

தோள்பட்டை மற்றும் மேல் கை வலி பிரச்னைகள் குறித்த சந்தேகங்களுக்கு டாக்டர். ராம் சிதம்பரம் (Orthopedic, Shoulder & Upper Limb Specialist Surgeon Chennai Upper Limb Unit @ MGM Healthcare) பதிலளிக்கிறார்.
தோள்பட்டை அல்லது கைகளில் வலி ஏதாவது நோயின் அறிகுறியா? எந்த உறுப்பு பாதிக்கப்பட்டால் தோள்பட்டை வலி வரும்? - பாலாஜி, பெங்களூரு
ஆஞ்சைனா (Angina) என்னும் இருதய பிரச்னை இருப்பவர்களுக்கு இடது தோள்பட்டை, மேற்புறம் கைகளில் வலி வரலாம். இது Referred Pain எனப்படும். இதயத்துக்கும், தோள்பட்டைக்கும் ஒரே நரம்பு செல்வதால், இதய வலி, தோள்களில் உணரப்படும்.
இடது தோள் வலி வந்தால் பலருக்கும் இதயநோயின் அறிகுறியோ என்று அச்சம் ஏற்படும். ஆனால் இதயபாதிப்பு இருந்தால், இந்த வலியோடு, மார்பில் ஒரு இறுக்கம், அசௌகரியமான நிலை, மார்பில் படபடப்பு, வியர்த்தல் போன்றவையும் சேர்ந்தே இருக்கும்.
பொதுவாக தோள்பட்டை பாதிப்பினால் வரும் வலி முழங்கைக்குக் கீழே வராது. சிலருக்கு கழுத்து எலும்பு தேய்மானத்தினால், அந்த நரம்பு பாதிக்கப்பட்டு, தோள்பட்டை வலி வந்து அப்படியே முன்கைகள், விரல்கள் வரை வலி வரும். இதை Radiating Pain என்கிறோம்.
கழுத்து எலும்பு தேய்மானம் அடைவது எதனால்? அதன் அறிகுறிகள் என்ன? அதை எப்படி சரி செய்வது? - அப்துல்சலாம், திருச்சி
கழுத்தில் வலி, கழுத்தை அசைக்க முடியாமல் இருப்பது, தவிர கழுத்திலிருந்து வரும் நரம்பில் அழுத்தம் காரணமாக வரும் வலி Radiating Pain ஆகும். அல்லது Sensory நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டால் மரத்துப் போதல் (Numbness) தசைகளின் பலவீனம், இவை இருந்தால் Nerve root pressure காரணமாக இருக்கும்.
இவற்றுக்கெல்லாம் வயதாவது ஒரு காரணம். கழுத்து அதிகமாக குனிந்தே வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்பு மற்றொரு காரணம். லேப்டாப்பில் குனிந்தே வேலை செய்பவர்கள், மணிக்கொரு முறையாவது நிமிர்ந்து கழுத்தை நாலு புறமும் அசைத்து பயிற்சி தரவேண்டும்.
பொதுவாக தோள்பட்டை வலி, தேய்மானங்களுக்கு பொதுவான காரணங்கள், மூப்பு, அதிக பயன்பாடு, அடிபடுதல் இவைதாம்.
தனக்கு Shoulders Arthritis இருப்பதாகவும் சிகிச்சை எடுத்துக் கொள்வதாகவும் என் உறவினர் கூறுகிறார். அவர் ஒரு டென்னிஸ் வீரராக இருந்தவர். அதனால் பாதிப்பு வந்திருக்குமா? அறுவை சிகிச்சை தேவைப்படுமா? - சந்திரமௌலி, போரூர்
நம் உடலின் எல்லா பந்துகிண்ண மூட்டுக்களுக்கு அருகேயும் Cartilage திசு (குஷன் போல செயல்பட) இருக்கும். அதிக வேலை செய்வதால், பளு தூக்குவதால், அல்லது வயதாகும்போதோ, இது தேய்மானம் அடையும்.
தோள்பட்டை Arthritis
முழங்காலில் Arthritis வருவதுபோல், தோள் எலும்பிலும் வரும். ஆனால் முழங்கால் நம் உடல் எடை முழுவதும் தாங்குவதால், 50 வயதிலேயே சிலருக்கு Arthritis வந்துவிடுகிறது. ஆனால் தோள்பட்டை Arthritis, அநேகமாக 60 அல்லது 70 வயதில்தான் வரும். இது Primary Arthritis.
Secondary Arthritis என்பது, இளம் வயதில் ஏதாவது விபத்தில் அல்லது விளையாட்டில் அடிபட்டால், பந்து கிண்ண மூட்டில் பந்து நழுவி அந்த ஸாக்கெட்டில் உராய்வு ஏற்பட்டு Cartilage தேய்மானம் அடையும்.
மூன்றாவதாக autoimmune condition குறைபாட்டால் உண்டாகும் கீல் வாதம் (Rheumatoid arthritis) அல்லது முடக்கு வாதம்.
இதற்கு நவீன மருத்துவம் இருப்பதால் இப்போதெல்லாம் அதிகம் காணப்படுவதில்லை. இதற்கு தொடர்ந்து மருந்துகள் உட்கொண்டு, மானிட்டர் செய்து வந்தால் போதும்.
இதற்கெல்லாம் அறுவை சிகிச்சை தேவையில்லை. பிசியோதெரபி, வலி நிவாரணிகள் போதும். நம் தினசரி செயல்பாட்டு முறைகளை (Activity Modification) மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்றிக்கொண்டால் போதும்.
ஆனால், இளம் வயதில் Arthritis பாதிப்பு வந்தால் கீஹோல் அறுவை சிகிச்சை (Keyhole Surgery) மூலம் பந்து கிண்ண மூட்டின் அமைப்பை சரிசெய்து (சர்வீஸ் செய்வது போல) விடலாம்.
தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை (Shoulder Replacement)
பந்துகிண்ண மூட்டு மிகவும் பழுதடைந்து, தேய்ந்து போயிருந்தால், அல்லது தசைநார் கிழிந்து விட்டது என்றால் வலி அதிகமாக இருக்கும். அசைவுகள் பாதிக்கப்படும்.
அப்போது மிக வெற்றிகரமாக தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை (Shoulder Replacement) செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட பந்து கிண்ண மூட்டின் தலை பாகத்தை மட்டும் மாற்றி, அறுவை சிகிச்சை செய்கிறோம்.
தலைகீழ் முட்டு மாற்று அறுவை சிகிச்சை
சிலருக்கு பந்துகிண்ண மூட்டு முழுவதுமாக பாதிக்கப்பட்டிருந்தால், ஃப்ரென்ச் தொழில் நுட்பமான Reverse Shoulder Replacement, அதாவது தலைகீழ் முட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்கிறோம். இவை கொஞ்சம் சிக்கலான அறுவை சிகிச்சைகள்தான்.
அறுவை சிகிச்சை செய்த பின், பாதிக்கப்பட்டவருக்கு தோள்பட்டை அசைவுகள் எளிதாகும். அடுத்த நாளே கைகளை அசைக்க முடியும்.
Shoulder Replacement செய்த பின் மூன்று மாதங்களுக்குள் எல்லா வேலைகளையும் செய்யமுடியும். சென்னையில் 2012 ம் ஆண்டிலிருந்து இந்த அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து வருகிறோம்.
தோள்பட்டை மற்றும் மேல்கைகள் வலி வரக் காரணம் என்ன டாக்டர்? அதிலும் குறிப்பாக இரவில் வலி ஏற்படுகிறதே? எனக்கு கொலஸ்ட்ரால் உண்டு அதனாலா? - ருக்மணி சுவாமினாதன், சென்னை
தோள் வலி வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன ருக்மணி மேடம்.
வயது
இளம் வயதில், 20 களில், விளையாட்டுக்களில் ஈடுபடும்போது அல்லது விபத்துக்கள் காரணமாக தோள்பட்டை நழுவுதல் (Shoulder Dislocation) போன்றவை காரணமாகலாம்.
நடுவயதில் தோள் வலி வருவதற்கு பொதுவாக நான்கு காரணங்கள் அடிப்படையாக இருக்கும். Rotator Cuff என்பது தோளின் தசைகள் மற்றும் தசைநார்களின் இணைப்பு. இவைதாம் நம் தோள் பட்டை அசைவுகளுக்கு காரணம்.
தசைனார் கிழி (Rotator Cuff tear)
முதல் காரணமாக, கீழே விழுந்து அடிபடுவதாலோ, வயதாவதாலோ, அதிக வேலைகளாலோ தசைனார் கிழியலாம். (Rotator Cuff tear) இதனால் கையை பின்புறம் அல்லது மேல்பக்கம் அசைக்க முடியாதபடி வலி இருக்கும்.
Frozen shoulder எனப்படும் தோள்பட்டை உறையும் நிலை
அடுத்த காரணம், Frozen shoulder எனப்படும் தோள்பட்டை உறையும் நிலை. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு அதிகமாக வர வாய்ப்பு உண்டு. தோள்பட்டை, பந்துகிண்ண மூட்டை உட்புறமாக ஒட்டியுள்ள ஜவ்வு (Capsule) இறுகிப்போய்விடுகிறது. அதனால் அசைவுகள் பாதிக்கப்படுகின்றன.
இது மூன்று நிலைகளில் உண்டாகும்.
முதல் நிலை கையே தூக்க முடியாத அளவுக்கு வலி உண்டாகும். இது உறையும் நிலை- Freezing
இரண்டாவது நிலை Frozen. கை மொத்தமாக அசைவின்றி உறைந்தாற்போல் ஆகிவிடும்.
கொஞ்சம் கொஞ்சமாக மூன்று முதல் ஆறு மாதம் வரையில் பிசியோதெரபி, வலி நிவாரண மருந்துகள் மூலம் மெதுவாக குணமாகும்.
Osteoporosis என்னும் எலும்பு பலவீனம்
மூன்றாவது காரணம், அடிபட்டு எலும்பு முறிவு ஏற்படுவது. சிலருக்கு Osteoporosis என்னும் எலும்பு பலவீனம் இருக்கும். ஏதாவது அடிபட்டால், பந்து கிண்ண மூட்டில் (Ball and Socket Joint) பந்து மூட்டு உடைந்து வலி ஏற்படலாம். எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கவேண்டும். அதன் பின் சிகிச்சை தொடரவேண்டும்.
Calcific Tendinitis என்னும் கால்சியம் படிவது
நான்காவது காரணம், Calcific Tendinitis என்னும் கால்சியம் படிவது. தசைநார்களில் அடிபட்டோ அல்லது வயதாவதாலோ, லேசாக கிழிந்து ஒரு அழற்சி உண்டாகி, அதிக அளவில் கால்சியம் டெபாசிட் ஆகி அதிக வலியை உண்டு பண்ணும். இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படாது. வலி நிவாரணிகள் மூலம் குணப்படுத்தலாம்.
இரவில் வலி ஏன் வருகிறது அல்லது அதிகமாகிறது?
இரவில் வலி ஏன் வருகிறது என்று கேட்டிருக்கிறீர்கள்.
குறிப்பிட்ட தோளில் Frozen shoulder உள்ளவர்கள், அந்தப் பக்கமாகப் படுத்தால், அழுத்தம் காரணமாக வலி அதிகரிக்கும். இரவில் தோள் வலி அதிகமாக வந்தால் Rotator Cuff tear இருக்கும் வாய்ப்பு அதிகம்.
தோள்பட்டை வலி வர அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருப்பது ஒரு காரணமா?
அதிக அளவில் கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு தோள்பட்டை வலி வர வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் தெரிந்தாலும் நேரடியாக தொடர்பு இல்லை.
தோள்பட்டையில் கேன்சர்
அபூர்வமாக கேன்சர் தோள்பட்டையின் பந்துகிண்ண மூட்டில் வரலாம். முதல் நிலை கேன்சர், இணைப்பு திசுவான கார்டிலேஜ் (Cartilage) பகுதியில் வரும். இரண்டாம் நிலை கேன்சர், மார்பக அல்லது நுரையீரல் புற்று நோய் பாதித்தவர்களுக்கு, அது பரவி, தோள்பட்டையில் வரலாம்.
இப்படி பல காரணங்கள் தோள் வலியை ஏற்படுத்துகின்றன.