
அமெரிக்காவில் நான்ஸ்டிக் பாத்திரங்கள் (Non-stick Cookware) நீண்டகாலப் பயன்பாட்டில் உள்ளது. இந்தப் பாத்திரங்களின் உபயோகமானது கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இந்த அபாயத்தை உறுதிப்படுத்தும் வகையில், 2020 ஆம் ஆண்டில் தேசிய மருத்துவ நூலகத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் முடிவி நான்ஸ்டிக் பூச்சில் கீறல் விழும்போது வெளியாகும் நச்சுப் பொருட்களின் அளவு 99% அமெரிக்கர்களின் இரத்தத்தில் காணப்படுகிறது கூறுகிறது.
வளர்ந்த நாடுகளில் பரவலாகி, இப்போது இந்திய சமையலறையில் நுழைந்துள்ள நான்ஸ்டிக் பாத்திரங்கள் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. உங்கள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் கீறல் இருக்கிறதா? நீங்கள் அதைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நோய்கள் ஏற்படும் அபாயத்தை உங்களை அறியாமலேயே அதிகரிக்கிறீர்கள். நீங்கள் கீறிய நான்ஸ்டிக் பாத்திரத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது.
2022 ஆம் ஆண்டு சயின்ஸ் டைரக்டில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில் , ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் விழுந்த 5 செ.மீ அளவு கீறல் 2.3 மில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக்களை உணவுக்குள் வெளியிடுகிறது. இவை நமது உணவில் கலந்து பல கடுமையான நோய்களை ஏற்படுத்துகிறது.
நான்ஸ்டிக் பான்களில் உள்ள கீறல்களிலிருந்து வெளியாகும் ரசாயனங்கள் தைராய்டு பிரச்சினைகள் மற்றும் இதய நோய்களை ஏற்படுத்தும். அவை கல்லீரல் பாதிப்பையும் ஏற்படுத்தும். இது பல நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
கீறல் விழுந்த நான்ஸ்டிக் பாத்திரத்தைப் பயன்படுத்துவதால், உடனடியாக எந்த ஒரு உடல்நலப்பிரச்சினையும் ஏற்படாது. ஒரு சிலமுறைகள் மட்டும் பயன்படுத்துவதால் சிறிய அளவில் தீங்குகள் ஏற்படும். ஆனால், அது எந்த கடுமையான நோயையும் ஏற்படுத்தாது. நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தினால், உடலில் நச்சு இரசாயனங்கள் குவிந்து, படிப்படியாக உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்க வழிவகுக்கும்.
புற்றுநோய் ஏற்படும் அபாயம்:
நான் ஸ்டிக் பாத்திர கீறல்களில் இருந்து பெர்ஃப்ளூரோஅல்கைல் மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் (PFAS) மற்றும் பாலி டெட்ரா ஃப்ளூரோ எத்திலீன் (PTFE) போன்ற நச்சு இரசாயனங்கள் வெளியிடப்படுகின்றன. இவை பாத்திரத்தில் சமைக்கப்படும் பொருட்களில் கலந்து நம் வயிற்றில் சென்று விடும். இந்த இரசாயனங்கள் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்கள் இரத்தத்தில் கலந்து ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை அதிகரித்து, டிஎன்ஏவை சீர்குலைக்கின்றன. இது கல்லீரல், சிறுநீரகம் மற்றும் டெஸ்டிகுலர் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
இருதய நோய் அபாயம்:
உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த ரசாயனங்களின் விளைவால், கெட்ட கொழுப்பான LDL-இன் அளவு இரத்தத்தில் அதிகரிக்கிறது. இந்த அதிகப்படியான கொழுப்பு தமனிகளின் சுவர்களில் படிப்படியாகக் குவிந்து, இரத்த ஓட்டத்தைத் தடை செய்கிறது. இதன் காரணமாக, இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் பன்மடங்கு அதிகரிக்கிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் 2018ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று, இரத்தத்தில் PFAS இரசாயனங்களைக் கொண்டவர்களுக்கு, இதயநோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகம் என்று கூறியுள்ளது.
தைராய்டு சுரப்பி கோளாறு:
PFAS இரசாயனங்கள் தைராய்டு சுரப்பி செயல்பாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி ஹைப்போ தைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஆட்டோ இம்யூன் தைராய்டு நோய்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதை ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு உறுதி செய்கிறது. மேலும் இரத்த நாளங்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் சேர்வதால் ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு கருவுறுதலையும் பாதிக்கிறது.
கல்லீரல் சேதம் :
உடலில் சேரும் நச்சுகளைச் நீக்கும் கல்லீரல், கீறப்பட்ட நான்ஸ்டிக் பாத்திரங்களிலிருந்து PFAS நச்சுகளை நீக்க கடுமையாக வேலை செய்கிறது. கல்லீரலில் இதன் காரணமாக அதிக அளவில் நச்சுக்கள் சேர்ந்து அதன் செயல்பாடுகள் குறைந்து, சேதமடைகின்றன.
நான்ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்தும் போது கீறல் விழுந்த பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். பொதுவாக நான்ஸ்டிக் பாத்திரங்களுக்கு பதிலாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், எவர்சில்வர் மற்றும் வார்ப்பு போன்ற சமையல் பாத்திரங்களை உபயோகிக்கவும்.