

செரிமான பிரச்னை உள்ளவர்கள் இதனை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. ஒருவித அலட்சிய போக்கே இத்தகைய செயல்பாட்டுக்கு காரணம்.
ஒன்றுமில்லாத விஷயத்தை எல்லாம் பெரிதுபடுத்தி தனக்கு இப்படி ஆகி விடுமோ என்று சிலர் பயப்படுகிறார்கள். இவர்கள் எந்த விதமான பரிசோதனைகள் செய்தாலும் நம்ப மாட்டார்கள்.
டாக்டர்களை மாற்றி மாற்றி ஆலோசனை கேட்பார்கள். பெரும்பாலும் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்கள் இந்த பிரச்னைகளில் சிக்கி அவதிக்குள்ளாகிறார்கள்.
அவர்கள், 'நாங்கள் தனியார் மருத்துவமனையில் டாக்டரை பார்த்து ஆலோசனை செய்து விட்டோம் ஒன்றும் இல்லை என்று சொல்கிறார்கள்' என்று வேறு ஒரு டாக்டரை போய் பார்ப்பார்கள். சிலர் google, சாட் ஜிபிடி மூலம் இல்லாத பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா? என்று தேடுவார்கள்.
செரிமான பிரச்னைக்கு அவர்களாகவே கை மருத்துவம் பார்ப்பவர்கள் சில பேர் உள்ளனர். பெரும்பாலும் எதையாவது சாப்பிட்டு முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
எச். பைலோரி அல்சர் (H. pylori ulcer) எனப்படும் குடல்புண் ஏற்பட பொதுவான காரணம் எச். பைலோரி (H. pylori) என்ற பாக்டீரியா தான்.
இது அசுத்தமான உணவு குடிநீர் வாயிலாக பரவக்கூடியது. இந்தத் தொற்று பாதிக்கப்பட்டால் உடனடியாக தெரியாது. உடலுக்குள் சென்று நிதானமாக வளர்ந்து ஐந்து வருடம் முதல் 10 ஆண்டுகள் கழித்து தான் அறிகுறிகள் தெரிய வரும்.
முதலில் வாயு தொல்லையை ஏற்படுத்தும். அதன் பின் குடல் புண்கள் உருவாகும். பாக்டீரியா தொற்றை ஆரம்பத்தில் கண்டறிந்தால் இதனை எளிதாக குணப்படுத்தலாம்.
அல்சர் பாதிக்கப்பட்ட சிறிது சதையை எடுத்து பயாப்ஸி டெஸ்ட் மூலம் இதனை கண்டறியலாம். ஆர் யூ டி ராபிட் டெஸ்ட் மூலம் இதனை அறியலாம். முறையாக சிகிச்சை செய்யாமல் 20 ஆண்டுகளுக்கு மேல் அப்படியே விட்டு விட்டால் கேன்சராக மாறக்கூடிய அபாயம் ஏற்படும்.
சிகரெட் மது அருந்துதல் நீண்ட நாட்களாக வலி மாத்திரைகள் சாப்பிடுவது போன்றவை அல்சர் ஏற்பட காரணங்களாகும். சுகாதாரமான உணவு நல்ல குடிநீர் மட்டுமே இத்தொற்று வராமல் பாதுகாக்கும். இதற்கான காரணங்கள் பசியின்மை, வாந்தி, காரணமில்லாமல் உடல் எடை குறைவது, ரத்தசோகை போன்ற அறிகுறிகள் காரணங்களாகும். நாள்பட்ட அல்சருக்கு டாக்டரிடம் மருந்து மாத்திரை சாப்பிட்டு சரியாகாமல் இருந்தாலும், 50 வயதிற்கு மேல் முதல் முறையாக செரிமான தொடர்பான கோளாறுகள் வந்தாலும் எண்டோஸ்கோப்பி செய்ய வேண்டியது அவசியமாகும்.
மார்பக கேன்சர் உட்பட கேன்சர் பாதிப்பு வந்த மற்றும் வாய்ப்பு வரும் குடும்பத்தில் ஒருவருக்கு பசியின்மை, வாந்தி, வயிற்று வலி மலம் கழிக்கும் தன்மையில் மாற்றம், மலத்தில் ரத்தம் போவது போன்ற செரிமான பிரச்னைகள் இருந்தால் அலட்சியம் செய்யக்கூடாது. காரணம் கேன்சரை உருவாக்கும் மரபணு அதில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அனுபவம் மிக்க குடல் இரைப்பை டாக்டரிடம் ஆலோசனை பெற்று, முழு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
வாயு தொல்லைக்கு மற்றும் வயிற்று வலிக்கு ஆன்டாசிட் மாத்திரை, டானிக் உபயோகிக்கும் பழக்கம் பொதுவாக உள்ளது. இது அதன் அறிகுறிகளை குறைக்கும்; ஆனால் பிரச்னைக்கான மூல காரணத்தை சரி செய்யாது. அல்சர் இருப்பவர்கள் கூட ஆண்டாசிட் எடுத்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். ஆனால், அது நிரந்தர தீர்வாகாது. பிரச்னை வரும்போது எல்லாம் ஆன்டாசிட் மாத்திரை எடுக்கும் போது அல்சர் பெரிதாகி ரத்தக் கசிவு, இரத்த வாந்தி, குடலில் ஓட்டை விழுவது போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். நாளடைவில் இது கேன்சராக மாறும் வாய்ப்பு உள்ளது.
சுலபமாக குணப்படுத்தக்கூடிய அல்சரை பல சிக்கல்களுடன் நீண்ட சிகிச்சைக்கு தள்ளிவிடும். எனவே, அல்சர் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி ஆன்டாசிட் மாத்திரை எடுப்பது தவறு.
சம்பந்தப்பட்ட இரைப்பை டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். வருமுன் காப்பது நலம்!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)