

இந்தியாவில் புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer) மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. நகரமயமாக்கல், வாழ்க்கை முறை மாற்றங்கள், உடல் உழைப்பற்ற பழக்கங்கள், குறைந்த உடல் செயல்பாடு மற்றும் சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், மதுபானம் ஆகியவற்றால் உந்தப்பட்டு, இதன் பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சில மதிப்பீடுகளின்படி, சமீபத்திய காலகட்டங்களில் இதன் பாதிப்பு சுமார் 30% அல்லது அதற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
தற்போது, புரோஸ்டேட் புற்றுநோய் இந்தியா முழுவதும் ஆண்களுக்கு ஏற்படும் மூன்றாவது பொதுவான புற்றுநோயாகும். மேலும் டெல்லி, கொல்கத்தா, புனே மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகர்ப்புற மையங்களில் இது இரண்டாவது பொதுவான புற்றுநோயாகும்.
அந்த வகையில் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற இந்தியாவின் நகர்ப்புற மையங்களில், ஆண்களைப் பாதிக்கும் முதல் 10 புற்றுநோய் வகைகளில் புரோஸ்டேட் புற்றுநோயும் ஒன்றாகும்.
மும்பையில், 1990-ஆம் ஆண்டில் ஆண்களிடையே எட்டாவது மிகவும் பொதுவான புற்றுநோயாக இருந்த இது, 2014-ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
‘புரோஸ்டேட்’ என்பது ஆண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதி. இது சிறுநீர்ப்பைக்கு அடியில் வால்நட் அளவில் இருந்து வயதை பொறுத்து காணப்படும்.
பொதுவாக உணவுப் பழக்கம், கொழுப்பு உணவுகள், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றுடன் தொடர்பு கொள்பவையாகும்.
இந்த புற்றுநோய் வந்தால், அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் சிறுநீர் மெதுவாக கழிவது, சிறுநீர் அல்லது விந்தில் இரத்தம், சிறுநீர் தானாக வெளியேறுதல், எலும்பு முறிவு, விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் கீழ் முதுகு, இடுப்பு அல்லது இடுப்பெலும்புப் பகுதியில் தொடர் வலி, எலும்புகளில் வலி போன்ற பிரச்னைகள் தென்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு 30% அதிகரித்துள்ளது என்று 'லான்செட்' மருத்துவ ஆய்வறிக்கை அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு உலகளவில் புரோஸ்டேட் புற்றுநோயால் பதிக்கப்பட்டவர்களில் 3,75,000 ஆண்கள் இந்த புற்றுநோயால் இறந்துள்ளனர். இந்தியாவில் லான்செட் அறிக்கையின்படி, கடந்த 25 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களில் புரோஸ்டேட் புற்றுநோய் 75% முதல் 85% அதிகரித்துள்ளது. புரோஸ்டேட் புற்றுநோய் இறப்பு விகிதங்களில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில், புரோஸ்டேட் புற்றுநோய் நோயாளிகளில் 80% பேருக்கு நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகிறது; 20 சதவீதம் பேர் மட்டுமே தாமதமாகச் சிகிச்சை பெற வருகின்றனர். ஆனால் இந்தியாவில், இந்தப் புள்ளிவிவரங்கள் இதற்கு நேர்மாறாக அமைந்துள்ளன என்பது கவலை அளிக்கும் விஷயமாகும்.
இந்தியாவில் சுமார் 85% நோயாளிகளுக்கு முற்றிய நிலைகளில் (III மற்றும் IV) நோய் கண்டறியப்படுகிறது, இது ஆரம்ப நிலை கண்டறிதலுடன் ஒப்பிடும்போது உயிர்வாழும் விகிதங்களைக் கணிசமாகக் குறைக்கிறது.
வரலாற்று ரீதியாக இது முதியவர்களுக்கு (65+) வரும் நோயாக இருந்தாலும், 35-50 வயதுடைய இளம் ஆண்களிடமும் 'கவலையளிக்கும்' வகையில் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 2040 ஆண்டில் ஆண்கள் மத்தியில் ஏற்படும் இறப்புகளில் 85% புற்றுநோயால் இறக்கப்படுவார்கள் எனவும் இதுவரை இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 33,000 முதல் 42,000 பேர் புதிதாக புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என மருத்துவர்கள் கணிப்பில் கூறப்படுகிறது.
பல நேர்வுகளில், புரோஸ்டேட் புற்றுநோயின் வளர்ச்சி மிகவும் மெதுவாக இருப்பதால், நோயின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு முன்பாகவே நோயாளி வேறு ஏதேனும் இயற்கையான காரணங்களால் உயிரிழக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் கட்டாயமாக 'PSA பரிசோதனை' செய்துகொள்ள வேண்டும் என்று பொதுவானதொரு அறிவுரையை வழங்க இயலாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தியச் சூழலில், இத்தகையப் பரிசோதனைகள் அவசியமா என்பது விவாதத்திற்குரிய ஒரு விஷயமாகவே உள்ளது. குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் பாதிப்பு இருந்திருந்தால், அத்தகையவர்களுக்கு மட்டுமே இப்பரிசோதனையைச் செய்துகொள்ளுமாறு பரிந்துரைப்பது சிறந்தது என்கின்றனர்.
இந்த வகையில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, புரோஸ்டேட் புற்றுநோய் உட்பட, இளம் வயதிலேயே ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கையும் அதே அளவில் அதிகரித்து வருகிறது.
முற்றிலும் இந்த நோயை தடுக்க இயலாது என்றாலும், சில வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் அந்த நோயின் அபாயத்தைக் குறைக்க முடியும்.
ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல், தவறாமல் உடற்பயிற்சி செய்தல் மற்றும் பழங்கள், காய்கறிகள் நிறைந்த உணவை உட்கொள்ளுதல் போன்ற வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் (அல்லது குடும்பத்தில் இளவயதினருக்கு இந்நோய் இருந்தால்) தங்கள் மருத்துவர்களுடன் PSA பரிசோதனை குறித்துக் கலந்தாலோசிக்குமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here