Healthy Crying Club: அழுதால் நன்மையா? என்னது... அழுவதற்கு ஒரு கிளப்பா?

அழுவது என்பது ஏதோ பலவீனமான விஷயம் அல்ல, அது நம் உடல் தன்னைத் தானே நச்சுக்களில் இருந்து சுத்திகரித்துக் கொள்ளும் ஒரு இயற்கை நிகழ்வு.
Healthy Crying Club
Healthy Crying ClubImage credit: AI Image
Updated on

"என்னது அழுவதற்கு ஒரு கிளப்பா?"

என்று வாசகர்கள் கேள்வி கேட்பதற்கு விசித்திரமாக இருந்தாலும், இன்றைய மன அழுத்தம் நிறைந்த உலகிற்கு மிக மிகத் தேவையான ஒரு அற்புதமான முயற்சி அது.

சூரத்தின் 'Healthy Crying Club' ஓர் அலசல்:

உடல்நலக் குறைபாடுகளுக்கு ஜிம் (Gym) போவது போல, மனப் பாரத்தைக் குறைத்து ஆரோக்கியமாக அழுவதற்கென்றே குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த எட்டு வருடங்களாக (2018-ல் தொடங்கப்பட்டு) இந்த மன்றம் மிக வெற்றிகரமாக நடந்து வருகிறது.

"ஆம்பளப் பசங்க அழக் கூடாது", "அழுதால் அவமானம்" என்றுதான் நம் சமூகம் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது.

அதேசமயம், "துக்கத்தையும் கவலையையும் நெஞ்சுக்குள்ளேயே பூட்டி வைக்காதே.! அழுது தீர்த்துடு..!" என்று பெரியவர்கள் சொன்னதுண்டு.

துக்கத்தையும் கவலையையும் நெஞ்சுக்குள்ளேயே பூட்டி வைத்து, வெளியில் போலிப் புன்னகையோடு வாழும் மனிதர்கள் நிறைந்த உலகம்.

இத்தகைய மனிதர்களின் மனப் பாரத்தைக் குறைத்து, அவர்களை வாய்விட்டு அழ வைப்பதற்காகவே குஜராத் மாநிலம் சூரத்தில் தொடங்கப்பட்டதுதான் இந்த 'Healthy Crying Club' (ஆரோக்கியமாக அழும் மன்றம்).

மனநல ஆலோசகர் கம்லேஷ் மஸாலாவாலா (Kamlesh Masalawala) என்பவரால் தொடங்கப்பட்ட இந்த மன்றம், கடந்த எட்டு வருடங்களாக மனிதர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் ஒரு மருந்தாகச் செயல்பட்டு வருகிறது.

'Healthy Crying Club' என்றால் என்ன? அங்கு என்ன நடக்கும்?

இது மக்கள் ஒன்றுகூடி தங்களின் சோகங்களைப் பகிர்ந்து, எந்தவிதத் தயக்கமும் பயமும் இல்லாமல் நிம்மதியாக அழுவதற்கான ஒரு பாதுகாப்பான இடம் (Safe Space) ஆகும்.

ஒன்றுகூடி அழுதல்: இந்த மன்றத்தின் கூட்டத்தில் தொழிலதிபர்கள், இல்லத்தரசிகள், முதியவர்கள் எனப் பலதரப்பட்ட மனிதர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
முடி கொட்டுதா, அனிமியா இருக்கா? சாப்பாட்டில் இந்த ஒரு மாற்றத்தை உடனே செய்யுங்க!
Healthy Crying Club

கூட்டத்தின் தொடக்கத்தில் பழைய சோகமான பாடல்கள், நெகிழ்ச்சியான கதைகள் அல்லது இதயத்தைத் தொடும் கவிதைகள் வாசிக்கப்படும். இது அவர்களின் மனதில் பூட்டி வைக்கப்பட்டுள்ள பழைய நினைவுகளையும் சோகங்களையும் மெல்லத் தூண்டும்.

அடுத்த சில நிமிடங்களில், அங்கிருக்கும் மனிதர்கள் தங்களை மறந்து, தங்களின் கவலைகளை எண்ணி வாய்விட்டு அழத் தொடங்குவார்கள். அருகில் இருப்பவர்கள் அவர்களைக் கேலி செய்ய மாட்டார்கள் என்பதால், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நிம்மதியாக அழுது தீர்ப்பார்கள்.

இந்த அழுகைக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் (Science of Crying):

அழுவது என்பது ஏதோ பலவீனமான விஷயம் அல்ல, அது நம் உடல் தன்னைத் தானே நச்சுக்களில் இருந்து சுத்திகரித்துக் கொள்ளும் ஒரு இயற்கை நிகழ்வு என்று அறிவியல் கூறுகிறது.

நாம் மன அழுத்தத்தில் அழும்போது வரும் கண்ணீரில் 'அட்ரினோகார்டிகோட்ரோபிக்' (ACTH) போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் மற்றும் நச்சுக்கள் கலந்து வெளியேறுகின்றன.

அழுது முடித்தவுடன் நம் மூளையில் எண்டோர்பின் (Endorphins) மற்றும் ஆக்ஸிடாசின் (Oxytocin) போன்ற 'Feel-Good' ஹார்மோன்கள் சுரக்கின்றன. இதனால்தான் அழுது முடித்தவுடன் மனசு லேசாகி, ஒரு அமைதியும், நிம்மதியான தூக்கமும் நமக்குக் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
பயண டிப்ஸ்: உடல் சோர்வை விரட்டும் பிசியோதெரபிஸ்ட் 'டென்னிஸ் பந்து' ட்ரிக்!
Healthy Crying Club

துக்கத்தை அடக்கி வைப்பது ரத்த அழுத்தத்தையும், இதய நோய்களையும் உண்டாக்கும். அழுது தீர்ப்பது இதயத்திற்கு நல்லது.

இந்த மன்றத்தின் முக்கியக் குறிக்கோள் என்ன?

"மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள நமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், நம் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளவும், நம் கண்ணீரைத் துடைக்கவும் யாரும் இல்லாததே இன்றைய பல மன அழுத்தங்களுக்குக் காரணம்" என்கிறார் இதன் நிறுவனர்.

சமுதாயத்திற்காக நாம் அணிந்திருக்கும் 'நான் நன்றாக இருக்கிறேன்' என்ற போலி முகமூடியைக் கழற்றிவிட்டு, நம் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவது.

தற்கொலை எண்ணங்கள், மனச்சோர்வு (Depression) போன்ற கொடிய நோய்களில் இருந்து மனிதர்களைக் காப்பாற்ற, அழுகை ஒரு வடிகாலாகப் பயன்படுகிறது என்பதை உணர்த்துவது.

"அழுது அழுது என் கண்ணீரே வத்திப்போச்சு" என்று கிராமங்களில் சொல்வார்கள். ஆனால், உண்மையில் அழாமல் நெஞ்சுக்குள் பாரத்தைச் சுமப்பதுதான் ஆபத்தானது.

சூரத்தின் இந்த 'Crying Club' நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்னவென்றால் சிரிப்பது எவ்வளவு ஆரோக்கியமோ, அவ்வளவு ஆரோக்கியம் அழுவதும்! நம் வீட்டில் நாம் தனியாக இருக்கும்போது கூட, எதையாவது நினைத்து அழுகை வந்தால் அதை அடக்கக் கூடாது. கவலைகளைக் கண்ணீராகக் கொட்டித் தீர்த்துவிட்டால், மனது ஒரு பச்சிளம் குழந்தையைப் போல மாறிவிடும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com