திடீர் கோபம், பயம் உங்களை ஆட்டுவிக்குகிறதா? உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கோஸ்ட் மெமரிஸ்!

காரணமில்லாத கோபத்திற்கும் குடும்பச் சண்டைகளுக்கும் பின்னால் இருக்கும் பழைய மனக்காயங்கள் பற்றி அறிவோம்.
கோஸ்ட் மெமரிஸ்
கோஸ்ட் மெமரிஸ்
எஸ்.விஜயலட்சுமி

விஜி ரவி என்கிற பெயரில் இதுவரை 40 சிறுகதைகள், 55 ஒரு பக்க கதைகள் 17 புத்தக விமர்சனங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகளை கல்கி, மங்கையர் மலர், அவள் விகடன் பெண்கள் மலர, குங்குமம் தோழி போன்ற பிரபல இதழ்களில் எழுதியுள்ளார். மங்கையர் மலர், வைகை இணைய இதழ் அனிச்சம், ஆனந்தசந்திரிகை மின்னிதழ் சங்கப் பலகை முகநூல் குழுமம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். தோனி எஃப் எம் ல் வாரம் ஒரு முறை கதை சொல்கிறார். கல்கி இணைய இதழில் தன்னம்பிக்கை, குடும்பம் வாழ்வியல், ஆரோக்கியம் ஆன்மீகம், ஃபேஷன், உளவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on

பொதுவாக மனித மனம் நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவங்களை விட்டுவிட்டு, கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி அதிகமாக அசைபோடும் தன்மை கொண்டது. கடந்த காலத்தில் ஏற்பட்ட மனக்காயங்கள், அதிர்ச்சிகரமான சம்பவங்கள், அவமானங்கள், மற்றும் அச்சங்கள் போன்றவை அடிமனதின் ஆழத்தில் அமைதியாகப் புதைந்து கிடக்கும்.

அவை முற்றிலுமாக அழிந்து விடுவதில்லை. ஒரு மனிதன் வளர்ந்து பெற்றோராகும் போதோ அல்லது புதிய பொறுப்பை ஏற்கும்போதோ, அந்தப் பழைய கசப்பான நினைவுகள் திடீரென விழித்துக்கொண்டு அவரை ஆட்டிப்படைக்கலாம். இந்த விசித்திரமான பழைய நினைவுகளை உளவியலில் 'கோஸ்ட் மெமரிஸ்' (Ghost Memories - நிழல் நினைவுகள்) என்று அழைக்கிறார்கள்.

கோஸ்ட் மெமரிஸ் எவ்வாறு உருவாகின்றன?

குழந்தைப் பருவம் என்பது மிகவும் மென்மையானது. அந்தப் பருவத்தில் நிகழும் உடல் ரீதியான தாக்குதல்கள், மனரீதியான புறக்கணிப்புகள், பெற்றோரிடையே நடக்கும் சண்டைகள் அல்லது திடீர் இழப்புகள் குழந்தையின் மனதில் ஆழமான வடுக்களை ஏற்படுத்துகின்றன.

அப்போது அந்தச் சூழலை எதிர்கொள்ளும் மனமுதிர்ச்சி குழந்தைகளுக்கு இருக்காது. இதனால், அவர்களது மூளையானது தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்காக, அந்த அதிர்ச்சிகரமான நினைவுகளை ஆழ்மனத்திற்குள் தள்ளிப் புதைத்துவிடும்.

வெளியே பார்க்கும்போது அந்த நபர் மிகவும் இயல்பாக இருப்பது போலத் தெரியும்; ஆனால் அடிமனதில் கசப்பான நினைவுகள் உள்ளுக்குள் அலைமோதிக்கொண்டே இருக்கும். இவை கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்து, சரியான நேரத்தில் வெளியே வந்து பயமுறுத்துவதாலேயே இவற்றை 'பேய் நினைவுகள்' என்று அழைக்கிறார்கள்.

கோஸ்ட் மெமரிஸ்
கோஸ்ட் மெமரிஸ்

வளர்ந்தபின் இதன் தாக்கம்:

ஒரு நபர் வளர்ந்து ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்வில் ஈடுபடும்போது, இந்தப் பேய் நினைவுகள் தனது வேலையைக் காட்டத் தொடங்குகின்றன.

  • வாழ்க்கைத் துணையுடன் மோதல்: சிறுவயதில் பெற்றோரால் கவனிக்கப்படாமல் கைவிடப்பட்ட ஒரு குழந்தை, அந்தப் பயத்துடனேயே வளரும். திருமணத்திற்குப் பின் தன் வாழ்க்கைத்துணை சற்றே கவனக்குறைவாக இருந்தாலும், 'இவர் நம்மை விட்டுப் போய்விடுவாரோ?' என்ற அளவுக்கு அதிகமாகப் பயந்து சண்டையிடுவார். உண்மையில், அவர் எதிரில் இருக்கும் துணையுடன் சண்டையிடவில்லை; தன் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் பழைய பயத்தோடுதான் போராடுகிறார்.

  • குழந்தைகளைக் கையாளும் விதம்: பெற்றோர் ஆகும்போது இதன் தாக்கம் இன்னும் அதிகமாகும். சிறுவயதில் கடுமையான கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட ஒரு பெற்றோர், தன் குழந்தையிடம் காரணமேயின்றி அளவுக்கு அதிகமாகக் கோபப்படலாம். சிறுவயதில் தனக்குக் கிடைக்காத பாதுகாப்பு தனது குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக, குழந்தையை அளவுக்கு மீறிக் கட்டுப்படுத்தவும் முயல்வார்கள்.

இதன் அறிகுறிகள் என்னென்ன?

சிறிய மன அழுத்தத்தைக் கூட தாங்க முடியாமல் இருப்பார்கள். காரணமே இல்லாமல் தனது துணையைச் சந்தேகப்படுவது, 'நம்மை விட்டு விலகி விடுவார்களோ' என்று தேவையில்லாமல் பயப்படுவது. திடீரென்று அளவுக்கு அதிகமான கோபம் மற்றும் மனச்சோர்வு தோன்றும். பழைய சம்பவங்களை நினைவூட்டும் சூழல்கள் வரும்போது உடலில் நடுக்கம் தோன்றுவது மற்றும் தேவையில்லாத பதற்றம் ஏற்படுவது.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோயாளியா நீங்கள்? சிகரெட் பிடித்தால் காத்திருக்கும் ஆபத்து!
கோஸ்ட் மெமரிஸ்

இவற்றிலிருந்து விடுபடுவது எப்படி?

கோஸ்ட் மெமரி என்பது நிரந்தரமான சாபம் அல்ல. சரியான விழிப்புணர்வும் முயற்சியும் இருந்தால் இதிலிருந்து முழுமையாக ஒருவரால் வெளியே வர முடியும்.

முதலில், தேவையற்ற பயத்திற்கும் கோபத்திற்கும் பின்னால் ஏதோவொரு பழைய மனக்காயம் இருக்கிறது என்று உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். 'இது என்னுடைய பழைய நினைவின் தாக்கம்; தற்போதைய உண்மை நிலவரம் இதுவல்ல' என்று நமக்குத்தானே தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

தனது வாழ்க்கைத் துணையிடம் அல்லது குடும்பத்தினரிடம் பயங்களைப் பற்றித் திறந்த மனதுடன் பகிர்ந்துகொள்வது நல்லது. தேவைப்பட்டால், மனநல ஆலோசகரின் உதவியோடு 'ட்ராமா தெரபி' மற்றும் தியானப் பயிற்சிகளை மேற்கொள்வது ஆழ்மனதில் இருக்கும் பழைய வடுக்களை மெல்ல மெல்ல குணப்படுத்த உதவும். கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் ஆழ்மனதில் மறைந்திருக்கும். அவற்றை பயப்படாமல் வெளிச்சத்திற்கு கொண்டு வரும்பொழுது, அவை தம் சக்தியை இழந்து மெல்ல மறைந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
சொந்தங்களிடம் ரத்தம் வாங்குவது ஆபத்தா? உயிருக்கே உலையாக்கும் TA-GVHD உண்மை!
கோஸ்ட் மெமரிஸ்
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com