1) மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பாலில் கலந்து கொடுக்க தண்ணீராக போகும் பேதி நிற்கும்.
2) மாங்கொட்டை பருப்பு குடலில் உள்ள புழுக்களை நீக்கி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
3) மாங்கொட்டை பருப்பு ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் செரிமானத்தை தாமதப்படுத்தி ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
4) மாமரத்தின் இடம் தனி நிலைகளை பறித்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் இரண்டு ஸ்பூன் எடுத்து ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய்க்கு சிறந்தது.
5) மாவிலைகளை பொடி செய்து அதைக் கொண்டு பல் தேய்க்க பற்கள் உறுதியாகவும் பளிச்சென்றும் இருக்கும்.
6) பிள்ளைகளுக்கு வயிற்றுப் பூச்சி தொந்தரவு இருக்கும். இதற்கு வேப்பிலையைக் கொழுந்தாக பறித்து, அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து பிரிட்ஜ் வைத்துக்கொண்டு காலையில் வெறும் வயிற்றில் சுண்டைக்காய் அளவு மூன்று நாட்கள் சாப்பிட வயிற்றுப் பூச்சி தொந்தரவு தீரும்.
7) வேப்பிலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு சிறிது நேரம் கழித்து அந்த நீரை வடிகட்டி தலையைக் கழுவி வர முடி உதிர்வதை தடுப்பதுடன் பேன் தொல்லையும் இருக்காது.
8) வேப்பம்பூவை வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு சூடான சாதத்தில் சிறிது உப்பு, 1 ஸ்பூன் வேப்பம்பூ பொடியையும் சேர்த்து பிசைந்து சாப்பிட பித்தத்திற்கு நல்லது.
9) அகத்திக் கீரையை நிழலில் உலர்த்தி நன்கு காய்ந்ததும் பொடி செய்து வைத்துக் கொண்டு காலை மாலை 2 ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
10) கடுக்காய் பவுடர் 1/4 ஸ்பூன், நெல்லிக்காய் பொடி 1/2 ஸ்பூன் இரண்டையும் தேனில் குழைத்து சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.
11) மணத்தக்காளி கீரை மசியல், பயத்தம் பருப்பு கஞ்சி போன்றவை உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் குடல் புண்களையும் குணமாக்கும்.
12) சீசனில் கிடைக்கும் இலந்தைப் பழத்தை வாங்கி சாப்பிடுவது இரத்தத்தை சுத்திகரிக்கும்; பசியைத் தூண்டும்.
13) பப்பாளிக்காய் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனை பொரியல், கூட்டு என செய்து சாப்பிடலாம்.
14) வெறும் வாணலியில் தனியா 1 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு ஆகியவற்றை சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். இதனை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பாதியாக சுண்டியதும் வடிகட்டி இரண்டு வேளை பருக தலை சுற்றல், பித்த வாந்தி போன்றவை குணமாகும்.
15) வாய் துர்நாற்றம் போக நெல்லிமுள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் எடுத்து ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து காலையில் இந்த தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்க துர்நாற்றம் போகும்.
16) ஆல்பக்கோடா பழத்தை வாயில் போட்டு சப்பி கொண்டிருந்தால் ஜுரத்தால் ஏற்படும் வாய் கசப்பு, குமட்டலுக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.