

60 வயதாகி விட்டதா? அப்போது நீங்கள் 'யங் அடல்ட்' தான் என்கிறார் சத்துணவு மற்றும் உணவியல் நிபுணர் டாக்டர் தாரிணி கிருஷ்ணன். (Dr. Dharini Krishnan, Dietitian and Nutritionist)
இளம் முதியோர் பட்டியலில் வரும் போது மனதால் நமக்கு 60 ஆகி விட்டதே என்று நினைக்கவே கூடாது. அப்படி நினைக்க ஆரம்பித்தால் அது மனதளவிலும் உடலளவிலும் பாதிப்பைத் தரும் என்று ஆணித்தரமாகக் கூறும் டாக்டர் தாரிணியிடம், சரி டாக்டர், 60 வயதுக்கு மேல் என்னென்ன உணவு வகைகளை உட்கொள்ளலாம் என்று கேட்டோம்.
அதற்கு அவர், "அவரவர் ஜீரண சக்தியைப் பொறுத்தது. சிலருக்கு 80 வயது வரை ஜீரணக் கோளாறு இல்லாமல் இருக்கலாம்.
சிலருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, இருதயக் கோளாறு போன்றவை இருந்தால் அதற்கேற்றபடி தான் சாப்பிடமுடியும்.
பொதுவாக 60 வயதானவர்கள், உணவு உண்பதை நான்கு விதமாக வகைப் படுத்தலாம்.
முதல் வகை எந்த பெரிய உடல் பிரச்னையும் இல்லாமல் நார்மலாக இருப்பவர்கள் எந்த வகை உணவையும் 'அளவாக' எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக 60 வயதானவர்களில் சர்க்கரை போன்றவை இல்லாமல் செரிமானப் பிரச்னை மட்டும் உள்ளவர்களுக்கு, ஆவியில் வேக வைத்த உணவுகள் தான் நல்லது. இடலி, இடியாப்பம் போன்றவை சாப்பிடலாம்.
வாயுப் பிரச்னை இருப்பவர்களுக்கு ஓமம், ஜீரகம் நல்ல மருந்து. அதிக காரத்தைத் தவிர்க்க வேண்டும். கொதிக்கும் நீரில் சிறிது ஜீரகம் போட்டு, சில துளி நெய் விட்டு, அதை வடிகட்டிக் குடித்தால், வாயுப் பிரச்னை சரியாகும்.
சிலருக்கு அஜீரணமாகி, சாப்ப்பிட்டது எதிர்த்து வருவது போல் இருக்கும். ஒரு வெற்றிலை, கால் டீஸ்பூன் ஓமம், கொஞ்சம் கல்கண்டு, சிறிது கிஸ்மிஸ் பழம் இவற்றை நன்றாக கடித்து சாப்பிட்டால் அரை மணிக்குள் சரியாகி விடும்.
முதலில் லேசான லூஸ் மோஷன் போல வந்தால் கவலைப் படவேண்டாம். வயிறு சரியாகி செரிமானம் ஆகிவிடும்.
அடிக்கடி ஜீரணக் கோளாறு வந்தால், வாரம் இரண்டு முறை கொஞ்சம் வெற்றிலை மென்று தின்றால் போதும்.
மூன்றாவது வகை, சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளானவர்கள்.
சர்க்கரைக்கு மாற்றாக இப்போதுவரை இயற்கை சர்க்கரையான ஸ்டீவியா (Stevia) இருந்து வருகிறது.
விசேஷ நாட்களில் மட்டும், ஸ்டீவியா ஒரு சிட்டிகை போட்டு, பால் விட்டு, உடைத்த கோதுமை பாயாசம் சாப்பிடலாம்.
கொய்யாப் பழம், பப்பாளி, கெட்டி பேரிக்காய், சாத்துக்குடி, தர்பூஸ் பழங்கள் பரவாயில்லை.
ஆப்பிள், வாழைப்பழம்,பலாப்பழம், மாம்பழம் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
மதியமும், இரவும் காய்களை வேக வைத்து சூப் சாப்பிடுவது மிக நல்லது.
அல்லது மதியம் ஒரு கப் சாதம், இரண்டு கப் கறிகாய், ஒரு கப் புரத உணவு என்று சாப்பிட வேண்டும்.
நான்காவதாக அரிசிக்கு பதில் தினை, குதிரைவாலி அரிசி வகைகள் ரொம்ப நல்லது.
செரிமானப் பிரச்னை வரும் என்றால், இரண்டு பங்கு தினை, ஒரு பங்கு அரிசி என்று சாதம் வடித்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக் தினைக்கு மாறலாம்.
60 வயதில் எலும்பு, தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க புரதம் (Lean Proteins), நார்ச்சத்து, கால்சியம், விட்டமின் டி இவை இருக்கும் உணவுகள் அவசியம்.
முட்டை, மீன், பருப்புக்கள் (Lentils), முழு தானிய வகைகள், கீரைகள், காய்கறிகள், யோகர்ட், பனீர், பெர்ரி, சிட்ரஸ் பழங்கள் இவற்றில் இந்த சத்துக்கள் நிறைந்துள்ளன.
தகுந்த உணவு வகைகளுடன் அவை சரியாக செரிமானம் ஆக, 60 வயதானவர்கள் கண்டிப்பாக Strength Training பயிற்சி செய்ய வேண்டும்.
அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை கைகளைத் தூக்கிப் பிடித்து பழக வேண்டும். பின்னர் படிப்படியாக, இரண்டு கிலோ எடை கொண்ட பொருட்களை கைகளைத் தூக்கி பிடித்து பயிற்சி செய்தால் தசைகள் வலுவடையும்.
தேவையற்ற மன அழுத்தம், கவலைகள் இவற்றை விட்டு விட்டு, 30 களில் இருப்பது போல மனத்தையும் உடலையும் உற்சாகமாக வைத்து, எதிர்மறை எண்ணங்களை முற்றிலும் தவிர்த்து, வாழக் கற்றுக் கொண்டாலே 60 வயது, ஸ்வீட் சிக்ஸ்டி ஆகி விடும்."
என்று சிரித்தபடி சொல்கிறார் சத்துணவு மற்றும் உணவியல் டாக்டர் தாரிணி கிருஷ்ணன்.
மாதவிடாய் நின்ற பின் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) மற்றும் இதய நோய் வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்.