நடைப்பயிற்சி: நீடித்த ஆரோக்கியத்திற்கு எளிய வழி!
நடக்குமென்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்!
கிடைக்குமென்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்து விடும்!
என்பது பிரபலமான திரைப்படப் பாடல்!
அந்தக் காலத்துப் பாட்டுக்கள் பொருள் பொதிந்தவையாகவும், எக்காலத்துக்கும் பொருந்துபவையாகவும், எந்த நேரத்திலும் ரசிப்பவையாகவும் உள்ளன.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, திரைப் படங்களில் பாடல்களின் ஆதிக்கம் மெல்லச் சுருங்கி வந்து, தற்போது வரும் பெரும்பாலான படங்களில் வசன கவிதைகளாக பாடல்கள் பாடப்படுகின்றன.
அவையும் மனதில் நிற்பதில்லை!
பாடல்களின் சொற்கள் தெளிவாகக் கேட்காத அளவுக்கு இசை நடைபோடுவதால், சில பாடல்களின் பொருளே கேட்பவர்களுக்குச் சரியாகப் புரிவதில்லை! சரி! இது போகட்டும்!நாம் விஷயத்திற்கு வருவோம்!
சிலர் நடக்கிறேன்! நடக்கிறேன் என்பார்கள்! ஆனால் தேவையான அளவு நேரமோ, சரியான தூரமோ நடக்க மாட்டார்கள்! சரியாக நடந்தாலே நல்ல ஆரோக்கியம் கிடைக்குமென்பதெல்லாம் அவர்களுக்கும் தெரியும்.ஆனால் சோம்பேறித் தனம் நடுவில் புகுந்து அவர்கள் திட்டத்தையெல்லாம் க்ளோஸ் செய்து விடும்!
பார்க்குகளில், நடக்கிறேன் பேர்வழி என்று வீட்டை ஏமாற்றுபவர்களை அதிகம் பார்க்கலாம். காலை என்றால் கொஞ்ச நேரம் நடந்து விட்டு, வீட்டாருக்குத் தெரியாமல் காபி, டீயைக் குடித்து விட்டு, அங்கிருக்கும் சிமெண்ட் பெஞ்சுகளைத் தேய்ப்பவர்கள் கணிசமான அளவில் இருப்பார்கள். மாலையென்றால், பஜ்ஜி வடைக்கு அடிமையாகி, அதனைச் சாப்பிட்டு விட்டு, உட்கார்ந்தே பொழுதைப் போக்கி விடுபவர்களும் உண்டு.
எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒன்று, நடைப் பயிற்சி. ஒரு நாளில் சுமார் 45 நிமிடங்களை இதற்கென ஒதுக்கி, முறையாக நடப்போமானால் சுகமான வாழ்வு கிடைக்கும்.
நடைப்பயிற்சியோடு மேலும் சில உடற்பயிற்சிகளையும் பழகி, ஒழுங்காகச் செய்து வந்தால், மகிழ்ச்சி பெருகும்; மருத்துவச் செலவு குறையும். டெம்ப்ரரி மற்றும் பெர்மனென்ட் நோய்களிலிருந்தும் விடுதலை பெறலாம்.
வயதாகும்போது, முழங்கை வலி, மூட்டு வலி என்று அங்கலாய்க்கும் அவலத்தைத் தவிர்க்கலாம்.
நோய் என்று வீட்டில் ஒருவர் படுத்து விட்டால், அது ஒட்டு மொத்தக்குடும்ப உறுப்பினர்களையும் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கும் என்பதை நம்மில் பல பேர் எண்ணிப் பார்ப்பதேயில்லை.
ஏன் நடைப்பயிற்சிக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று யோசிக்கிறீர்களா?
மிக எளிதானது;
எல்லா வயதினருக்கும் ஏற்றது;
வேறு கருவிகளோ, உபகரணங்களோ தேவையில்லை;
தனியிடமெல்லாம் தேவையில்லை; சாலையோரத்திலும் நடக்கலாம்; நம் வீட்டு மொட்டை மாடியிலும் சுற்றி வரலாம்.
ரிஸ்க் அதிகமில்லாதது;
இந்த நேரத்தில்தான் செய்ய வேண்டுமென்ற வரைமுறையெல்லாம் இப்பயிற்சிக்குக் கிடையாது; சாப்பிடும் முன்பும் செய்யலாம்; சாப்பிட்ட உடனும் செய்யலாம்!
பயிற்சி ஒன்றுதான் என்றாலும் பயன்கள் பல!
உடலின் இரத்த ஓட்டத்தைச் சீராக்குவதால், முழு உடலும் பயன்பெறுகிறது!
வேலைப்பளு காரணமாகப் பலருக்கு உரிய நேரம் கிடைக்காததால் நடைப்பயிற்சியை முழுமையாகச் செய்ய முடியாத ஆதங்கமும், சிறிது நேரமே செய்தால் பயன் இல்லையோவென்ற சந்தேகமும் கொண்டு, நடைப்பயிற்சி மேற்கொள்வதையே நிறுத்தி விடுகிறார்கள்!
உண்மையில், இவ்வளவு நேரம் கட்டாயமாகப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டுமென்ற எந்த நிபந்தனைகளும் இதில் கிடையாது. உங்களால் எவ்வளவு நேரம் நடக்க முடியுமோ அவ்வளவு நேரம் நடங்கள்! அதற்கான நன்மை உண்டு என்கிறார்கள் மருத்துவர்களும், உடற்பயிற்சி வல்லுனர்களும்.
ஒரு நிமிடம் தொடங்கி நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை எவ்வளவு நீங்கள் நடக்கிறீர்களோ, அதற்கேற்ற பலன் கை மேல் உண்டு என்கிறார்கள் வல்லுனர்கள்!
எதையும் குறைவாக மதிப்பிட்டுவிடக் கூடாதல்லவா?
விபரமாய்ப் பார்ப்போமா?
1 நிமிடம் - இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
5 நிமிடங்கள் - நல்ல மூடு கூடும்.
10 நிமிடங்கள் - கார்டிசால் அளவு குறைகிறது. (கார்டிசால் என்பது சிறுநீரகத்திற்கு அருகிலுள்ள அட்ரினல் சுரப்பிகள் சுரக்கும் திரவம். மன அழுத்தத்தைக் குறைக்க, இதன் அளவு குறைவானதாக இருக்க வேண்டும்.)
15 நிமிடங்கள் - இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய ஆரம்பிக்கும்.
30 நிமிடங்கள் - கொழுப்பு எரிக்கப்படத் தொடங்கும்.
45 நிமிடங்கள் - தேவையற்ற சிந்தனைகள் குறையும்.
சரிங்க! இனி மேலாவது நேரங்காலம் பார்க்காமல் நம்மால் முடிந்த நேரம் நடப்போம்! அதற்கான நற் பலனை அனுபவிப்போம்!