ஆப்பிளை விட சிறந்ததா பெர்சிமன் பழம்? இதன் வியக்க வைக்கும் 7 நன்மைகள்!

தக்காளி போன்ற தோற்றம், ஆப்பிள் சுவை! உடலுக்கு வாரி வழங்கும் அற்புத மருத்துவ நன்மைகள் இதோ.
Persimmon Fruit | பெர்சிமன் பழம்
Persimmon Fruit | பெர்சிமன் பழம்
Updated on

பெர்சிமன் பழம் (Persimmon Fruit) சீனாவில் தோன்றி, பின்னாளில் ஜப்பான் நாட்டின் தேசிய பழமாக மாறியது. தக்காளி போன்ற தோற்றமுடைய இப்பழத்தில் ஏராளமான கனிம சத்துக்கள் நிறைந்துள்ளன. மலைகளில் கிடைக்கும் பழங்கள் மிகவும் சுவையாகவும் சத்துக்கள் நிறைந்தாகவும் இருக்கும். அந்த வகையில், உத்தரகாண்ட் மலைப்பகுதிகளில் கிடைக்கும் பெர்சிமன் பழம், அதன் ஊட்டச்சத்துகளுக்கு பெயர்போனது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த பழம் மருத்துவ குணங்கள் நிறைந்தது. ஊட்டி குன்னூர் சிம்ஸ் பூங்கா பழபண்ணையில் பெர்சிமன் பழங்களும் உள்ளன. ஆண்டு தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் இங்கு இந்த பழத்தின் சீசன்.

பெர்சிமன் பழத்திற்கு 'ரம்பால்' பழம் என்றோர் பெயரும் உண்டு. பார்ப்பதற்கு ஆப்பிள் பழம் போன்று இருப்பதுடன் அதனைப் போன்றே சுவையிலும், ஆரோக்கிய நலன்கள் வழங்குவதிலும் ஒத்திருக்கிறது. இதிலுள்ள 'பைட்ரோ நியூட்ரின்'கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. உண்மையில் இதில் ஆப்பிளை விட அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்களும், நீர்ம நார்ச்சத்தும் உள்ளது. குறிப்பாக இதன் தோலில் இந்த சத்துக்கள் உள்ளன.

பெர்சிமன் பழத்தில் அளப்பரிய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. 100 கிராம் எடையுள்ள பழத்தில் 6 கிராம் நார்ச்சத்து உள்ளது. அதிகளவில் நார்ச்சத்து உள்ள இதனை சாப்பிடுவதால் அஜீரணம், வாயு மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது மற்றும் குடல் சார்ந்த பிரச்னைகளைத் தடுக்கிறது.

இதில் வைட்டமின் ஏ மற்றும் பி சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஆஸ்துமா மற்றும் இதய நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதிலிலுள்ள பினோலிக் ஆன்டி ஆக்ஸிடென்ட் ரத்த குழாய்களை வலுவாக்குவதுடன் அதனை நெகிழ்வாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதனை அளவாக சாப்பிடுவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

எலும்புகளை வலுப்படுத்தவும், மூட்டு வலி குணமடையவும் பெர்சிமன் பழத்தை சாப்பிடலாம். பெர்சிமன் பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் இதற்கு உதவுகிறது. மேலும் இதிலுள்ள ஆன்டி இம்பிளமென்ட்ரி பண்புகள் முடக்கு வாதத்தை தவிர்க்க உதவுகிறது.

தவறான உணவுப் பழக்கத்தால், பெரும்பாலானவர்களின் உடலில் இரத்த சோகை காணப்படுகிறது. குறிப்பாக, பெண்களின் உடலில் அத்தகைய சூழ்நிலையில் பெர்சிமன் பழம் சாப்பிடுவது நன்மை பயக்கும். பெர்சிமன் பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இது இரத்த சோகையை தடுக்கிறது.

பெர்சிமன் பழத்தில் (150 கிராம்) ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் ஏ 55 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க முக்கியமான சத்து. மேலும் இதில் உள்ள லூடின் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற சத்துக்கள் விழித்திரையை பாதுகாக்கின்றன. நீண்ட நேரம் மொபைல் அல்லது கணினி பயன்படுத்துபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வயதான காலத்தில் ஏற்படும் பார்வை குறைபாடுகளைத் தடுக்கவும் இது உதவும்.

பெர்சிமன் பழத்தில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடென்ட்களான பிளோவினாய்ட்ஸ், காரோட்டினாயிட்ஸ் உள்ளது. இது பிரிரேடிக்கல்களை எதிர்த்து செல்களின் அழிவை தடுக்கிறது. ஒரு பெர்சிமன் பழத்தில் 13 மி.கி வைட்டமின் சி இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்கள் வராமல் தடுக்கிறது.

பெர்சிமன் பழத்தில் உள்ள வைட்டமின் ஈ சருமத்திற்கு நன்மை பயக்கும். சருமம் தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

பெர்சிமன் பழம் ஆரோக்கியமான பழம் தான் என்றாலும் அதனை வெறும் வயிற்றிலும், நன்கு பழுக்காத நிலையிலும் சாப்பிடக்கூடாது. அலர்ஜி உள்ளவர்கள் மற்றும் குடல் நோய் உள்ளவர்கள் இதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குடல்வால் அழற்சி: திடீர் வயிற்று வலிக்கு இதுதான் காரணமா? தப்புவிக்க எளிய வழிகள்!
Persimmon Fruit | பெர்சிமன் பழம்

உபரித் தகவல்கள்:

இப் பழங்கள் மரத்திலேயே அதிகம் பழுப்பதில்லை. காய் வடிவில் பறிக்கப்படும் இப் பழங்கள் 'எத்திரால்' என்ற திரவத்தில் ஊறவைத்தால் இரண்டு நாள் கழித்து பழுக்கும். பெர்சிமன் பழத்தை சாலட்களில் பயன்படுத்தலாம். ஜாம், சட்னி மற்றும் சான்ட்விச்களில் கலந்து சாப்பிடலாம்.

இதில் பல வகைகள் உள்ளன.

பியூ - பெர்சிமன் பழத்தை பழுக்காமல் கூட சாப்பிடலாம்.

ஹாச்சியா வகை பெர்சிமன் பழத்தை முழுதாக பழுத்தால் மட்டுமே சாப்பிட முடியும். இது நல்ல இனிப்பு சுவையுடன், வாசனையாகவும் இருக்கும். ஜெல்களில் பயன்படுத்தி வரலாம்.

சாய்ஜோ வகை பெர்சிமன் பழத்தையும் முழுதாக பழுத்தால் மட்டுமே சாப்பிட முடியும். இதனை உலர் பழமாகவும் சாப்பிடலாம்.

ஹென்னா சிகப்பு பெர்சிமன் பழம் அதிக இனிப்பு சுவை கொண்டது. அதன் உள் புறம் மென்மையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
டீ பிரியர்களே கவனம்! டீ குடித்த உடனே தண்ணீர் குடிப்பது இவ்வளவு கேடா?
Persimmon Fruit | பெர்சிமன் பழம்
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com