

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க கடைகளில் ஏகப்பட்ட மாய்ஸ்சரைசர் மற்றும் கிரீம்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் அவரவர் வசதிக்கேற்ப மலிவான மற்றும் உயர்தர பிராண்ட் வகைகள் உண்டு. இதை உபயோகித்து சருமம் பொலிவோடு இருந்தால் ஓகே.. ஆனால் பொலிவை இழந்தால்..? நம்மை நாமே நொந்து கொள்வதை விட யாரிடமும் கேட்க முடியாது.
ஆனால் நமக்கெல்லாம் நம்ம அம்மா பாட்டிகளைப் பார்த்தால் நிச்சயம் லைட்டா பொறாமை வரத்தான் செய்யும். பின்ன எத்தனை வயதானாலும் அவங்க சருமம் மட்டும் எப்படி பட்டு போல இருக்கு? இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மாவு தான் அதற்கு காரணம். அது என்ன மாவு?
பாட்டி காலத்தில் குளிப்பதற்கு சோப்பு, பாடி வாஷ் மற்றும் ஷாம்புகளும் இல்லாத காலத்திலேயே, சருமத்தைப் பராமரிக்க இயற்கையான பொருட்களைக் கொண்ட நலங்கு மாவுதான் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாகக் குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவது, அரிப்பு ஏற்படுவது, சருமத்தின் மென்மை குறைவது போன்ற பிரச்சினைகளுக்கு மருத்துவரிடம் யாரும் சென்றதில்லை.
ரசாயனப் பொருட்களைத் தவிர்த்து பாரம்பரிய முறையில் வீட்டில் தயாரித்த நலங்கு மாவையே நம்பினர். இந்த நலங்கு மாவு கலாச்சாரம் 2000 ஆண்டுகளுக்கு பின்னர் முற்றிலும் மறைந்து வருகின்றன. காரணம் அழகுக் கலை படிப்புகளும் அறிவியல் டெக்னாலஜியும். ஆனாலும் அன்றைய நலங்கு மாவு தந்த பின்விளைவற்ற சருமப் பாதுகாப்பு இப்போது கிடைப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மேலும் குளிர்காலம் தொடங்கிவிட்டாலே பலருக்கும் சரும வறட்சி, வெடிப்பு, அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம். குறிப்பாகக் குளிப்பதற்குப் பயன்படுத்தும் சில சோப்புகள் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்ப் பசையையும் நீக்கிவிடலாம்.
இப்படிப்பட்ட நேரத்தில் நம் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய நலங்கு மாவு ஒரு சிறந்த மாற்றாக இருக்கலாம் என்கின்றனர் இயற்கை விரும்பிகள்.
சரி.. வீட்டிலேயே எளிய பொருட்களைக் கொண்டு பாட்டி காலத்து நலங்கு மாவு எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு – 1 கப்
கடலைப்பருப்பு – ½ கப்
கஸ்தூரி மஞ்சள் – 2 டீஸ்பூன்
ரோஜா இதழ்கள் (உலர்ந்தது) – ¼ கப்
ஆவாரம் பூ (உலர்ந்தது) – ¼ கப்
வெட்டிவேர் – 2 டீஸ்பூன்
பூலாங்கிழங்கு – 2 டேபிள்ஸ்பூன்
சந்தனத் தூள் – 1 டேபிள்ஸ்பூன்
தயாரிக்கும் முறை
பச்சைப்பயறு, கடலைப்பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியாகச் சுத்தம் செய்து நன்றாக உலர்த்திக்கொள்ளவும்.
ரோஜா இதழ்கள், ஆவாரம் பூ, வெட்டிவேர் அவற்றை காற்றில் பறக்காதவாறு உலர விட்டு எடுக்கவும். இப்போது அனைத்து பொருட்களையும் தனித்தனியாக மிக்ஸியில் அல்லது மாவு அரைக்கும் கடையில் கொடுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சல்லடையில் சலித்து காற்றுப் புகாத உலர்ந்த டப்பாவில் சேமித்து வைக்கவும்.
அவ்வளவுதான் இயற்கையான நலங்கு மாவு தயார்.
குளிர்காலத்தில் இதை பயன்படுத்தி பயனடையலாம்.
குளிக்கும் முன்ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் நலங்கு மாவு எடுத்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு பால் அல்லது தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாகக் கலக்கவும்.
உடலில் தடவி மெதுவாகத் தேய்த்து சில நிமிடங்களில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிக்கொள்ளலாம்.
சருமம் வறண்டு இருந்தால் பால் சேர்த்துக் கலக்கலாம். இருப்பினும் பால் ஒத்துக்கொள்ளாதவர்கள் தண்ணீரைப் பயன்படுத்தலாம். மிக அழுத்தம் தந்து தேய்ப்பதைத் தவிர்ப்பது நல்லது (கடுமையாகத் தேய்க்கக் கூடாது).
நலங்கு மாவில் உள்ள பொருட்களின் பயன்கள் என்ன தெரியுமா?
பச்சைப்பயறு - சருமத்தில் உள்ள அழுக்குகளை மென்மையாக நீக்க உதவும்.
கஸ்தூரி மஞ்சள் - பாரம்பரியமாகச் சருமப் பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
ரோஜா இதழ்கள் - சருமப் பராமரிப்பில் நறுமணத்திற்காகவும் மென்மையான உணர்விற்காகவும் சேர்க்கப்படுகின்றன.
வெட்டிவேர் - இயற்கையான நறுமணம் கொண்டது. பாரம்பரிய குளியல் பொடிகளில் பயன்படுத்தப்படுகிறது.
சந்தனம் - சருமப் பராமரிப்பில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் பொருள்.
சிலருக்கு இயற்கைமான பொருள்கள் என்றாலும் ஒவ்வாமை ஏற்படும். அதிலும் தற்போது அனைத்திலும் கலப்படம் எனும் போது கவனம் தேவை. இந்த நலங்கு மாவையும் பயன்படுத்தும்போது சருமம் ஏற்றுக் கொள்ளுமா என கவனிக்க வேண்டியது அவசியம்.
முதன் முதலில் பயன்படுத்துவதற்கு முன்பு கையில் சிறிய பகுதியில் சிறிது தடவி 24 மணி நேரம் விடவும். அப்போது
சருமத்தில் அரிப்பு, சிவப்பு அல்லது எரிச்சல் ஏற்பட்டால் பயன்படுத்துவதை நிறுத்தவும். அதேபோல் மிகவும் வறண்ட சருமம் உள்ளவர்கள் தினமும் நலங்கு மாவைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் குளிப்பதற்கு அதிகச் சூடான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம். குளித்தவுடன் சருமம் சற்று ஈரமாக இருக்கும்போதே மாய்ஸ்சரைசர் அல்லது வாசனை இல்லாத ஈரப்பதமூட்டும் கிரீம் தடவலாம்.
குறிப்பாக குழந்தைகள், எக்ஸிமா அல்லது பிற சருமப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்த வேண்டாம்.
சிலருக்கு நலங்கு மாவு பயன்படுத்தினால் சோப்பு தேவையில்லையா எனும் சந்தேகம் வரும்.
நலங்கு மாவு ஒரு பாரம்பரிய குளியல் பொடி. இது சிலருக்கு மென்மையான சுத்தப்படுத்தியாகச் செயல்படலாம். ஆனால் சோப்புக்கு இணையான கிருமி நீக்கத்தைத் தரும் என்று கூற முடியாது.
குறிப்பாகக் கை, அக்குள், கால்கள் போன்ற பகுதிகளைச் சுத்தமாக வைத்திருக்கத் தேவையான இடங்களில் பொருத்தமான சோப்புகளை பயன்படுத்தலாம்.
பாட்டி காலத்து நலங்கு மாவு என்பது வெறும் அழகுப் பொருள் மட்டுமல்ல; இயற்கைப் பொருட்களைக் கொண்டு உடலைப் பராமரிக்கும் ஒரு பாரம்பரிய வழக்கம். ஆனால் எந்த இயற்கைப் பொருளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஏற்றதாக இருக்காது. சருமத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு பயன்படுத்துவதே முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.