ரெய்கி என்பது ஒரு ஜப்பானிய வார்த்தை.
இதற்கு உள்ளார்ந்த அர்த்தங்கள் நிறைய உண்டு.
ரெய் என்றால் ஆன்மா என்பதில் ஆரம்பித்துப் பல அர்த்தங்கள் உண்டு. கி என்றால் வலிமையான ஆற்றல் என்ற பொருளில் ஆரம்பித்துப் பல அர்த்தங்கள் உண்டு. ரெய்கி என்றால் மர்மச் சூழல் என்றும் அற்புத அடையாளம் என்றும் கூறுவர். சுருக்கமாகச் சொல்லப் போனால் உலகளாவிய ஆற்றல் வாய்ந்த ஒரு சக்தியைப் பயன்படுத்தி அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் ஒரு சிகிச்சை முறை என்று ரெய்கிக்கான திரண்ட அர்த்தமாகக் கொள்ளலாம்.
இந்த ரெய்கியைக் கண்டுபிடித்தவர் மிக்காவோ உசுய் என்பவர். (பிறப்பு 1865, ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி மறைவு: 1926, மார்ச் மாதம் 9ம் தேதி)
மவுண்ட் குராமா என்ற மலை உச்சியில் தியானத்தில் ஆழ்ந்திருந்த மிக்காவோவுக்கு இருபத்தியோராம் நாள் ஒரு அசாதாரணமான ஆற்றல் தலைக்கு மேல் வந்தது. இதை அவர் உணர்ந்து தனது ரெய்கி முறையைக் கண்டுபிடித்தார்.
உடல், உள்ளம் மற்றும் உணர்ச்சி சார்ந்த நோய்களுக்கு ரெய்கி சிகிச்சை முறை நல்ல பலனைத் தருகிறது. மிக்காவோ தனது வாழ்நாளில் இதை இரண்டாயிரம் பேருக்குக் கற்பித்தார். இவர்களில் பதினாறு பேர்கள் மாஸ்டர் என்ற உயரிய நிலையை அடைந்தனர்.
இந்த ரெய்கி சிகிச்சை முறையில் நிபுணரான மாஸ்டர் இரு விதமாக தனது சிகிச்சை முறையைச் செய்வார். எவர் இந்த சிகிச்சைக்கு உட்படுகிறாரோ அவரை படுத்துக் கொள்ளச் சொல்வார். அவரது உடலைத் தேவையான அங்கங்களில் தன் உள்ளங்கையை வைத்துத் தடவி தன் ஆற்றலைப் பயன்படுத்துவார்.
அல்லது சிகிச்சைக்கு உட்படுபவரைத் தொடாமலேயே உடலுக்கு மேலே இருந்து உள்ளங்கை மூலமாகத் தன் ஆற்றலைப் பிரயோகிப்பார்.
இந்த சிகிச்சை முறையால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை என்பது இந்த சிகிச்சை முறையை அனைவரும் நாடுவதற்கான ஒரு நல்ல காரணமாகும்.
அறிவியல் ரீதியாக இந்த சிகிச்சை முறையை ஆராய்ந்து பார்த்ததில் இதன் பயனை அறிவியல் சோதனைகள் நிரூபிக்க முடியவில்லை.
ஆனாலும் உலகெங்கும் 800 பிரபலமான மருத்துவமனைகளில் இந்த முறை கையாளப்படுகிறது! அமெரிக்காவில் மட்டும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரெய்கியை மேற்கொள்கிறார்கள் என்பது வியப்பூட்டும் ஒரு உண்மை.
தூக்கமில்லாமல் இரவில் தவித்தல், தலைவலி, வயிற்றுவலி, சுளுக்கு, விளையாட்டுகளில் ஏற்படும் காயங்கள், மனச்சோர்வு உள்ளிட்டவை இந்த ரெய்கி சிகிச்சையை மேற்கொண்டவுடன் போய் விடுகிறது.
இன்னும் நாட்பட்ட டயபடீஸ் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளையும் ரெய்கி தீர்க்கிறது.
ரெய்கியின் பயன்கள் என்ன?
உடல் ரீதியாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. உடல் வலிமை கூடுகிறது. அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் சீக்கிரமே தமது பழைய வலுவைப் பெறுகின்றனர். வலியை உடனடியாகத் தீர்க்கிறது. வயது ஆவதால் வரும் ஆற்றல் குறைவைப் போக்குகிறது.
உளவியல் ரீதியாக மனச்சோர்வை நீக்குகிறது. விடாப்பிடியாக நீடிக்கும் தவறான பழக்கங்களைப் போக்குகிறது. கூரிய புத்தியையும் தெளிவான மனத்தையும் உறுதிப்படுத்துகிறது. ஆழ்மன சக்தியை ஊக்குவித்து வெளிப்படுத்துகிறது.
உணர்வு ரீதியாக மனதையும் மனம் சார்ந்த உணர்ச்சிகளையும் சமப்படுத்துகிறது. மன அமைதி ஏற்படுகிறது. மனநிலை மாறுபாடுகள் ஏற்படாமல் கவலை, ஏமாற்றம் உள்ளிட்டவை போய் அனைவரும் விரும்பும் ஒரு ஆளுமையைத் தருகிறது.
கர்ம வினைகளைப் போக்கி ஆன்மீகத்தில் உயர்நிலையை ஏற்படுத்துகிறது.
ஒரே ஒரு எச்சரிக்கை: இதை நல்ல ஒரு தேர்ந்த மாஸ்டரிடம் (நிபுணரிடம்) சென்று சிகிச்சையை எடுக்க வேண்டும். அவரிடமே இதைக் கற்கவும் செய்யலாம்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.