இப்படியெல்லாம் சமைத்தால் உடம்பு கெட்டுத்தான் போகும்... உஷாரா இருக்கணும் மக்களே!
தவறான முறையில் உணவை சமைப்பதால் , அதை சாப்பிடும் நபர்களுக்கு ஆரோக்கிய சீர்கேட்டை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக அதே முறையை பின்பற்றி சமைக்கும் போது புற்றுநோயை ஏற்படுத்தலாம். அதனால் , சில விதிகளை உணவு சமைப்பதில் கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக வாழ முடியும். அந்த விதிகள் என்னவென்று பார்ப்போம்.
1. சர்க்கரை மற்றும் எண்ணெய்
உணவுகளில் அதிக எண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்ப்பதை தவிர்க்கவும். அதிக எண்ணெயும் சர்க்கரையும் உடலில் கொழுப்பு சேர்வதை அதிகரிக்கிறது. இந்த கொழுப்புகள் கல்லீரலில் படிந்து கொழுப்பை அதிகரிக்கின்றன. இது கொழுப்பு கல்லீரல் நோயை ஏற்படுத்தும் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அதனால் உணவுகளில் எண்ணெயையும் சர்க்கரையும் தவிர்க்கவும்.
2. பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளில் , உணவு கெட்டு போகாமல் இருக்க வைக்கும் ஏராளமான ரசாயனங்கள், வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. இந்த வேதிப்பொருட்கள் உணவில் எளிதில் கலந்து விடுகின்றன.
சரியாக முறையில் அதை சுத்தப்படுத்தி பயன்படுத்தினாலும் உணவுப் பொருட்கள் உள்ளே உள்ள ரசாயனம் அங்கேயே தங்கி விடுகிறது. அந்த ரசாயனங்கள் உடலுக்குள் செல்லும் போது கல்லீரல், குடல் ஆகியவற்றை பாதிக்கிறது. இவை புற்றுநோயின் தாக்கத்தை அதிகரிக்கும். அரிதான நேரங்களில் தவிர மற்ற நேரங்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து விடுங்கள். பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உள்ளடக்கிய சீரான உணவை உண்ணுங்கள்.
3. அதிக வெப்பநிலை
அதிக வெப்பநிலையில் உணவுகளை சமைக்க கூடாது. சமையல் எண்ணெயை அதிக வெப்பநிலையில் சூடாக்கும்போது, அது பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) மற்றும் ஹீட்டோரோசைக்ளிக் அமின்கள் (HCAs) போன்ற நச்சு கலவைகளை உருவாக்கி உணவுக்குள் சேர்க்கிறது. இவை நேரடியாக புற்றுநோயை உருவாக்கும். அதிக வெப்பத்தில் இறைச்சியை சமைத்து உண்பது மேலும் புற்றுநோய் அறிகுறிகளை அதிகரிக்க கூடும். அதனால் எப்போதும் உணவுப் பொருட்களை எண்ணெயில் குறைந்த வெப்பநிலையில் வறுக்க வேண்டும். அதே நேரம் ஒருமுறை சூடுபடுத்திய எண்ணெயைப் மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
4. கருக்கிய உணவுகள்
இறைச்சிகளை பார்பிக்யூ அல்லது கிரில் செய்யும் போது அதிகளவில் அதை கருக்க கூடாது.
இறைச்சியின் கருகிய பாகங்கள் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்களை உருவாக்குகிறது. இந்த இரசாயனங்கள் கல்லீரல் மற்றும் பிற உறுப்புகளை சேதப்படுத்தி புற்றுநோயை உருவாக்கும் அபாயம் உள்ளது. அதனால் கருகிய பகுதிகளை உட்கொள்ளாமல் தவிர்க்கலாம். இறைச்சியை மசாலாவில் ஊற வைத்து வேக வைத்து உண்பது தான் ஆரோக்கியமான உணவு முறையாக இருக்கும்.
5. பிளாஸ்டிக் பை மற்றும் அலுமினிய பெட்டிகள்
சூடான கொதிக்கும் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வாங்குவதையும் , அலுமினியம் கவர்களில் நீண்ட நேரம் சுற்றி வைக்கும் உணவுப் பொருட்களையும் , அலுமினிய பெட்டிகளில் சூடான உணவுப் பொருட்களை வைத்திருந்து சாப்பிடுவதை தவிர்க்கவும் . இந்த பொருட்களில் சூடு சேரும் போது புற்றுநோயை உண்டாக்கும் மோசமான வேதிப் பொருட்கள் உருவாகின்றன. அவை உணவில் சேர்ந்து புற்றுநோயை உண்டாக்கும் அபாயத்தை அதிகரிக்க செய்கின்றது. உணவுப் பொருட்களை எப்போதும் வீட்டில் இருந்து பாத்திரங்களை எடுத்துச் சென்று பார்சல் வாங்கவும்.
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதும், போதுமான அளவில் உடற்பயிற்சி செய்வதும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும். ஒவ்வொரு வருடமும் முழு உடற்பரிசோதனைகளையும் தவறாமல் செய்யுங்கள்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.