

Summer Health Tips - கோடை வெப்பத்திலிருந்து உடலை குளிர்விக்க மோர், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் வெப்பத்தை குறைக்கலாம். அதே போல வெப்பம் உச்சத்தில் இருக்கும் பொழுது சில உணவுகளை சாப்பிட்டால் வெப்பம் அதிகரித்து நீர் இழப்பு மற்றும் செரிமான குறைபாடு ஏற்பட்டு உடல் சமநிலை அற்ற தன்மைக்கு உள்ளாகி உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அந்த வகையில் கோடை வெயில் உச்சத்தில் இருக்கும்போது சாப்பிடக் கூடாத உணவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. இஞ்சி மற்றும் பூண்டு:
இஞ்சி, பூண்டு போன்றவற்றில் ஜிஞ்சரால், அலிசின் போன்ற சேர்மங்கள் உள்ளதால் உடல் வெப்பத்தை அதிகரித்து வயிற்றெரிச்சல், நீர் இழப்பு ஏற்படுத்தி உடலுக்கு தீங்கிழைத்து விடும். மேலும் இஞ்சி, பூண்டு போன்றவை மருத்துவ குணங்கள் நிறைந்திருந்தாலும் கோடைகாலத்தில் அளவோடு பயன்படுத்துவது உடலுக்கு நல்லது.
2. பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய்:
உடல் வெப்பத்தை அதிகரிக்கும் மிளகாய்களில் உள்ள கேப்சைசின், செரிமானப் பாதையில் எரிச்சலை ஏற்படுத்தி அசிடிட்டி மற்றும் வயிற்று எரிச்சலை உருவாக்கக் கூடும் என்பதால் பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து தயாரிக்கப்படும் கார உணவுகளை முடிந்த வரை கோடைகாலத்தில் தவிர்ப்பது நல்லது.
3. சில கீரை வகைகள்:
கீரையில் அதிகப்படியான சத்துக்கள் இருந்தாலும் சிறுநீரகங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை பாலக்கீரையில் உள்ள ஆக்சலேட்டுகள் ஏற்படுத்தும் என்பதால் பாலக்கீரை கோடை காலத்திற்கு ஏற்றதல்ல. அதேபோல் கடுகு கீரையும் உடல் வெப்பத்தை அதிகரிக்க கூடும் என்பதால் இவற்றிற்கு பதிலாக நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், புடலங்காய் போன்றவற்றை கோடை காலத்தில் உணவில் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
4. வெங்காயம்:
வெங்காயத்தில் உள்ள கந்தகச் சேர்மங்கள் வாயுத் தொல்லை, வயிறு உப்புசம், நெஞ்சு எரிச்சல் போன்றவற்றை சிலருக்கு ஏற்படுத்தும் என்பதால் வெங்காயம் குளிர்ச்சியானது என்றாலும் கோடை காலத்தில் அளவோடு பயன்படுத்துவது சிறந்தது. மேலும் செரிமானம் எளிதாக வெங்காயத்தை தண்ணீர் அல்லது வினிகரில் ஊற வைத்து பயன்படுத்துவது நல்லது.
5. மாவுச்சத்து காய்கறிகள்:
மாவுச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளான உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு, பட்டாணி, மக்காசோளம், சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, வாழைக்காய் உள்ளிட்ட வேர்க் காய்கறிகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் வயிறு உப்புசம், சோர்வு ஏற்படக்கூடும் என்பதால் கோடைகாலத்தில் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
6. கேரட் மற்றும் முள்ளங்கி:
குளிர் கால பயிர்களான கேரட் முள்ளங்கி போன்றவற்றில் அதிக நீர்ச்சத்து இல்லாததால் செரிமானமாக அதிக நீர் தேவைப்படும். ஆகவே கேரட் மற்றும் முள்ளங்கியை கோடை காலத்தில் முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது.
நீர்ச்சத்து நிறைந்த உணவுகளான வெள்ளரிக்காய், முலாம்பழம், சுரைக்காய், தர்பூசணி, இளநீர், மோர் போன்ற நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை கோடைகாலத்தில் அதிகமாக சேர்த்துக் கொள்ளும்போது உடல் குளிர்ச்சியாக இருந்து ஆரோக்கியம் மேம்படும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)