வைட்டமின் டி குறைபாடு மற்றும் மிகையால் ஏற்படும் பிரச்னையும் நிவாரணமும்!

வைட்டமின் டி குறைபாடு மற்றும் மிகையால் ஏற்படும் பிரச்னையும் நிவாரணமும்!

வீட்டில் பெரியவர்கள் குழந்தைகளை அதிகாலையில் எழுப்பி சூரிய ஒளியை பார்க்கப் பழக்கி விடுவார்கள். பிறந்த குழந்தைகளையும் வெயிலில் சிறிது நேரம் காட்டச் சொல்வார்கள். இதற்கெல்லாம் காரணம் குழந்தைகளுக்கு வைட்டமின் டி சரியானபடி கிடைக்க வேண்டும். அவர்களின் கால், கை, உடலின் செயல்பாடுகள் சரிவர இயங்க வேண்டும் என்பதற்காகத்தான். வைட்டமின் டி அதிகமானால், குறைந்தால் நம் உடம்பில் ஏற்படும் நன்மைகள், பாதிப்புகள் அதை நிவர்த்தி செய்யும் முறை போன்றவற்றை இந்தப் பதிவில் காண்போம்!

கொழுப்பில் கரைவது வைட்டமின் டி ஆகும். ‘வைட்டமின் டியை சூரிய வழி வைட்டமின்’ என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம் நமது உடலில் சூரிய ஒளி படும்போது நம் உடலுக்குள்ளேயே இந்த வைட்டமின் உற்பத்தி ஆகிவிடுவதால்தான். அதாவது, நம் உடலின் மீது போதிய அளவு சூரிய ஒளி படும்போது, நாம் வேறு உணவின் வழியோ மாத்திரைகளின் வழியே வைட்டமின் டியை பெற வேண்டிய அவசியம் இருக்காது. எனவே, திறந்தவெளியில் விளையாடும் குழந்தைகளைப் பொறுத்தவரை இந்த வைட்டமின் தேவை அதிகம் இல்லை. வைட்டமின் டி நம் உடலின் எலும்பு வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எலும்பு தவிர, பற்களின் வளர்ச்சிக்கும், உறுதிக்கும் வைட்டமின் டி உதவுகிறது.

இந்த வைட்டமின் கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் சத்துக்களை சிறு குடலில் இருந்து உட்கிரகித்துக்கொள்ளப் பயன்படுகிறது. மேலும், நம் இரத்தத்தில் போதுமான அளவு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றை தக்க வைக்க உதவுகிறது. மேலும், எலும்புகளில் கால்சியம் பாஸ்பேட் அளவினை தக்க வைக்கவும் உதவுகிறது.

வைட்டமின் டி குறைபாடு: வைட்டமின் ஏ குறைவால் எலும்பு உருவாவது முறையாக இருக்காது. முக்கியமாக, குழந்தை மற்றும் சிசுக்களுக்கு, 'ரிக்கெட்ஸ்' (Rickets) எனும் எலும்பு மிருதுவான நோய் ஏற்படும்.

ரிக்கெட்ஸ்: இந்நோய் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாட்டால் எலும்பு வலுவாவதற்கு தேவையான கால்சியமும், பாஸ்பரசும் கிடைக்காது. அதன் விளைவாக கால் எலும்புகள் வளைந்து மாறிவிடும். கால் எலும்புகள் பாதிக்கப்படுவதால் இரண்டு முழங்காலும் மிகவும் அருகருகே (Knock knee) இருப்பது போன்றும் வில் போல் வளைந்தும் இருக்கக்கூடும். இந்நோயால் பாதிக்கப்பட்ட சிசுக்கள் நடக்க இயலாமல் போகலாம்.

விலா எலும்புகள் துருத்தி சுருட்ட ஆரம்பிக்கும். அடிவயிறு சுருங்கிவிடும். இடுப்பு ஒட்டி விலா எலும்புகள் புடைத்துக் கொண்டிருக்கும். மார்பு ஒடுங்கி போய் புறாவின் உடலை போல ஆகிவிடும். முள்ளெலும்புகளில் போதிய அளவு கால்சியம் சத்து படிமானமாகாததாலும் தசைகளின் மற்றும் தசைநார்களின் தளர்ச்சியாலும் முள்ளெலும்பு முன்பக்கமாகவும் பக்கவாட்டிலும் வளைந்து இருக்கும். இடுப்பு எலும்புகள் பலவீனமாய் இருக்கும்.

இந்நோய் முற்றிய நிலையில் வயிற்றுக் கோளாறு, கால்களில் பலவீனம் ஆகியவை ஏற்படும். இந்தநோய் குறிப்பாக ஏழைக் குழந்தைகளையே தாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குழந்தை பிறந்ததிலிருந்து பத்து மாதங்களுக்குள் இந்த நோய் வரும் ஆபத்து அதிகம்.

ஆஸ்டியோ மலேசியா: வைட்டமின் டி குறைபாட்டால் பெரியவர்களுக்கு ஆஸ்டியோ மலேசியா (Osteo malacia) எனும் எலும்பு மெலிந்த நோய் ஏற்படும். இந்நோய் எலும்புகளில் பலமின்மையையும் வேதனைகளையும் ஏற்படுத்தும்.

வைட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ள உணவை உட்கொள்ளாத பெண்களுக்கு இந்நோய் அதிகம் வரும் வாய்ப்பு உண்டு. கர்ப்பமாக இருக்கும்போது எடை அதிகரிப்பதும், வைட்டமின் டி உட்கொள்ளாமல் இருப்பதும்தான் இதற்கு முக்கியக் காரணம். மேலும், பலமுறை கருத்தரிக்கும் பெண்களுக்கு உடலில் கால்சியமும், இரும்புச் சத்தும் குறைந்து விடுவதால் அதன் விளைவாகவும் இந்நோய் வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி, எலும்பு பலவீனம், எலும்பு முறிவு ஆகியவை ஏற்படும்.

வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்: ஈரல், எண்ணெய்கள், கொழுப்பு நிறைந்த மீன்கள், முட்டை, வெண்ணெய், பாலாடை, கொழுப்பு மிகுந்த பால் மாவு மற்றும் பால் போன்றவற்றில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. நாம் நம் உணவுப் பழக்கத்தின் மூலமாகவே வைட்டமின் டியை பெற முயற்சிக்க வேண்டும். சூரிய ஒளி நம் மீது படுவதால் உடலுக்குள்ளேயே வைட்டமின் டி உருவாக்கப்பட்டு விடும். ஆதலால், வெயிலில் அவ்வப்பொழுது நிற்பது, நடப்பது நல்லது.

மிகை வைட்டமின் டி நோய்: வைட்டமின் டி குறைபாடு போலவே, உடலில் வைட்டமின் டி அதிகமானாலும் சில பிரச்னைகள் தோன்ற வாய்ப்பு உண்டு. இதனை மிகை வைட்டமின் டி நோய் என்று அழைக்கிறார்கள். நம் உடலில் வைட்டமின் டி மிகுதி ஆகிவிட்டால் தசைகளின் சக்தி குறைதல், பசியின்மை, மலச்சிக்கல், எரிச்சல் அடைதல், அதிக அளவு தாகம் எடுத்தல், அதிகம் சிறுநீர் போதல் மற்றும் உடல் வெளிரி போதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். உடல் நீரிழிந்த நிலையில் இருப்பது போன்று இருக்கும். வாந்தி, மிகை இரத்த அழுத்த நோய், கண் விழித்திரை நோய் போன்றவையும் ஏற்படலாம். மேற்கூறிய பிரச்னைகளை சரிசெய்ய வைட்டமின் டியை எடுத்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்வதோடு, கால்சியம் சத்தினையும் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடலில் ஏற்படும் சத்து குறைபாட்டினை நம் உணவின் மூலமே சரி செய்ய முயல வேண்டும். அதுதான் சிறந்த வழி. முடியாத பட்சத்தில் மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை பெற தயங்கக் கூடாது. வைட்டமின் டி சக்திகளை அளவோடு பெற்று வளமோடு வாழ்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com