

வாக்கிங்கும் இரண்டு லிட்டர் தண்ணீரும் போதும்! முதுமையிலும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நடிகர் சிவக்குமார் கூறும் அறிவுரைகள்...
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான ஹீரோக்களாக வலம் வரும் சூர்யா, கார்த்தியின் தந்தையான நடிகர் சிவக்குமார் பழம்பெரும் நடிகர்களில் மிகவும் ஆரோக்கியமாகவும் இளமையுடனும் உற்சாகமான குரல் வளத்துடனும் இருக்கிறார். அவர் 84 வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பதற்கான காரணங்களை பகிர்ந்துள்ளார். அவற்றை இப்பதிவில் காண்போம்.
நடிகர் சிவக்குமாரின் சுறுசுறுப்புக்கு காரணமானவை:
தன்னுடைய வாழ்நாளில் தினமும் நடிகர் சிவக்குமார் வாக்கிங் செல்வதன் மூலம் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் உடலில் எல்லா நச்சுக்களையும் வெளியேற்ற தினமும் இரண்டு லிட்டர் தண்ணீரை குடிப்பதாக தெரிவித்துள்ளார்.
இன்றைய சூழலில் நீண்ட நேரம் கம்ப்யூட்டரை பார்ப்பதால் பல இளைஞர்களுக்கு கண் பிரச்னை இருக்கிறது. தினமும் 8 - 10 மணி நேரம் கணினியில் வேலை பார்ப்பவர்கள் அவ்வப்போது கண்களை சிமிட்டினால் கண்களில் உள்ள திரவம் உயிர்ப்பெற்று கண்ணாடி போடும் நிலையில் இருந்து நம்மை காக்கும் என்று அறிவுரை கூறியுள்ளார். நடிகர் சிவக்குமார் 1965 ஆம் ஆண்டு முதல் யோகா செய்து வருவதால் தன்னுடைய 65 வயது வரை தலைகீழாக நிற்கும் அளவுக்கு பிட் ஆக இருந்ததோடு 85 வயதிலும் ஆரோக்கியமாக நடப்பதாக கூறியுள்ளார்.
மிகப்பெரிய சிகிச்சைகளுக்குப் பிறகு மருத்துவர்கள் எழுந்து நடக்கச் சொல்வார்கள். இரண்டாவது இதயமாக இருக்கும் கால்கள் சரியாக இயங்கினால் உடல் சரிவர இயங்கும். ஆகவே வாக்கிங் சென்றால் மூட்டு நலமுடன் இருந்து நலமான வாழ்வு வாழலாம் என்று தன் அனுபவத்தின் அடிப்படையில் கூறியுள்ளார்.
நடிகர் சிவக்குமார் தினமும் காலை நேரத்தில் 40-45 நிமிடங்கள் வாக்கிங் செல்வதாகவும், ஷார்ட்ஸ் மட்டும் போட்டுக் கொண்டே சட்டை இல்லாமல் வீட்டின் மொட்டை மாடியில் நடப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு நடக்கும் போது சூரிய ஒளியில் இருந்து சருமத்துக்கு வைட்டமின் டி சத்து கிடைப்பதோடு வியர்வை மூலம் நச்சுக்கள் நீங்கி விடுவதாக தெரிவித்துள்ளார்.
வாக்கிங் ஒன்றே மற்ற எல்லா உடற்பயிற்சிகளையும் விட முதியவர்களுக்கு மிக முக்கியம் எனக் கூறும் சிவக்குமார், வெயிட் தூக்குவது குறிப்பிட்ட வயதிற்கு மேல் எல்லோராலும் செய்ய முடியாது. மேலும் உடற்பயிற்சி சாதனங்களுக்கு அனைவராலும் செலவு செய்ய முடியாது. ஆகவே தான் எல்லா வயதினருக்கும் ஏற்ற நடைபயிற்சியை பரிந்துரைப்பதாக சிவக்குமார் கூறியுள்ளார்.
வாக்கிங் செய்தவர்கள் 80-90 வயது வரை நம்முடைய கிராமங்களில் வாழ்வதை காணலாம். ஆகவே உடற்பயிற்சி சாதனங்கள் இல்லாத இந்த எளிய பயிற்சிகளை அனைவரும் நிச்சயமாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
நடிகர் சிவக்குமார் செரிமானத்திற்கு சிரமம் தரும் அசைவ உணவுகளை 1988ம் ஆண்டு முதல் அதிகம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடும் உணவில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கேற்ற சத்தான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
"என்னைப் போலவே யோகாவையும் உடற்பயிற்சியையும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் நலமோடு இருக்கலாம்," என நடிகர் சிவக்குமார் தன்னுடைய பிட்னஸ் சீக்ரட் அனைவரிடமும் பகிர்ந்துள்ளார். 84 வயது முதுமையிலும் ஆரோக்கியமாக இருக்க இதுதான் காரணம் என பேசியுள்ளார்.
வயது ஏற ஏற ஓய்வெடுக்க வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்துபவர்கள், சிவக்குமார் கூறிய அறிவுரைகளின் படி தினமும் யோகா, வாக்கிங், 2 லிட்டர் தண்ணீர், சத்தான உணவு என வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டால் நூறு வயதிலும் வேகமான நடையுடனும் தெளிவான பேச்சுடனும் ஆரோக்கியமாக வாழலாம்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.