மாத்திரை அட்டையில் சிவப்பு கோடு இருக்கா? உஷார்! இல்லனா உயிருக்கே ஆபத்து!

Red line on medicine strip
Red line on medicine stripImage credit: ChatGPT
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

சில மருந்து அட்டைகளில் உள்ள சிவப்புப் பட்டையை நாம் எப்போதாவது கவனித்திருக்கிறோமா?

அது வெறும் அலங்காரத்திற்காக வைக்கவில்லை. பார்ப்பதற்கு சிறியதாகத் தோன்றும் இந்த விவரம், உள்ளே இருக்கும் மருந்தைப் பற்றிய ஒரு பெரிய செய்தியைக் கொண்டுள்ளது. ஆனால் பலர் இந்த முக்கியமான குறிப்பை கவனிக்கத் தவறி விடுவதுடன், மருத்துவரின் வழிகாட்டுதல் இல்லாமலே மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் செய்கின்றனர். இப்படி சுயமாக மருந்து எடுத்துக் கொள்வது ஆபத்தானது. சில சமயங்களில் இது நம் உயிருக்கே அச்சுறுத்தலாகவும் அமையலாம்.

சாதாரண 'ஓவர் தி கவுண்டர்' (OTC) எனப்படும் மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்கக்கூடிய மருந்துகளுக்கு நீல நிறக் கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வாங்கக்கூடிய மருந்துகள் நீல நிற செங்குத்துக் கோடுகளால் குறிக்கப்படுகின்றன.

அதிக ஆபத்துள்ள, மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே வாங்கக்கூடிய மருந்துகள் சிவப்பு நிறக் கோடுகளால் குறிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டும் தவறான மருந்துகள் மற்றும் தவறான மருந்து அளவுகளால் ஆண்டுதோறும் நிறைய இறப்புகள் ஏற்படுவதால் பொது பாதுகாப்பிற்கு இந்த ஒழுங்குமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சிலர் சில அறிகுறிகளை வைத்து தாமே இது இந்த நோய் தான் என்று நினைத்துக் கொண்டு, அதை குணப்படுத்துவதற்கு தாமாகவே மருந்துக் கடைக்குச் சென்று மருந்துகளை வாங்கி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் மருத்துவருக்கு கொடுக்க வேண்டிய கட்டணத்தை வேண்டுமானால் மிச்சப்படுத்தலாமே தவிர, இப்படி செய்வதால் நமக்குத் தெரியாமலேயே பல உடல்நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது. அத்துடன் இதுபோல் நாமாக மருந்துகளை எடுத்துக் கொள்வதால் முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டு, நமக்கு வந்திருக்கும் நோய் மோசமாகக் கூடிய சூழ்நிலையும் உருவாகிவிடும். எனவே மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற விழிப்புணர்வு மக்களிடையே அவசியம் வேண்டும்.

மாத்திரை அட்டையின் பின்புறம் சிவப்பு நிறக் கோடு (Red Line / Stripe) இருந்தால், அந்த மருந்தை ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல் வாங்கவோ அல்லது உட்கொள்ளவோக் கூடாது என்பதைக் குறிக்கிறது.

இது 'ஷெட்யூல் H' அல்லது 'ஷெட்யூல் H1' (Schedule H/H1) வகையைச் சேர்ந்த வீரியமிக்க மருந்துகள் ஆகும். சாதாரண கடைகளில் தன்னிச்சையாக வாங்கி பயன்படுத்தக் கூடாதவை.

இந்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி இந்த சிவப்புக் கோடு சில முக்கியமான காரணங்களுக்காக வைக்கப்படுகிறது.

Medicines
Medicines

மருத்துவர் சீட்டு கட்டாயம்:

இவற்றை மருத்துவர் சீட்டு இல்லாமல் வாங்கலாமா? என்றால் நிச்சயம் வாங்கக் கூடாது. இவை பொதுவாக ஷெட்யூல் ஹெச் அல்லது ஷெட்யூல் ஹெச் 1 வகையைச் சேர்ந்த வீரியமிக்க மருந்துகளாகும். (ஆன்டிபயாடிக்குகள், ஸ்டீராய்டுகள் அல்லது கடுமையான மனநல மருந்துகள்). இந்தியாவில் உள்ள மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின்படி (Drugs and Cosmetics Act) முறையான மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இந்த மருந்துகளை மருந்தகங்களில் விற்பனை செய்யக் கூடாது.

இதையும் படியுங்கள்:
60 வயதுக்கு மேல் என்ன சாப்பிட வேண்டும்? - நிபுணர் வழிகாட்டி!
Red line on medicine strip

ஏன் இந்த எச்சரிக்கை?

மருத்துவரின் ஆலோசனை இன்றி இந்த மாத்திரைகளை நாமாகவே உட்கொண்டால் கடுமையான பக்க விளைவுகள் (Side effects) ஏற்படலாம். குறிப்பாக ஆன்டி-பயாடிக் போன்ற மருந்துகளாக இருந்தால், மருத்துவரின் அனுமதி இன்றி சாப்பிடும் பொழுது உடலுக்கு ஆன்டி-பயாடிக் எதிர்ப்புத்திறன் ஏற்பட்டு, பிற்காலத்தில் அவசியப்படும்போது அந்த மருந்து வேலை செய்யாமல் போகலாம். நோயின் உண்மையான அறிகுறிகளை இது மறைத்து வேறு பாதிப்புகளை உருவாக்கக்கூடும்.

எனவே இது போன்ற சிவப்பு கோடு உள்ள மாத்திரைகளை நிச்சயமாக மருத்துவர் சீட்டு இல்லாமல் வாங்கக் கூடாது. மருந்துகளை வாங்குவதற்கு முன்பு காலாவதி தேதியை சரிபார்ப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு இந்த சிவப்புக் கோடு விழிப்புணர்வும் முக்கியமானதாகும்.

இதையும் படியுங்கள்:
தீக்காயம் ஏற்பட்டால் செய்யக்கூடாத தவறுகள் - முதல் 5 நிமிட முதலுதவி!
Red line on medicine strip

Reference:

logo
Kalki Online
kalkionline.com