

பழம் என்பது இனிப்பும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்த இயற்கையின் நன்கொடைகளில் ஒன்று. மனிதர் களுக்கும், பழங்களை உண்ணும் மற்ற ஜீவராசிகளுக்கும், இந்த பழங்கள் ஒருவகையில் இயற்கையின் லஞ்சம் என்று கூட சொல்லலாம். தாவரங்கள் தங்கள் இனத்தை பரப்ப பழங்களை தருவிக்கின்றன். ஒருவேளை அந்த பழங்களில் விதைகள் இல்லாவிட்டால், இயற்கையாக எவ்வாறு தாவரங்கள் பரவும்? விதை இல்லாத பழங்கள் உருவாவது எப்படி என்பதை பார்க்கலாம்.
முதலில் தாவரங்களின் விதை உருவாக, அவை மகரந்த சேர்க்கை செய்கிறது. ஒரு தாவரத்தின் பூவில் உள்ள ஆண் பகுதியான மகரந்தத் தூள்கள், அதே தாவரத்தின் வேறொரு பூவின் பெண் பகுதியான சூலக முடியை சென்றடைவதுதான் மகரந்தச் சேர்க்கை எனப்படுகிறது. இந்த செயல் நடைபெற காற்று, வண்டுகள், தேனீக்கள் போன்றவை தங்களை அறியாமல் பூவின் தேனை குடித்துவிட்டு, மகரந்த தூள்களை தங்கள் கால்களில் ஒட்டிக்கொண்டு பூவில் அமர்கிறது.
இந்த செயல்முறையில் மகரந்தத் தூள் சூலக முடியில் விழுந்தவுடன், அது ஒரு சிறிய குழாய்போல வளர்ந்து பூவின் அடிப்பகுதியில் உள்ள சூல் பையை அடைகிறது. அங்குள்ள பெண் துகள்களுடன் ஆண் செல்கள் இணைந்து கருவுறுதல் உருவாகிறது. இதன் பின்னர் சில மாற்றங்கள் பூவில் நடைபெறும், அப்போது சூல் விதையாகவும், சூல் பை இனிமையான பழமாக மாறும். இது எப்போதும் நடைபெறும் இயற்கையான நடைமுறை.
விதை இல்லாமல் எப்படி பழம்?
பொதுவாக ஒரு பூ மகரந்தச் சேர்க்கை நடந்தால் மட்டுமே கருவுற்று விதையுள்ள பழம் உருவாகிறது. ஆனால், பார்த்தினோகார்பி முறையில் பூ கருவுறாமலேயே பழமாக மாறுகிறது. அதனால் அந்தப்பழத்தில் விதைகள் உருவாவதில்லை. இது மட்டுமல்லாது தாவர ஹார்மோன்களை பூக்களின் மீது தூவுவதன் மூலம் விதையில்லா பழங்களை உருவாக்கலாம். வாழைப்பழம் அன்னாசி போன்றவை இந்த பண்பை இயற்கையாகவே பெற்றுள்ளன.
ஸ்டெனோஸ்பெர்மோகார்பி என்ற மற்றொரு முறையில் பூ கருவுற்று, விதை வளர்வதற்கு முன்பே கருச்சிதைவு ஏற்பட்டு வளர்ச்சி நின்றுவிடும். இந்த முறையில் பழங்கள் எப்போதும் இயல்பான தோற்றத்தில் இருக்கும். இந்த விதைகள் பெரும்பாலும் மென்மையாக இருக்கும். மேலும் அந்த விதைகளை முளைக்க வைக்க முடியாது.
மூன்றாவது முறையில் குரோமோசோமை மாற்றி விதையில்லாத பழம் தயாரிக்கப்படுகிறது. 22 குரோமோசோம் கொண்ட ஒரு தர்பூசணி செடியை, மற்றொரு தர்பூசணி செடியின் குரோமோசோம் எண்ணிக்கையை வேதிப்பொருள் மூலம் இரட்டிப்பாக்கி 44 ஆக மாற்றுவார்கள். இவற்றை மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுத்தும்போது கிடைக்கும் விதைகளுக்கு 33 குரோமோசோம்கள் இருக்கும். இந்த முறையில் நாம் பழங்களை உருவாக்கும்போது அந்தச் செடியால் சீரான விதைகளை உருவாக்க முடியாது. இவற்றின் விதை வெள்ளையாக மென்மையாக இருக்கும். ஆனால் முளைக்காது.
நான்காவது முறை, அனைவரும் அறிந்த ஒட்டு போடும் முறை அல்லது பதியன் போடுதல் என்றழைக்கப் படுகிறது. இந்த முறையில் ஒரு விதையில்லா மரத்தின் கிளையை வெட்டி வேறொரு செடியுடன் இணைத்து புதிய செடியை உருவாக்குவார்கள். இந்த புதிய செடியின் பழத்திற்கு விதைகள் இருக்காது.
விதையில்லா பழங்களின் ஆரோக்கிய தாக்கம்:
விதையுள்ள பழம், விதையில்லா பழம் என இரண்டிலும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்துகளே உள்ளன. அதனால், அவற்றை சாப்பிடுவதால் எந்த தீமையும் ஏற்படாது. விதை இல்லாத பழம் தீமையானது, மரபணு மாற்றப்பட்டது என்று கூறினாலும் அதன் தன்மையும், ஊட்டச்சத்தும் மாறுவது இல்லை. அதுவும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.