ருமட்டாய்டு ஆர்தரைட்டிஸ் எனப்படும் முடக்குவாத நோய் ஒரு தன்னுடல் தாக்கக் கோளாறு ஆகும். இது கைகள், மணிக்கட்டுகள் மற்றும் கால்களில் உள்ள மூட்டுகளின் புறணியை தவறாகத் தாக்குவதால் வலி வீக்கம் மற்றும் விறைப்புக்கு வழிவகுக்கிறது. முடக்குவாதம் தாக்கப்பட்ட நபர்கள் படுக்கையில் இருந்து எழுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். அன்றாட வேலைகளை செய்வது சிக்கலாக இருக்கும். நாளடைவில் தீவிர மூட்டு வலி மற்றும் சிதைவுக்கு வழிவகுக்கிறது.
முடக்குவாத நோயை எதிர்கொள்ள உதவும் சில வாழ்வியல் முறைகள்:
வெப்பம் சிகிச்சை: வெப்ப சிகிச்சை எனப்படுவது சூடான நீரில் குளித்தல், ஹாட் வாட்டர் பேக் ஒத்தடம், மற்றும் சுடுநீரில் துண்டை நனைத்துப் பிழிந்து மூட்டுகளில் ஒத்தடம் தருவது போன்ற முறைகளாகும். இது கடினமான தசைகளை தளர்த்தவும், சுழற்சியை மேம்படுத்தவும் உதவும். காலை நேர விறைப்பு மற்றும் தசை பதற்றம் ஆகியவற்றை எளிதாக்குவதற்கு இது உதவியாக இருக்கும்.
குளிர் சிகிச்சை: கடுமையான வலி மற்றும் வீக்கத்தை குறைக்க ஒரு துண்டில் ஐஸ் க்யூப்களை வைத்து மூட்டுகளில் ஒத்தடம் தரலாம். 20 நிமிடங்களுக்கு இதுபோல செய்வதால் வலியும் வீக்கமும் குறையும்.
மென்மையான உடற்பயிற்சிகள்: கால் மூட்டுகளில் வலி இருக்கும் போது கடினமான உடற்பயிற்சிகளை செய்ய சிரமமாக இருக்கும். அதனால் மென்மையான உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம். மெதுவாக நடப்பது, நீந்துவது அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற மென்மையான பயிற்சிகளை செய்யலாம். இது வலியை அதிகரிக்காமல் மூட்டு செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. நாற்காலியில் அமர்ந்து கொண்டு காலை நீட்டி மடக்கும் பயிற்சிகளும் நன்மை பயக்கும்.
யோகா: மென்மையான யோகா பயிற்சிகளை ஆழமான சுவாசத்துடன் செய்யும்போது, அது மூட்டுகளில் தளர்வு மற்றும் நெகிழ்ச்சித் தன்மையை ஊக்குவிக்கிறது. வலி குறையும்போது அது மனதுக்கு ஆறுதலாகவும் மன அழுத்தத்தை குறைப்பதாகவும் இருக்கும்.
அழற்சி எதிர்ப்பு உணவுகள்: மீன், ஆளி விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் வலியும் வீக்கமும் குறையும். மேலும் வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரைகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அடங்கிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் இது வலியை குறைக்க உதவும். எனவே இதை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள்: தினமும் சிறிது நேரம் தியானம் செய்வது வலி உணர்வைக் கட்டுப்படுத்தவும், அமைதியான மனநிலையையும் தரும். ஆழமாக சுவாசிப்பதன் மூலம், முதல் உடலையும் மனதையும் அமைதிப் படுத்தலாம். மன அழுத்தத்துடன் தொடர்புடைய தசைப் பதற்றத்தை குறைக்கலாம்.
மசாஜ்: மூட்டு வலிக்கு என்று உள்ள எண்ணெய்கள் மற்றும் கிரீம்களை பயன்படுத்தி மென்மையாக மசாஜ் செய்து கொள்ளலாம். அல்லது பயிற்சி பெற்ற தெரபிஸ்ட்களிடம் சென்று மசாஜ் செய்து கொள்ளலாம்.
அக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்): இது உடலின் குறிப்பிட்ட புள்ளிகளில் நுண்ணிய ஊசிகளை செருகுவதை உள்ளடக்கிய ஒரு மருத்துவம். இது ஆற்றல் ஓட்டத்தை தூண்டுகிறது. வீக்கம் மற்றும் வலியை குறைக்கிறது.
ஓய்வு மற்றும் தளர்வு: வலி மற்றும் வீக்கம் இருக்கும்போது நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். குடும்பத்தினர் அதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். வலி இருக்கும் போது அதிகமாக வேலை செய்வது, நிற்பது, நடப்பது போன்றவை கூடாது.