diabetic diet - நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுமுறை

பொதுவாக நம் ஊரில் பண்டிகைகள், கல்யாணம் போன்ற விசேஷ நாட்கள் வரும் போது அதிக இனிப்பு வகைகள் தரப் படுகின்றன. அவற்றைக் கூடுமானவரை தவிர்த்து விடுவதோ அல்லது மிகக் குறைந்த அளவில் உட்கொள்வதோ நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு நல்லது.

லைஃப் ஸ்டைல் என்னும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தினம் 30 நிமிட நடைப்பயிற்சி, சரியான மருந்துகள் உட்கொள்ளுதல், உணவு கட்டுப்பாடு இவை இருந்தால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

என்று நிறைவு செய்கிறார் டாக்டர் ஸ்ரீவத்சா.

logo
Kalki Online
kalkionline.com