
தைராய்டு என்பது நமது கழுத்தில் உள்ள ஒரு சிறிய சுரப்பி. இது சில ஹார்மோன்களை உருவாக்கி வெளியிடுகிறது. இதன் முக்கியமான வேலை உடலின் வளர்சிதை மாற்றம், எடை, வெப்பநிலை மற்றும் ஆற்றலை கட்டுப்படுத்துவது. தைராய்டு சுரப்பி போதுமான தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்யாத போது பலவிதமான உடல்நல பிரச்னைகளையும், மனநிலை மாற்றங்களையும் ஏற்படுத்தும். ஆனால் தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் நலம் பெறலாம்.
(ஹைப்போ தைராய்டிசம்) தைராய்டு அளவு குறையும் போது ஏற்படும் சில பொதுவான பிரச்னைகள்
சோர்வு
தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்வார்கள். எவ்வளவு நேரம் தூங்கினாலும் அடுத்த நாள் சரியாக தூங்காத உணர்வே இருக்கும். அன்றாட வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய முடியாது.
எடை அதிகரிப்பு
தைராய்டு ஹார்மோன்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் உடல் எடையை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தைராய்டின் அளவு குறையும்போது எடை அதிகரிக்கும். முகம் வீங்கிக் காணப்படும்.
குளிரை தாங்க முடியாது
வெப்பமான கோடைகாலத்தில் கூட தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் குளிர்வது போல உணர்வார்கள். அவர்களது கையும் காலும் குளிர்ச்சியாக இருக்கும்.
மலச்சிக்கல்
செரிமானம் மெதுவாக நடைபெறுவதால் மலச்சிக்கல் ஏற்படும். மலம் கழிப்பதில் சிரமம் உண்டாகும்.
வறண்ட சருமம்
சருமம் வறண்டு, கரடு முரடாக, செதில் செதிலாக மாறும், அதைப்போல தலைமுடியும் வறண்டு மெல்லியதாக மாறும். புருவத்தின் முடிகள் கூட உதிர்ந்து போகலாம். நகங்களும் எளிதில் உடைந்து போகும்.
தசை, மூட்டு வலி
மூட்டுகளில் வீக்கம், தசைவலி, விறைப்புத்தன்மை, தசை பலவீனம் ஆகியவை உண்டாகும்.
மெதுவான இதயத்துடிப்பு
தைராய்டு அளவுகள் குறையும் போது ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள் ஏற்படும். இதய செயல்பாட்டை பாதிக்கும். இதயத்துடிப்பு குறையும்.
பிற பாதிப்புகள்
சோகம், எதிலும் ஆர்வமின்மை, கவனம் செலுத்துவதில் சிரமம், நினைவாற்றல் குறைபாடு, மெதுவாக சிந்திப்பது, மூளை மூடுபனி போன்ற சிக்கல்களை உண்டாக்கும். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிகளை பாதிக்கும். கருச்சிதைவு, கருவுறுதலில் பிரச்சினையை கொண்டு வரலாம்.
(ஹைப்பர் தைராய்டிசம்) தைராய்டு அளவு அதிகரிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகள்;
எடை இழப்பு
தைராய்டு அளவு அதிகரிக்கும் போது, பசி அதிகமாக இருந்தாலும், அதிகமாக சாப்பிட்டாலும் வளர்சிதை மாற்றம் துரிதமாக நடப்பதால் எடை இழப்பு ஏற்படும். செரிமானமும் விரைவாக நடப்பதால் அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும். எடை நன்றாகக் குறையும்.
இதய செயல்பாட்டில் பாதிப்பு
இதயத்துடிப்பு விரைவாகவும் ஒழுங்கற்றதாகவும் இருக்கும். மிகையான இதயத் துடிப்பு, இதய சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பதட்டம், எரிச்சல், அமைதியின்மை, கை கால்களில் நடுக்கம் இருக்கும்.
பிற பாதிப்புகள்
குளிர்ந்த சூழ்நிலைகளில் கூட உடல் சூடாக இருக்கும். அதிகப்படியான வியர்வை இருக்கும். தூங்குவதில் சிரமம் உண்டாகும் அல்லது தூக்கமின்மை ஏற்படும். கண்கள் வீங்கி சிவந்து கரடுமுரடாக வலி மிகுந்ததாக மாறும். பார்வை கூட சிலருக்கு பாதிக்கப்படலாம்.
தைராய்டு குறைபாட்டை எதிர்கொள்ளும் விதம்
தேவையான அளவு அயோடின், செலினியம், மற்றும் இரும்புச்சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும். கடல் உணவுகள், பால் பொருட்கள், முட்டைகள் போன்றவை நல்ல அயோடின் உள்ள உணவு வகைகளாகும். கொட்டைகள், விதைகள், முழு தானியங்கள் போன்றவற்றில் செலினியம் சத்து உள்ளது.
மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும். போதுமான அளவு ஆழ்ந்த தூக்கம் அவசியம். விட்டமின் டியைப் பெற சூரிய ஒளியில் நேரம் செலவிடுதல் வேண்டும்.
சுற்றுச்சூழல் நச்சுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மாசுபடுத்திகள், ரசாயனங்கள், லித்தியம் கொண்ட சில மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் தைராய்டு செயல்பாட்டை பாதிக்கலாம். எனவே அவற்றைத் தவிர்க்க வேண்டும்.