விழிப்புணர்வு தேவை; வாழ்வியல் மாற்றங்களும் கட்டுப்பாடுகளும் மிக மிக தேவை!

நவம்பர் 14: உலக நீரிழிவு நாள்!
World Diabetes Day
World Diabetes Day
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1922 ஆம் ஆண்டில் பிரட்ரிக் பான்ரிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் நாளை நினைவு கூரும் வகையில், உலக நீரிழிவு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலக நீரிழிவு நாளில், நீரிழிவு நோய் குறித்துச் செய்யப்படும் பரப்புரை, உலகின் மிகப்பெரிய நீரிழிவு விழிப்புணர்வுப் பரப்புரை என்றேச் சொல்லலாம். 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் செய்யப்படும் இப்பரப்புரை 1 பில்லியனுக்கும் அதிகமான மக்களைச் சென்றடைகிறது. 

மனித உடலில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் முக்கியத் தேவையாக உள்ளது. குறிப்பாக, இரத்தத்தின் சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிக்கலான நிலமைகளும் உருவாகலாம். கடுமையான நீண்ட காலச் சிக்கல்களாக இதயக் குழலிய நோய், பக்கவாதம், நெடுநாள் சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு நோயினால் ஏற்படும் கால் புண், நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் நோய் என்பன ஏற்படலாம். உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது.

பொதுவாக, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிக்கடி தாகம், அதிகப் பசி, மிக வேகமாக எடை குறைதல், அதிகமாகச் சோர்வடைவது, கண்பார்வை மங்குதல், வெட்டுக் காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிகக் காலம் பிடித்தல், திரும்பத் திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய், பாதங்களில் உணர்ச்சிக் குறைவு அல்லது எரிச்சல் போன்றவை நீரிழிவு நோயின் அறிகுறிகளாக இருக்கின்றன. பல வேளைகளில் அறிகுறிகள் சரியாகத் தென்படாமல் போகின்றன. நீரிழிவு நோயினை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துகின்றனர். 

முதலாவது வகை

முதலாவது வகை நீரிழிவானது (Type I Diabetes-IDDM - Insulin Dependent Diabetes Mellitus) குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. பத்து சதவீதமான நீரிழிவு நோயாளிகள் வகை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். 

இரண்டாவது வகை

இரண்டாவது வகை நீரிழிவு (Type II- NIDDM- Non Insulin Dependent Diabetes Mellitus) இன்சுலின் சுரப்பிகள் போதிய அளவு இன்சுலின் சுரக்காததாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 வீதமான நோயாளிகளில் காணப்படுகிறது. இந்த வகை நீரிழிவை, வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரிழிவை உடல் எடையைக் குறைப்பதாலும், உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியினாலும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தலாம்.

மூன்றாவது வகை

மூன்றாவது வகையான கர்ப்பக் கால நீரிழிவானது இரண்டு சதவீதம் முதல் நான்கு சதவீதமான பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. இருப்பினும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும்.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோய் தாக்கத்தைக் குறைக்கும் ஊற வைத்த வால்நட்!
World Diabetes Day

தடுப்பு முறைகள்

நீரிழிவு நோயில் முதல் வகை நீரிழிவுக்கான தடுப்பு முறைகள் என எதுவும் வரையறுக்கப்படவில்லை.

இரண்டாவது வகை நீரிழிவானது 85 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காடு வரை பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. இந்த நோயினை உடல் எடைப் பராமரிப்பு, உடலியக்கச் செயற்பாடுகளில் ஈடுபாடு, ஆரோக்கிய உணவுப் பழக்க வழக்கம் ஆகியவற்றின் மூலமாகத் தடுக்கவும் தாமதப்படுத்தவும் இயலும். இதேப் போன்று, நல்ல உணவுப் பழக்கவழக்கம் நீரிழிவு நோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முழு தானியங்கள், நீர்ச்சத்து நிறைந்த உணவுவகைகள், விதைகள், பல் நிறைவுற்றக் கொழுப்புகள் அடங்கிய தாவர எண்ணெய்கள் மற்றும் மீன் உணவுகள் போன்றவை இந்நோயைக் கட்டுப்படுத்துகின்றன. 

சர்க்கரை பானம் மற்றும் இறைச்சி வகைகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுதல், நிறைவுற்ற மற்ற கொழுப்புப் பொருட்களை எடுத்துக் கொள்ளுதல் வாயிலாக நீரிழிவைத் தடுக்கமுடியும். புகையிலைப் பயன்பாடுகள் நீரிழிவு நோய்க்குக் காரணமாக அமைவதால், புகையிலைப் பொருட்களின் பயன்பாடுகள் இருப்பின், இந்நுகர்வை நிறுத்திக் கொள்வது நல்லது.

சிகிச்சை முறைகள்

நீரிழிவு நோய்க்கான இரண்டு விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. ஒன்று, இயல்பு நிலைக்கு அருகாமையில் இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வதாகும். இரண்டாவது, நீரிழிவு நோயுடன் வாழ்வதாகும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் அதிகரித்து வரும் நீரிழிவு மற்றும் இதய நோய் - காரணங்கள் என்ன?
World Diabetes Day

நீரிழிவு நோய் வகை ஒன்றுக்கான சிகிச்சை முறைகள்

  • ஒரு நாளில் இன்சுலின் மருந்தைப் பல முறைகள் எடுத்துக் கொள்ளுதல்.

  • உணவு வேளைகளில் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளையும், மற்ற நேரங்களில் இன்சுலினை ஒரே சீராக வழங்கும் ஓர் உட்செலுத்தியைப் பயன்படுத்துதல்.

  • தொடர்ந்து இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கண்காணித்து வருதல்.

  • பரிந்துரைக்கப்பட்ட உணவுத் திட்டத்தை முறையாகக் கடைப்பிடித்தல்.

  • உடல் நலப் பராமரிப்புக் குழுக்கள் ஆகியவற்றுடன் கலந்தாலோசனை செய்தல்.

நீரிழிவு நோய் வகை இரண்டுக்கான சிகிச்சை முறைகள்

  • ஆரோக்கியமான உணவு முறை மேற்கொள்ளுதல்.

  • நாள்தோறும் எளிய உடற்பயிற்சி மேற்கொண்டு வருதல்.

  • உடற்பருமனைக் குறைத்தல்.

  • கணையத்தை நன்கு முடுக்கிவிட்டு இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தவல்ல மருத்துவ சிகிச்சை முறைகளைப் பின்பற்றுதல்.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோய்: கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 
World Diabetes Day

மூன்றாவது வகையான கர்ப்பக் கால நீரிழிவானது, பெரும்பாலும் குழந்தை பிறந்த பின்பு சரியாகிவிடுகிறது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1980 ஆம் ஆண்டில் 108 மில்லியனாக இருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 422 மில்லியனாக உயர்ந்தது. அதிக வருமானம் கொண்ட நாடுகளை விட,  குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் இந்நோயின் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பது பொதுவாக நல்லது. நீரிழிவு நோய் குறித்து முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பது, நம் உடல் நலத்தைப் பாதுகாக்க உதவுவதுடன் உயிரிழப்பைத் தவிர்க்கவும் உதவும்.

logo
Kalki Online
kalkionline.com