

நமது உடல் ஆச்சரியங்கள் நிறைந்தது. மூச்சு... நமது உடலில் நிலவும் பலப்பல ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று. ஒரு குழந்தை பிறந்ததும் மூச்சுவிட்டு அழுது சுற்றியுள்ளவர்களைச் சிரிக்க வைக்கிறது. அதே குழந்தை வளர்ந்து பல பருவங்களை அடைந்து வாழ்ந்து முடித்து மூச்சை நிறுத்திக் கொள்ளும்போது சுற்றியுள்ளவர்களை அழ வைக்கிறது.
நாம் உணவின்றி தண்ணீர் இன்றி சில வாரங்கள் வரை வாழலாம். ஆனால் சுவாசிக்காமல் சில நிமிடங்கள் கூட வாழ இயலாது. நமது உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் பாதிப்பு நிகழ்ந்து அது வியாதியாக மாற்றமடைந்து நம்மைத் துன்புறுத்துகிறது என்றால் அந்த இடத்திற்கு போதிய பிராணசக்தி கிடைக்கவில்லை என்று பொருள்.
மூச்சு - இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களின் இயக்கத்திற்கும் ஆதாரமாய் விளங்கும் ஒரு அதிசயச் செயல். ஒரு தாயின் வயிற்றில் கருவாய் ஒரு உயிர் தோன்றி முதன் முறையாக உலகத்தைப் பார்க்க வெளியே வந்ததும் செய்யும் செயல் மூச்சு விடுதல்.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் முதல் செயல் மூச்சு விடுதல். இரண்டாவது செயல் அழுகை. இப்படி ஆரம்பிக்கும் இந்த முதல் மூச்சுக்கும் உயிரானது நமது உடலை விட்டு வெளியேறும் போது நடைபெறும் கடைசி மூச்சுக்கும் இடைப்பட்ட காலமே வாழ்க்கை.
மனிதனைக் காட்டிலும் அதிக வருடங்கள் உயிர் வாழ்க் கூடிய ஓர் உயிரினம் ஆமை. இதற்கு முக்கிய காரணம் அது சுவாசிக்கும் முறைதான். ஆமைகள் ஒரு நிமிடத்திற்கு மூன்று முறைதான் சுவாசிக்கின்றன. குதிரை மற்றும் நாய் போன்ற விலங்குகள் நிமிடத்திற்கு இருபது முறைக்கும் அதிகமாக சுவாசிக்கின்றன. இவ்வாறு வேகவேகமாக சுவாசிப்பதன் காரணமாக இவற்றின் ஆயுளும் சில ஆண்டுகளிலேயே முடிந்து போய்விடுகிறது.
மனிதர்களாகிய நாம் நிமிடத்திற்கு பதினைந்து முறை சுவாசிக்க வேண்டும். இருப்பினும், வயது, செயல்பாடு மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்து இந்த விகிதம் மாறுபடும். அப்படிச் செய்தால் நமது ஆயுள் நூற்றிஇருபது ஆண்டுகள் என யோக சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. நாம் நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் மணிக்கு 900 முறையும் ஒரு நாளைக்கு 21600 முறையும் சுவாசிக்க வேண்டும். இதுதான் நியதி. நாம் நமது சுவாசத்தை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்கிறோமா அந்த அளவிற்கு நமது ஆயுள் அதிகரிக்கும். இதன் பொருள் என்னவென்றால் மூச்சைப் பிடித்து அமர்ந்து கொள்ளுதல் என்பதல்ல.
நாம் நமது சுவாசத்தின் வேகத்தைக் குறைத்து அதன் பலனாக எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் இது சாத்தியமாகும்.
பிராணாயாமம் என்ற சொல்லுக்கு சுவாசக்காற்றை ஆழமாக உள்ளே இழுத்து கட்டுப்படுத்துதல் என்று பொருள். நாம் முறையாக சுவாசிக்காத காரணத்தினால் போதிய அளவு பிராணசக்தியானது நம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லுவதில்லை. ஓரு முறையான பயிற்சியின் மூலம் பிராணசக்தியை நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். உடலில் அமைந்துள்ள ஒவ்வொரு செல்லுக்கும் பிராணவாயுவைக் கொண்டு சென்று உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு மூச்சை ஒழுங்குபடுத்தி நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பயிற்சியே பிராணாயாமம் என்று அழைக்கப்படுகிறது.
இன்றைய பரபரப்பான டென்ஷன் நிறைந்த வாழ்க்கையில் மனிதர்கள் சரியாக சுவாசிப்பதே இல்லை. எப்படி சுவாசிக்க வேண்டும் என்ற அடிப்படையைத் தெரிந்து கொள்ளாமலேயே நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு சின்னஞ்சிறிய குழந்தையானது சுவாசிக்கும் அளவிற்கு நாம் முழுமையாக சுவாசிப்பதில்லை. மல்லாந்து படுத்து தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு சின்னஞ்சிறிய குழந்தையை உற்று நோக்குங்கள். அது ஒரே சீராக எந்தவித படபடப்பும் இல்லாமல் அமைதியாக மூச்சை உள்ளே இழுத்துவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை நாம் பார்க்கலாம். இதுதான் பிராணாயாமம்.
பிராணாயாமத்தை முறைப்படி கற்போம். ஆரோக்கிய வாழ்க்கையினை வாழ்வோம்.