
ஊட்டச்சத்து என்பது ஒரு உயிரினம் உயிர் வாழ்வதற்கும், வளர்ச்சி அடைவதற்கும் உணவிலிருந்து பெறும் அத்தியாவசியப் பொருட்கள். இது ஆற்றல், வளர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் மற்றும் பிற கூறுகளை உள்ளடக்கியது. போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெறுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்கு இன்றியமையாதது.
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
பெரு ஊட்டச்சத்துக்கள் (Macronutrients): புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு. இவை உடலுக்கு அதிக அளவில் ஆற்றலை வழங்குகின்றன.
நுண்ணூட்டச்சத்துக்கள் (Micronutrients): வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள். இவை உடலின் செயல்பாடுகளுக்கு சிறிய அளவில் தேவைப்படுகின்றன.
நல்ல ஊட்டச்சத்து பெற்ற, திடமான உடல், மனதளவில் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய மக்களால் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்த முடியும்.
ஆனால், நம் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் பெரும்பான்மையினருக்கு தங்களது உணவில் போதிய கலோரி சக்தி கிடைப்பது இல்லை. ஆற்றல் மிக்க உணவுகளும் கிடைப்பதில்லை. இது போன்ற காரணங்களால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
ஊட்டச்சத்து குறைவால் மக்களின் அறிவுத்திறன், உடல் வலிமை மற்றும் சக்தி குறைவு ஏற்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. மேலும் உற்பத்தி திறன் பாதிக்கப்படுகிறது. பொது சுகாதார முறையில் அதிக செலவு ஏற்படுவதால், அது நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் அடிக்கடி உடல் நலப் பிரச்னைக்கு ஆளாகின்றனர். பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளால் அறிவாற்றலும், கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் ஈடுபாடும் இல்லாமல் போவதால், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வியும் பயனற்றதாகிறது.
தாய்க்குப் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை, குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், வயிற்றில் வளரும் சிசுவுக்கு மோதிய ஊட்டச்சத்தின்மை போன்ற காரணங்களால் அவர்களிடம் கிரகிக்கும் திறன் குறைந்து வருகிறது. இதனால் பள்ளிகளில் அவர்களின் திறமை குறைந்து படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு போகிறார்கள். இதனால் படிப்பில் இடை நில்லல் விகிதம் அதிகமாக இருக்கிறது.
நமது நாட்டில் பிறக்கும் நான்கில் ஒரு குழந்தை எடை குறையுடன் பிறக்கிறார்கள். பாதி பேர் புரதச்சத்து குறைந்த நிலையில் பாதிக்கப் படுகின்றனர். பெரியவர்களில் மூன்றில் ஒருவர் ஊட்டச்சத்து குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் ஆயிரம் பேருக்கு 60 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் இறந்தே பிறக்கின்றன. அதே வேளையில் மகப்பேறு சமயத்தில் ஊட்டச்சத்து குறைவால் கர்ப்பிணிகள் இறப்பும் அதிகரிக்கிறது.
ஊட்டச்சத்து குறைவால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும் தான். குறைந்த கல்வி அறிவு, ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, சுகாதாரம், வறுமை ஆகியவையே இதற்குக் காரணம்.
எடை இழப்பு மற்றும் பசியின்மை, சோர்வு மற்றும் எரிச்சல், வளர்ச்சி குன்றிய நிலை, இரத்த சோகை போன்றவை ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள். சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க, சத்தான மற்றும் சரிவிகித உணவை உண்பது மிகவும் அவசியம்.
ஊட்டச்சத்து குறையாமல் இருக்க வீட்டில் சமையல் செய்த எளிய உணவுகளே போதுமானது. விலை குறைந்த முழு தானியங்கள், கீரைகள், முருங்கைக்காய், கத்திரிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற நாட்டுக் காய்கறிகள், கொய்யா, மாதுளை என அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள்.
ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த வீட்டில் இருக்கும் ஓமம், சீரகம் சேர்த்து சமைப்பது, சமையலுக்கு செக்கில் ஆட்டிய நாட்டு எண்ணெய் போன்றவைகளை பயன்படுத்தி வந்தாலே போதுமானது ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படாது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)