

சோசியல் மீடியாக்களில் வைரலாகும் புல்லட் காபி, காபி பவுடர், உப்பு இல்லாத வெண்ணெய் அல்லது நெய், எம்.சி.டி ஆயில் சேர்த்து தயாரிக்கப்படும் உயர் கொழுப்பு பானம். இது ஞாபக சக்தி, கவனம், பசியைக் கட்டுப்படுத்துதல், கீட்டோ டயட்டில் எடை இழப்பு, நாள் முழுவதும் சீரான ஆற்றல் போன்ற பலன்களை தரும் என கூறப்படுகின்றது; ஆனால் அதிக கலோரி காரணமாக அளவோடு மட்டுமே பருக வேண்டும்.
தற்போது, சோசியல் மீடியாக்களை திறந்தால், ஃபிட்னஸ் பிரியர்களின் கைகளில் ஒரு புதிய வகை பானம் வலம் வருவதை பார்க்க முடியும். அதுதான் 'புல்லட் காபி' (Bulletproof Coffee). இந்த காபி, உலக அளவில் ஃபிட்னஸ் உலகத்தில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வாருங்கள்.. இது குறித்து தெரிந்துகொள்வோம்.
புல்லட் காபி என்றால் என்ன?
பாரம்பரியமாக நாம் குடிக்கும் காபியில் பால், சர்க்கரை அல்லது க்ரீம் சேர்க்கப்பட்டிருக்கும்.
ஆனால், புல்லட் காபியில் காபி பவுடர், உப்பு சேர்க்கப்படாத வெண்ணெய் அல்லது தரமான நெய் மற்றும் எம்.சி.டி ஆயில் (MCT Oil - Medium Chain Triglycerides) எனப்படும் தேங்காய் எண்ணெயில் உள்ள மூலக்கூறு எண்ணெய் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இவை அனைத்தும் சேர்ந்து மிக்ஸியில் நன்கு அடிக்கப்படும்போது, காபி பார்ப்பதற்கு ஃபோம் நிறைந்த மில்க் ஷேக் போல மாறும்.
புல்லட் காபி ஆரோக்கிய நன்மைகள்:
ஞாபக சக்தி:
புல்லட் காபியில் உள்ள எம்.சி.டி கொழுப்புகள் மற்றும் காஃபின் இரண்டும் இணைந்து மூளைக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன. காஃபின் தரும் நரம்பு மண்டல சுறுசுறுப்புடன், ஆரோக்கியமான கொழுப்புகள் சேரும்போது மூளையின் ஞாபக சக்தி மற்றும் கவனம் மேம்படுவதாக ஆய்வுகள் கூறப்படுகிறது.
பசியைக் கட்டுப்படுத்துதல்:
இதில் உள்ள அதிகப்படியான நல்ல கொழுப்பு சத்து, செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருப்பதுடன், மீண்டும் மீண்டும் எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அல்லது சர்க்கரை பசி கட்டுப்படுத்தப்படுகிறது.
எடை இழப்பு மற்றும் கெட்டோஜெனிக் டயட்:
இது 'கீட்டோ டயட்' (Keto Diet) பின்பற்றுபவர்களிடையே மிகவும் பிரபலமானது. கார்போஹைட்ரேட் இல்லாததால், உடல் குளுக்கோஸுக்கு பதிலாக உடலில் தேங்கியுள்ள கொழுப்பை எரிபொருளாக மாற்றத் தொடங்குகிறது. இதனால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.
சீரான ஆற்றல்:
வழக்கமான சர்க்கரை காபி குடிக்கும்போது திடீரென சர்க்கரை அளவு உயர்ந்து பின்பு சட்டென சோர்வு ஏற்படும். ஆனால், புல்லட் காபியில் உள்ள கொழுப்பு காஃபினை மெதுவாக ரத்தத்தில் கலக்கச் செய்வதால், நாள் முழுவதும் உடல் சோர்வின்றி ஒரே சீரான ஆற்றலுடன் இயங்க உதவுகிறது.
கவனிக்க வேண்டிய எச்சரிக்கைகள்:
இதில் நன்மைகள் இருந்தாலும், இது அனைவருக்கும் பொதுவானதல்ல. இதில் கலோரிக்கள் மிக அதிகம் என்பதால், அளவாக உட்கொள்ளாவிட்டால் உடல் எடை அதிகரிப்பதற்கும், கொழுப்புச் சத்து தொடர்பான சிக்கல்களுக்கும் வழிவகுத்துவிடும். இதய நோயாளிகள் அல்லது மருத்துவக் கட்டுப்பாடு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்ற பிறகே இதனை முயற்சிக்க வேண்டும்.
சரியான முறையில் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துடன் சேர்த்து அருந்தும்போது, இந்த புல்லட் காபி நவீன காலத்தின் ஒரு அற்புதமான எனர்ஜி டானிக்காக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
சோர்வை விரட்டிவிட்டு நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கவும், உடலின் தேவையற்ற கொழுப்பை இயற்கையான முறையில் கரைத்து உங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ளவும் இந்த நவீன பானம் பெரிதும் உதவும்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference