

ஆண்டுதோறும் கோடைக்காலம் என்றாலே மாம்பழ சீசன் தொடங்கிவிடும். கோடையில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, சுட்டெரிக்கும் வெயிலில் இதமளிக்கும் ஒரு அற்புதமான பழம் இது. அதன் தனித்துவமான சுவையைத் தவிர, மாம்பழத்தில் குடல் ஆரோக்கியம், ஆற்றல் அளவுகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் அற்புதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மாங்காயாக இருந்தாலும் சரி, பழுத்த மாம்பழமாக இருந்தாலும் சரி இரண்டையும் விரும்பாதவர்கள் இருக்க முடியாது. மாம்பழ சீசன் தொடங்கியதும் மற்ற பழங்களுக்கான தேவை குறைய தொடங்கி விடும்.
மாம்பழம் ஒரு பன்முகப் பழம், இதை பல்வேறு வழிகளில் உட்கொள்ளலாம். சிலர் பழுத்த, சாறு நிறைந்த மற்றும் இனிப்பான மாம்பழங்களை விரும்புகிறார்கள், மற்றவர்களோ புளிப்பும் இனிமையும் நிறைந்த மாங்காயின் சுவையை மிகவும் விரும்புவார்கள்.
நீங்கள் மாங்காய் ஊறுகாய்/சட்னி விரும்புபவராக இருந்தாலும் சரி, அல்லது மாம்பழ ஷேக் அல்லது அம்ரஸ் அருந்த விரும்புபவராக இருந்தாலும் சரி, மாங்காய் மற்றும் பழுத்த மாம்பழங்கள் இரண்டுக்குமே ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பவை என்றாலும் அவை வழங்கும் ஊட்டச்சத்து நன்மைகள் மாறுபடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மாங்காய் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், கோடைக்காலத்தில் உடலுக்குத் தேவையான நீரைப் பெறவும் சிறந்தவை. அதே சமயம், மாம்பழங்கள் உடனடி ஆற்றலையும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆதரவையும் வழங்குகின்றன. ஆரோக்கியத்தின் அடிப்படையில் எதை சாப்பிடுவது சிறந்தது என்று பார்ப்போம்.
மாங்காய் - ஆரோக்கிய நன்மைகள்
பழுத்த மாம்பழங்களுடன் ஒப்பிடும்போது, மாங்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது மற்றும் அவை அதிக அமிலத்தன்மை கொண்டவை. இது அவற்றின் செரிமானத் திறனை அதிகரிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்துவதோடு குடல் ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கும். சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகளை ஆதரிக்கிறது.
மேலும் மாங்காய்களில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு மாங்காய் சிறந்த தேர்வாக அமையும்.
கோடை காலத்தில் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்கவும், உடலில் நச்சுகளை வெளியேற்றவும் மாங்காய் உதவிடும். வெப்பத் தாக்கத்தைத் தடுப்பதற்கும், செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கும் இவை பாரம்பரிய மருத்துவத்தில் போற்றப்படுகின்றன. மாங்காய் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளின் ஒரு சிறந்த மூலமாகும். இது புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவக்கூடும்
மாங்காய் யார் சாப்பிட வேண்டும்?
செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்புபவர்கள், புளிப்புச்சுவையுள்ள உணவுகளை விரும்புபவர்கள், கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க விரும்புபவர்கள் மாங்காய் சாப்பிடலாம்.
இயற்கையான சர்க்கரை மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்கும் உணவு முறைகளுக்கு இவை சிறந்தவை.
மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பழுத்த மாம்பழங்கள் இனிமையாகவும், சாறு நிறைந்ததாகவும், ஊட்டச்சத்துக்கள் மிகுந்ததாகவும் திகழ்கின்றன. பழுத்த மாம்பழங்களில் பீட்டா-கரோட்டின் போன்ற சில ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. பழுத்த மாம்பழங்களில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. இது ஆரோக்கியமான கண் பார்வை, நோய் எதிர்ப்புச் செயல்பாடு மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க அவசியமானது.
மாம்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். சரும ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். இவற்றில் உள்ள அதிக அளவிலான கார்போஹைட்ரேட், உடனடியான ஊக்கத்தை அளிக்கிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கக்கூடும். மேலும், பீட்டா-கரோட்டின் உட்பட அவற்றின் கரோட்டினாய்டு உள்ளடக்கம் கணிசமாக அதிகரிக்கிறது. இந்தக் கரோட்டினாய்டுகள் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகும். அவை வயது தொடர்பான விழித்திரை சிதைவு மற்றும் சில வகையான புற்றுநோய்களுக்கு எதிராகப் பாதுகாக்க உதவக்கூடும்.
பழுத்த மாம்பழங்களில் ரகங்களில், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு உதவும் பலவிதமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
பழுத்த மாம்பழம் யாருக்கு சிறந்தது?
உடலுக்கு உடனடி ஆற்றல் தேவைப்படுபவர்கள், சரும மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புபவர்கள், இனிமையான பழங்களை விரும்பி உண்பவர்கள் மாம்பழத்தை தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் பழுத்த மாம்பழத்தை மிதமான அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்து வேறுபாடுகள்
மாங்காயில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கும். பழுத்த மாம்பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இயற்கை சர்க்கரைகள் மற்றும் வைட்டமின் ஏ மிகுந்திருக்கும். மாம்பழம் பழுக்கும்போது, அதற்குள் இருக்கும் மாவுச்சத்து (ஸ்டார்ச்) சர்க்கரையாக மாறும். அதன் காரணமாக பழுத்த மாம்பழங்கள் இனிப்பு சுவையும், மென்மை தன்மையும் கொண்டிருக்கின்றன.
மாங்காய் மற்றும் மாம்பழம் ஆகிய இரண்டுமே நார்ச்சத்து வழங்குகின்றன. இருப்பினும், இந்த விஷயத்தில் மாங்காயே சற்று அதிக நன்மையை அளிக்கக்கூடும்.
மாம்பழம் அதிக இனிப்புச் சுவையுடனும், பலருக்கும் மிகவும் ரசிக்கும்படியும் இருப்பதால், சிற்றுண்டிகள் மற்றும் இனிப்பு வகைகளுக்கு இதுவே பலராலும் விரும்பப்படும் தேர்வாக உள்ளது.
முடிவாக, மாங்காய் மற்றும் மாம்பழம் ஆகிய இரண்டுமே தமக்கே உரிய தனித்துவமான ஊட்டச்சத்து நன்மைகளைக் கொண்டுள்ளன. மாங்காய் மற்றும் மாம்பழம் உட்படப் பல்வேறு வகையான பழங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது, பலதரப்பட்ட ஊட்டச்சத்துக்களையும் உடல்நல நன்மைகளையும் உறுதிசெய்ய உதவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)