
சிலர் வயிற்றில் கடமுடா சத்தம் கேட்கிறது, வயிறு கல் மாதிரி இருக்கு பசியே எடுக்கவில்லை, எதைப் பார்த்தாலும் சாப்பிட வேண்டும் என்று தோன்றுவதில்லை, சரியாக சாப்பிடவும் முடியவில்லை என்று புலம்புவதை கேட்டிருப்போம்.
வயிறு உப்புசம் குறைய சில உணவுகளை தவிர்ப்பதும், சில உணவுகளை எடுத்துக் கொள்வதும் மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்தாலும் சரியாகும்.
வயிறு உப்புசத்துக்கான காரணங்கள்:
* செரிமான பிரச்சனை
* அதிகப்படியான பால், பால் பொருட்கள் கோதுமை எடுத்துக் கொள்வது
* அதிகப்படியான உணவு, அவசரமாக சாப்பிடுவது
* ஸ்ட்ரா முலம் உறிஞ்சி குடிப்பதும், மிட்டாய் சாக்லேட்களை சப்புவதும் போன்ற நேரங்களில் நம்மை அறியாமல் காற்றினையும் சேர்ந்து விழுங்கி விடுவோம்.
* சாப்பிடும் பொழுது பேசுவது, வாய் வழியாக உடலுக்குள் செல்லும் வெளிக்காற்று போன்றவை காரணமாகும்.
* உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும், செயற்கை பழச்சாறுகளும், முளைகட்டிய தானியங்களும், சில பருப்பு வகைகளும் வாயுவை உண்டாக்கும். இவற்றை அதிகம் எடுத்துக் கொள்வது ஒரு காரணமாகும்.
* எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிக மசாலா பொருட்கள் எடுத்துக் கொள்வது
* மலச்சிக்கல் மற்றும் சில பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகளும் வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும்.
அறிகுறிகள்:
* வயிறு வீக்கம்
* அதிகப்படியான வாயு வெளியேறுதல்
* வயிற்றில் வலி, அசௌகரியம்
* ஏப்பம், வயிற்றில் இரைச்சல்
* மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற குடல் இயக்கத்தில் மாற்றங்கள்
தவிர்க்க வேண்டியவை:
* பால் பொருட்கள்
* கோதுமை உணவுகளை சில நாட்களுக்கு நிறுத்தி வைத்து மாற்றம் தெரிந்தால், கோதுமை உணவுகளை தவிர்ப்பதும்
* சோடா, கார்பனேட்டட் பானங்கள், அதிக கொழுப்புள்ள உணவுகள், எண்ணெயில் பொரித்த பண்டங்கள்
* உருளைக்கிழங்கு, மொச்சைக்கொட்டை, கொண்டைக்கடலை போன்ற வாயுவை உருவாக்கும் உணவுகளை தவிர்க்கவும்.
தீர்வுகள்:
* தயிர், மோர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
* சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுதல்
* மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளை குறைப்பது
* ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் போன்ற குப்பை உணவுகளை தவிர்ப்பது
* உணவை நன்கு மென்று சாப்பிடுவதுடன், சாப்பிட்டவுடன் படுக்கைக்கு செல்லாமல் இருப்பது
* சரியான அளவு தண்ணீர் குடித்தல்
* புதினா டீ, இஞ்சி டீ போன்றவை செரிமான பிரச்சனையை சீராக்கி உப்புசத்தை குறைக்கும்.
* பெருஞ்சீரகத்துடன் சிறிது கல்கண்டு சேர்த்து மெல்வது வயிற்றுப் பிரச்சனையை சரி செய்யும்.
* வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு கலந்து பருகுவது வயிறு உப்புசத்தை போக்கும்.
* வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்வது அவசியம். நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் பதற்றம் குடல் செயல்பாட்டை சீர்குலைத்து வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கும். தியானம், யோகா போன்ற தளர்வு நுட்பங்கள் இதற்கு உதவியாக இருக்கும்.
* வயிறு உப்புசத்திற்கு கை வைத்தியம் செய்தும் சரியாகவில்லை என்றால் தகுந்த மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)