அலுவலகத்தில் பணிபுரியும் பலரும் கணினி முன்பு அமர்ந்து வேலை செய்கிறார்கள். ஒரு நாளின் பல மணி நேரத்தை உட்கார்ந்துகொண்டே வேலை செய்வதால் அது உடலுக்கு பலவிதமான தீங்குகளைத் தருவதாக உள்ளது. உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்களுக்கு இருதய நோய் உள்ளிட்ட பலவிதமான ஆரோக்கியக் கேடுகள் உண்டாகும். இதை எப்படி மாற்றி அமைப்பது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
உட்கார்ந்த வாழ்க்கை முறையின் விளைவுகள்:
உடல் பருமன்: உட்கார்ந்துகொண்டே வேலை செய்வதை ஆங்கிலத்தில் sedentary life style என்கிறார்கள். தற்போது சிறு குழந்தைகள் கூட ஓடியாடி விளையாடாமல், ஓரிடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து டி.வி பார்ப்பது அல்லது ஃபோன் பார்ப்பது என்று இருக்கிறார்கள். இதனால் அதிக உடல் எடையுடன் வலம் வருகிறார்கள். அதேபோல கணினியில் அலுவலப் பணி செய்வோரும் அமர்ந்தே இருப்பதாலும், உடல் உழைப்பு இல்லாததாலும், உடலில் கலோரிகள் எரிக்கப்படுவது குறைந்து உடல் எடை கூடிவிடும்.
டைப் 2 நீரிழிவு நோய்: உட்கார்ந்துகொண்டே வேலை செய்வதால் சர்க்கரை நோய் எளிதில் தாக்கும். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் திறன் பாதிக்கப்படுகிறது. இன்சுலின் எதிர்ப்பின் அபாயத்தை அதிகரிக்கிறது.
இதய நோய்கள்: உடல் உழைப்பு இல்லாமல் செயலற்று இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு அதனால் இதய நோய் பாதிப்புகள் ஏற்படும்.
மூட்டு வலியும், கீல்வாதமும்: நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது பலவீனமான தசைகள், மூட்டு வலி மற்றும் மோசமான உடல் தோரணையை ஏற்படுத்தும் மற்றும் கீல்வாதம் போன்ற நிலைமைகளுக்கும் வழிவகுக்கும்.
மனநல பாதிப்புகள்: அமர்ந்துகொண்டே வேலை செய்வதால் மனநலக் கோளாறுகள் அதிகமாகும். சுறுசுறுப்பாக செயல்படும்போதுதான் உடல் என்டார்ஃபின்களை வெளியிடும். இது மனநிலையை மேம்படுத்த உதவும். மேலும், உட்கார்ந்ததுகொண்டே இருப்பது அறிவாற்றல் வீழ்ச்சிக்கும், டிமென்ஷியா எனும் மறதி நோயையும் கொண்டு வரும்.
உட்கார்ந்த வாழ்க்கை முறையை மாற்றும் வழிகள்:
நடைப்பயிற்சி + உடற்பயிற்சி: ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். மிதமான ஏரோபிக் செயல்பாடுகள் இருக்க வேண்டும் அல்லது இலகுவான உடற்பயிற்சியாவது செய்ய வேண்டும். ஒவ்வொரு முப்பது நிமிடங்களுக்கு ஒரு முறையும் நாற்காலியில் இருந்து எழுந்து சில அடி தூரம் நடந்து செல்ல வேண்டும்.
நிற்பதும், நடப்பதும்: மின் தூக்கிகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக படிக்கட்டில் ஏறி இறங்கி செல்லலாம். அலைபேசியில் பேசும்போது உட்கார்ந்து கொண்டு பேசாமல் நடந்து அல்லது நின்று கொண்டு பேசலாம். வேலை செய்யும்போது நிற்கும் மேசையை பயன்படுத்தலாம்.
உடல் செயல்பாடுகள்: ஃபோனில் அலாரம் செட் செய்து வைத்துக் கொண்டு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை இரண்டு நிமிடமாவது எழுந்து நடந்து செல்ல வேண்டும். ஓய்வு நேரங்களில் வீடு சுத்தம் செய்தல், தோட்ட வேலை, விளையாடுவது போன்ற உடல் செயல்பாடுகளை செய்ய வேண்டும். தசைக்கூட்டு பிரச்னைகளைத் தடுக்க, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உட்கார்ந்து இருக்கும்போது நேராக அமர வேண்டும்.
ஃபோன் உபயோகத்தைக் குறைத்தல்: பொதுவாக, அமர்ந்திருக்கும்போதுதான் அதிகமாக செல்போனை உபயோகிப்போம். அதற்கு பதிலாக ஃபோன் உபயோகத்தை குறைத்துக்கொண்டு பிடித்த பாடலுக்கு நடனம் ஆடுவது அல்லது நின்று கொண்டு படம் வரைவது போன்றவற்றை செய்யலாம்.
தீவிர முயற்சிகள்: ஏற்கெனவே அமர்ந்து கொண்டு வேலை செய்து உடல் பருமனாகி இருந்தால் உடனடியாக அதைக் குறைக்க தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு பத்தாயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும்.