

அரிசி தவிடு எண்ணெய் (Rice bran oil) என்பது அரிசி உமி அல்லது அரிசியின் கடினமான வெளிப்புற பழுப்பு அடுக்கில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை சமையல் எண்ணெய் ஆகும்.
இதில் உடலுக்கு தேவையான நுண்ணூட்டங்களான கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் சத்து, வைட்டமின் ஏ, பி, ஒமேகா 3 அமிலம், மக்னீசியம் போன்றவையும், புரதச்சத்தும் மிகுந்துள்ளன.
இந்த எண்ணெயில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன.
அரிசி தவிடு எண்ணெயில் ஓரிசனால் மற்றும் டோகோபெரோல்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிரம்பியுள்ளன. அவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாப்பதன் மூலம், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
கொழுப்பு அளவைக் குறைக்கும் என்பதால், அரிசி தவிடு எண்ணெய் எடையை குறைப்பதிலும் உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமான எடை இழப்பிலும் பங்கு வகிக்கும்.
அரிசி தவிடு எண்ணெயில் உள்ள ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும், லினோலிக் அமிலமும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உடலின் அழற்சி எதிர்வினையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த அமிலங்கள் மூட்டு வலியைக் குறைக்கவும் மற்றும் கை, கால் வீக்கங்களை நீக்கவும் உதவுகின்றது.
நீரிழிவு நோயாளிகளுக்கு அரிசி தவிடு எண்ணெய் ஒரு சிறந்த தேர்வாகும். இந்த எண்ணெயில் குறைந்த கிளைசெமிக் சுமை மற்றும் நன்மை பயக்கும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து இருப்பது இன்சுலின் சுரப்பதை மேம்படுத்தவும், ஆரோக்கியமான இரத்த சர்க்கரை ஒழுங்குமுறையை ஆதரிக்கவும் உதவுகின்றன.
இதில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், இது முடி நரைப்பதை கூட தடுக்க உதவுகிறது.
அரிசி தவிடு எண்ணெயில் கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இரண்டு ஆக்ஸிஜனேற்றிகளான லுடீன் மற்றும் ஜீயாக்சாந்தின் உள்ளன. இந்த சேர்மங்கள் கண்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. கண்புரை நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.
அரிசி தவிடு எண்ணெயில் உள்ள ஓரிசானால், நம் உடலில் HDL எனும் நல்ல கொழுப்பைப் பராமரிப்பதோடு மட்டுமின்றி, அதே வேளையில் LDL எனும் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே, இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த சமையல் எண்ணெய்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
அரிசி தவிடு எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்திற்கு ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைசராக அமைகின்றன. சருமத்தின் சுருக்கங்களைக் குறைக்கவும், சருமத்தை ஈரப்பதமாக வைப்பதற்கும் இந்த எண்ணெய் உதவுகின்றது.
அரிசி தவிடு எண்ணெய் அதிக ஸ்மோக் பாயிண்ட் (450°F ) கொண்டது. அதீத வெப்பநிலை உள்ள உணவுகளுக்கு இது மிகவும் ஏற்றது. குறிப்பாக, பொரித்து எடுக்கும் உணவு வகைகளுக்கு இந்த எண்ணெய் சிறந்தது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)