
புஷ்-அப் உடலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, மார்பு, வயிறு, தோள்பட்டையை பலப்படுத்தும் உடற்பயிற்சியாகும். தொப்பை மற்றும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. தினமும் புஷ்-அப் செய்வதன் மூலம் உடலின் மேல் பகுதியை வலிமையடையச் செய்யலாம்..
தினமும் 50 முதல் 100 புஷ் அப்கள் செய்து வந்தால் விரைவில் நல்ல மாற்றத்தை உணரலாம். அவ்வாறு செய்யும் போது பல செட்களாக பிரித்து செய்ய வேண்டும். அதாவது முதல் 20 புஷ் அப் செய்த பிறகு சற்று ஓய்வு எடுத்த பின் அடுத்த செட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் விரைவில் நீங்கள் சோர்வடைய மாட்டீர்கள். புஷ் அப் சரியான முறையில் செய்தால் மட்டுமே முழு பலனையும் பெற முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஒருமாதம் தினமும் 500 புஷ்அப் செய்து வந்தால் உடலில் வியக்கத்தகு மாற்றங்களை பார்க்கலாம். உடலில் உள்ள கொழுப்பை வெளியேற்றும், வயிறு பகுதியில் உள்ள கொழுப்பு மற்றும் கலோரிகள் குறையும். உங்கள் தோள்கள் மற்றும் கீழ் முதுகை காயத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் கைகள், மார்பு, தோள்களில் உள்ள அதிகப்படியான சதையை குறைத்து வலுவாக்கும்.
உடற்பயிற்சி உபகாரணங்கள் இல்லாவிட்டாலும் தினமும் புஷ் அப் செய்துவந்தால் தொப்பை மற்றும் உடலில் உள்ள கொழுப்பு குறைவதை கண்கூடாக பார்க்க முடியும். அதுமட்டுமில்லாமல் நாம் தினமும் சரியாக முறையில் புஷ்-அப் செய்து வந்தால் முழு உடல் தசைகளையும் வலுப்படுத்த முடியும்.
தரையில் பாதியளவில் படுத்தவாறு (அதாவது உங்கள் உடல் தரையில் இருந்து 1 அடிக்கு மேல் இருக்க வேண்டும்) உங்கள் கைகள், கால்களால் உடம்பை தாங்கிய நிலையில் வைத்து கொண்டு உங்கள் கைகளை தோள்களை விட சற்று அகலமாக வைத்துக்கொள்ளுங்கள். கைவிரல்களை தரையில் விரித்தபடி பதிய வைக்க வேண்டும்.
அடுத்து உங்கள் மார்பு கிட்டத்தட்ட தரையைத் தொடும் வரை உங்கள் உடலை மெதுவாக கீழே இறக்க வேண்டும். ஆனால் தரையில் அப்படியே படுத்து விடக்கூடாது. இப்போது உங்களின் உடம்பை மேலே தள்ளுங்கள்.
இந்த பயிற்சியை முதலில் செய்ய கடினமாக இருக்கும். ஆனால் தொடர்ந்து தினமும் செய்து கொண்டே இருந்தால் சுலபமாக செய்ய வரும். புஷ் அப் முதலில் செய்ய ஆரம்பிப்பவர்கள் வீட்டு சுவரில் உங்கள் இரண்டு கைககளையும் ஊன்றி செய்து பழக்கப்படுத்திய பின்னர் தரையில் செய்ய ஆரம்பிக்கலாம்.
புஷ்-அப்பில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையான பயிற்சியும் ஒவ்வொரு பலனைத்தரக்கூடியவை. புஷ் அப் உங்கள் முழு உடலையும், தசைகளையும் வலிமையாக்கும் எளிய பயிற்சியாகும். அதிக அளவில் புஷ்-அப் செய்யும் போது, மார்புப் பகுதி, கைகள், தோள் பகுதி, வயிற்றுத் தசைகள், இடுப்புப் பகுதி, பின்முதுகுப் பகுதி, கால் தொடைப்பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்தவும், அந்த பகுதிகளில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்கவும் உதவுகின்றன.
இந்த உடற்பயிற்சிக்கு உபகரணங்கள், பயிற்சியாளர் மற்றும் ஜிம் தேவையில்லை, இது செலவே இல்லாத மலிவான ஒர்க்அவுட் ஆகும்.
புஷ்-அப் பயிற்சிகள் எலும்பு அடர்த்தியை பாதுகாக்க உதவுகின்றன. குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்புக்குள்ளாகும். எனவே பெண்களுக்கு புஷ் அப் பயனுள்ள பயிற்சியாகும். புஷ்-அப் போன்ற வலிமை பயிற்சி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை குறைக்கவும் மற்றும் ஒட்டுமொத்த உடல் அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.
புஷ்-அப் செய்வதன் மூலம் உங்கள் உடலின் தோரணையை மேம்படுத்த முடியும். அதாவது மார்புப்பகுதி, முதுகுப்பகுதி, தோள்கள் மற்றும் வயிற்றுப் பகுதி தசைகளை சரி செய்து, வலுவடையச்செய்வதன் மூலம் உடல் தோரணையை மேம்படுத்த முடியும்.