

காய்கறிகள், நார்ச்சத்து, சரியான கழிப்பறைப் பழக்கம்… குழந்தையின் குடல் நலனுக்கான மருத்துவர் வழிகாட்டி!
குழந்தை தினமும் மலம் கழிக்கிறதா என்பதைக் காட்டிலும், மலம் மென்மையாகவும் வலியின்றியும் வெளியேறுகிறதா என்பதே முக்கியம். மலம் கழிக்கும்போது அழுவது, மலம் கழிப்பதைத் தவிர்ப்பது, பல நாட்கள் மலம் கழிக்காமல் இருப்பது போன்றவை பெற்றோருக்குக் கவலையளிக்கலாம். சில குழந்தைகளில் இது தற்காலிகமான பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து ஏற்படும் மலச்சிக்கலை அலட்சியப்படுத்தினால், மலம் கழிப்பதே குழந்தைக்கு அச்சத்தை ஏற்படுத்தும் சுழற்சி உருவாகலாம்.
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏன் ஏற்படுகிறது?
மலம் கடினமாக வெளியேறுவது, வலியுடன் மலம் கழிப்பது, வழக்கத்தைவிடக் குறைவாக மலம் கழிப்பது ஆகியவை முக்கிய அறிகுறிகள். மலம் கழிக்கும்போது வலி ஏற்பட்ட குழந்தை, மீண்டும் வலி வருமோ என்ற பயத்தில் மலத்தை அடக்கிக்கொள்ளலாம். இதனால் மலம் குடலில் அதிக நேரம் தங்கி மேலும் கடினமாகிறது. இதுவே செயல்பாட்டு மலச்சிக்கல் (Functional constipation) ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன?
கீரைகள், பீன்ஸ், அவரைக்காய், காரட், பீட்ரூட், பச்சைப் பட்டாணி போன்ற காய்கறிகளை உணவில் சேர்க்கலாம். கொய்யாப்பழம், பேரிக்காய், பப்பாளி, ஆரஞ்சு போன்ற பழங்களும் உதவும். முழுதானிய உணவுகள், ஓட்ஸ், பயறு வகைகள் ஆகியவற்றையும் மாறி மாறிக் கொடுங்கள். குழந்தைக்குப் பிடித்த உணவில் காய்கறிகளைச் சேர்த்து, படிப்படியாக அதன் அளவை அதிகரிப்பது நல்லது.
பிஸ்கட், கேக், உருளைக்கிழங்கு சிப்ஸ் வேண்டாமா?
இவற்றை முற்றிலும் தடை செய்வது மட்டுமே தீர்வல்ல. ஆனால் பிஸ்கட், கேக், சிப்ஸ் போன்ற நார்ச்சத்து குறைந்த சிற்றுண்டிகளை அடிக்கடி கொடுப்பதால், பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள் போன்ற சத்தான உணவுகளுக்கான இடம் குறையலாம். அவற்றுக்குப் பதிலாகச் சுண்டல், பழத்துண்டுகள், காய்கறித் துண்டுகள் போன்றவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலைக் குறைக்குமா?
குழந்தையின் வயது, உடல் செயல்பாடு, காலநிலை ஆகியவற்றுக்கு ஏற்ற அளவில் தண்ணீர் குடிக்கச் செய்யுங்கள். நார்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் போதுமான திரவமும் அவசியம். ஆனால் அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதால் மட்டும் நீண்டகால மலச்சிக்கல் குணமாகிவிடாது.
கழிப்பறைப் பழக்கத்தை எப்படிக் கற்றுக்கொடுப்பது?
உணவுக்குப் பிறகு, குறிப்பாகக் காலை உணவுக்குப் பிறகு, குழந்தையைச் சில நிமிடங்கள் கழிப்பறையில் அமரச் செய்யுங்கள். கால்களுக்குக் கீழே சிறிய முக்காலி வைத்தால் மலம் கழிக்க வசதியாக இருக்கும். குழந்தையை அவசரப்படுத்தவோ, திட்டவோ, அவமானப்படுத்தவோ வேண்டாம். மலம் கழிக்க முயற்சிப்பதையே பாராட்டுங்கள்.
உடற்பயிற்சிக்கும் குடல் நலனுக்கும் தொடர்பு உண்டா?
நடைப்பயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், விளையாட்டு போன்ற அன்றாட உடல் இயக்கங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும். நீண்ட நேரம் திரையைக் கவனித்தபடி உட்கார்ந்திருப்பதைக் குறைத்து, குழந்தைகளை வெளியில் விளையாட ஊக்குவியுங்கள்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
மலத்தில் ரத்தம் காணப்படுதல், கடுமையான வயிற்றுவலி, வயிறு அதிகமாக வீங்குதல், தொடர்ந்து வாந்தி, உடல் எடை அதிகரிக்காமை போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவ மதிப்பீடு அவசியம். உணவு மாற்றங்களாலும் கழிப்பறைப் பழக்கங்களாலும் சரியாகாத மலச்சிக்கலுக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் தேவைப்படலாம். மலமிளக்கி மருந்துகளைத் தாங்களாகவே தொடங்கவோ, பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சையை முன்கூட்டியே நிறுத்தவோ வேண்டாம்.
பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டியது என்ன?
மலச்சிக்கல் என்பது குழந்தையின் சோம்பேறித்தனமோ பிடிவாதமோ அல்ல. வலி, பயம், உணவுப் பழக்கம், கழிப்பறைச் சூழல் எனப் பல காரணிகள் இதில் பங்கு வகிக்கலாம். பொறுமையான அணுகுமுறையும் சரியான சிகிச்சையும் முக்கியம்.
நார்ச்சத்து நிறைந்த உணவு, போதுமான தண்ணீர், தினசரி உடல் இயக்கம், நிம்மதியான கழிப்பறைப் பழக்கம். இந்த நான்கும் குடல் நலனின் நல்ல நண்பர்கள்!