உங்க நாக்கின் நிறம் காட்டும் உடல்நல ரகசியங்கள்!

நாக்கு உங்கள் ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடி. உங்க நாக்கின் நிறம் உணர்த்தும் ஆபத்தான நோய்களின் அறிகுறிகளை உடனே அறிந்து கொள்ளுங்கள்!
Tongue - Health Warning Signs
Tongue - Health Warning SignsImage credit: AI Image
Updated on

நமது நாக்கு உணவின் சுவையை அறிவதற்கும், தெளிவாகப் பேசுவதற்கும் பயன்படுவதோடு மட்டுமல்லாமல், அது நம் உடலின் உட்புற ஆரோக்கியத்தைக் காட்டும் ஒரு கண்ணாடியாகவும் உள்ளது.

மேலும், உடலில் ஏற்படும் நீரிழப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, தொற்றுநோய்கள் மற்றும் வாய்வழி புற்றுநோய் போன்ற பல்வேறு ஆரோக்கியப் பிரச்சினைகளை முன்கூட்டியே எச்சரிக்கும் ஒரு அமைப்பாக நாக்கு செயல்படுகிறது. உலகளவில் சுமார் 3.5 பில்லியன் மக்கள் வாய்வழி நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

அந்த வகையில் நாக்கின் நிறத்தை வைத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு அறிந்துகொள்வது என இந்தப் பதிவில் காணலாம்.

1. இளஞ்சிவப்பு நாக்கு:

ஒரு ஆரோக்கியமான நாக்கு பொதுவாக லேசான அல்லது அடர் இளஞ்சிவப்பு நிறத்தில், அதன் மேற்பரப்பில் 'பாப்பிலா' எனப்படும் சிறிய மொட்டுகளுடன் காணப்படும். நாக்கு இந்த நிறத்தில் இருந்தால், உடலில் போதிய நீர்ச்சத்து, இரத்த ஓட்டம் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியாக உள்ளன என்று அர்த்தம். காலையில் எழும்போது நாக்கின் மேல் மெல்லிய வெள்ளை நிறப் படிவம் இருப்பது இயல்பானது. தினசரி பல் துலக்குதல் மற்றும் நாக்கைச் சுத்தம் செய்தல் மூலம் இந்த ஆரோக்கியமான நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

2. வெள்ளை நிற நாக்கு:

நாக்கில் தடிமனான வெள்ளை நிறப் படிவம் ஏற்படுவது இன்று பலரிடமும் காணப்படுகிறது. இது உடலில் நீர்ச்சத்து குறைவது, வாய் வறட்சி, புகைபிடித்தல், பூஞ்சை தொற்று மற்றும் மோசமான வாய்வழி சுகாதாரத்தின் காரணமாக ஏற்படுகிறது. நாக்கைச் சுத்தம் செய்த பிறகும் இந்த வெள்ளைத் திட்டுகள் இருந்தால், அது 'லுகோபிளாக்கியா' என்ற புற்றுநோய்க்கு முந்தைய நிலையாக இருக்கலாம். எனவே, உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

3. வெளிறிய நாக்கு:

உங்கள் நாக்கு வழக்கத்திற்கு மாறாக மிகவும் வெளிறிய நிறத்தில் இருந்தால், அது உடலில் இரத்த சோகை இருப்பதைக் குறிக்கலாம். குறிப்பாக, இரும்புச்சத்து அல்லது வைட்டமின் B12 குறைபாடு காரணமாக இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது, நாக்கு மற்றும் ஈறுகளுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் குறைந்து வெளிறித் தோன்றும். இத்தகைய குறைபாடு உள்ளவர்களுக்கு நாக்கில் வலி, வீக்கம், சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் வாயின் ஓரங்களில் வெடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.

4. பிரகாசமான சிவப்பு நாக்கு:

நாக்கு பிரகாசமான சிவப்பு நிறத்திலோ அல்லது 'ஸ்ட்ராபெர்ரி' பழத்தைப் போன்றோ மாறினால், அது வைட்டமின் B12 மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாட்டின் அறிகுறியாகும். ஊட்டச்சத்து குறைபாடுகள் நாக்கிலுள்ள சுவை மொட்டுகளைப் பாதித்து, நாக்கை மிகவும் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றிவிடுகின்றன.

இதையும் படியுங்கள்:
தவறியும் இந்த கீரையை கோடையில் சாப்பிடாதீங்க... சிறுநீரகத்திற்கு பேராபத்து!
Tongue - Health Warning Signs

5. மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற நாக்கு:

நாக்கில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறப் படிவம் ஏற்படுவதற்கு வாயில் பாக்டீரியாக்கள் அதிகமாகப் பெருகுவது, புகைபிடித்தல், தீவிர வாய் வறட்சி போன்றவை காரணங்களாகும். சில நேரங்களில், நாம் உட்கொள்ளும் குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் வைட்டமின் மாத்திரைகளாலும் நாக்கு தற்காலிகமாக இந்த நிறத்திற்கு மாறக்கூடும். இது பொதுவாக ஆபத்தானது அல்ல. இருப்பினும், சில சமயங்களில் செரிமானப் கோளாறுகள் அல்லது பூஞ்சை தொற்றுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

6. ஊதா அல்லது நீல நிற நாக்கு:

நாக்கு நீல நிறமாகவோ அல்லது ஊதா நிறமாகவோ மாறினால், அதை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது. இரத்தத்தில் ஆக்ஸிஜன் சுழற்சி குறையும் போது இந்த நிலை ஏற்படுகிறது, மருத்துவ உலகில் இதனை 'சயனோசிஸ்' என்று அழைப்பர். கடுமையான சுவாச நோய்கள், இதய பாதிப்புகள் அல்லது இரத்த நாளக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு நாக்கு இவ்வாறு மாற வாய்ப்புள்ளது. இந்த நிறமாற்றம் இருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது மிக முக்கியம்.

இதையும் படியுங்கள்:
வெப்ப அலை எச்சரிக்கை! இந்த 5 காய்கறிகளை கோடையில் சாப்பிடுவது ஆபத்தா?
Tongue - Health Warning Signs

7. கருப்பு நாக்கு:

நாக்கு கருகருவென்று, அதன் மேல் முடி வளர்ந்தது போன்ற தோற்றமளிப்பது பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இது 'பிளாக் ஹேரி டங்' (Black hairy tongue) எனப்படும் ஒரு தற்காலிகமான நிலையாகும். நாக்கின் சுவை மொட்டுகளில் இறந்த செல்கள் தேங்கி, அதில் பாக்டீரியாக்கள், உணவுத்துகள்கள் மற்றும் புகையிலையின் நிறமிகள் சிக்குவதால் இது ஏற்படுகிறது.

இறுதியாக, நாக்கின் நிறம் மற்றும் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பேண உதவும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com