
ஒரு காலத்தில் சிரித்தால் ஆயுள் அதிகரிக்கும் என்பதை கூட கிண்டலாகத் தான் கூறுவார்கள். அப்போது யாருக்கும் மன அழுத்தம் கிடையாது. வேலை செய்யும் இடத்தில் வேலைப் பளு இருக்குமே தவிர, வேலையில் டார்க்கெட்டும் டார்ச்சரும் இருக்காது. அந்த காலத்தில் தெருவில் கூடி சிரித்து பேசுவது, ஆல மரத்தடியில் அமர்ந்து சிரித்து பேசுவது, குளத்தின் படிக்கட்டுகளிலும், கோயில் படியிலும், வாய்க்கால் மதில் கட்டைகளிலும், வீட்டுத் திண்ணையிலும், கை கொட்டி சிரித்து ஊர் கதை பேசி மகிழ்ந்து மன அழுத்தம் இல்லாமல் வாழ்ந்தனர்.
இன்று அப்படி இல்லை. இன்று சிரிக்க வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அது ஒரு மருத்துவ முறை என்று கூட கூறுகின்றனர். நாம் சிறுவர்களாக இருக்கும் போது அடிக்கடி சிரித்துக் கொண்டே இருப்போம். அதனால், மனதில் கவலைகள் ஏதுமின்றி மகிழ்ச்சியாக இருந்தோம். வயது ஏற ஏற சிரிப்பு குறையத் தொடங்குகிறது. சிரிப்பு குறைந்தால் மன அழுத்தம் அதிகரிக்கிறது என்று அர்த்தம்.
சந்தர்ப்ப சூழல்கள் சிரிப்பதை மறக்க வைக்க முயல்கின்றன. இருப்பினும் சிரிக்க வாய்ப்புகளை தேடுங்கள்; அல்லது உருவாக்குங்கள். சிரிப்பு ஒரு மருத்துவம் என்பதால், நீங்கள் சிரிப்பது உங்கள் ஆரோக்கியத்தின் அளவுகளை அதிகரிக்க செய்யும். உங்கள் நண்பர்களை சிரிக்க வைத்தால் உங்களின் நட்பு வலுப்படலாம்.
சிரிப்பைப் பற்றி அறிவியலும் ஆயுர்வேதமும் என்ன கூறுகின்றன?
இன்றைய எந்திரமயமான வாழ்க்கையில், வேலைப் பளு, பொருளாதார நிர்ப்பந்தம் காரணமாக மன அழுத்தம் அதிகரித்து பலரும் சிரிப்பை மறந்து விடுகிறார்கள்.
சிரிப்பு ஒரு சிறந்த மருந்து, இது உடலில் உணர்வு மாற்றங்களை தூண்டி ஆரோக்கியம் சிறக்க வைக்கிறது. இது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மன அழுத்தத்தின் தீமைகளில் இருந்து விடுபட வைக்கிறது.
சிரிப்பு மனதையும் உடலையும் மீண்டும் சமநிலைக்குக் கொண்டுவருவதற்கு உதவுகிறது. மனதில் உள்ள சுமைகளைக் குறைத்து , நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
சிரிப்பு முழு உடலையும் தளர்த்துகிறது. இது பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் நீக்கி, உங்கள் தசைகளை 45 நிமிடங்கள் வரை தளர்த்துகிறது. இது மன அழுத்த ஹார்மோன்களைக் குறைத்து நோயெதிர்ப்பு செல்கள் மற்றும் தொற்று எதிர்ப்பு ஆன்டிபாடிகளை அதிகரிக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்படுகிறது. சிரிப்பினால் டோபமைன் மற்றும் எண்டோர்பின்கள் போன்ற மகிழ்ச்சியை கொடுக்கும் ரசாயனங்கள் தூண்டப்பட்டு வெளிவருகின்றன. இது மன அழுத்தம் குறைத்து, நல்ல மனநிலையை தரும் ஒரு ரசாயனம்.
நல்ல சிரிப்பு இரத்த நாளங்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
ஒரு நாளைக்கு 10 முதல் 15 நிமிடங்கள் சிரிப்பதன் மூலம் நம்மால் 40 கலோரிகளை குறைக்க முடியும். இது பெரிய அளவில் பலன் இல்லை என்றாலும் சந்தோஷத்தின் மூலம் நல்ல பலன் கிடைக்கிறது. ஆயுர்வேதத்தின் படி, சிரிப்பு வாதம், பித்தம், கபத்தினை கட்டுப்படுத்துகிறது. செரிமானத்தை மேம்படுத்தி நல்ல தூக்கத்தையும் வர வைக்கிறது. இதனால் நல்ல உணர்வு ஒருவருக்கு ஏற்படுகிறது .
மன ஆரோக்கியம்:
ஒருவர் சிரிக்கும்போது அவரது பதட்டம், கோபம் சோகத்தை உணர முடியாது. இது சோகமான உணர்ச்சிகளை நிறுத்துகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து ஆற்றலை அதிகரிக்கிறது. எந்த செயலிலும் கவனம் செலுத்தி வெற்றி பெற வைக்கிறது.
நரம்புகள் தளர்வாக இருப்பதால், மனதில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. நார்வேயில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், நகைச்சுவை உணர்வினால் அடிக்கடி சிரித்துக் கொண்டிருப்பவர்கள், நகைச்சுவை உணர்வில்லாமல் சிரிக்காதவர்களை விட அதிக நாட்கள் உயிர் வாழ்வதாகக் கண்டறியப்பட்டது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)