காலை உணவை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், எந்தெந்த உணவுகளை காலையில் பெண்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது குறித்து தெரியுமா?
அளவுக்கு குறைவான சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதும் தவறுதான், அதேபோல் மிக அதிகமான சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதும் ஆரோக்கியமற்றதே. காலை நேரத்தில் என்னெல்லாம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லதல்ல என்று பார்ப்போம்.
பான் கேக்:
பான் கேக்கில் சேர்க்கப்படும் வெல்லம், சிரப், தேன் போன்ற பொருட்களில் கலோரிகள் அதிகம் இருக்கும். இது ரத்தத்தின் சர்க்கரை அளவையும் உடல் பருமனையும் அதிகரிக்கும். ஆகையால், காலையில் இதுபோன்ற உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்.
ஓட்மீல்:
நாம் எளிதாக சமைத்து சாப்பிடும் ஒன்றுதான் ஓட்ஸ். ஆகையால், வேலைக்குப் போகும் அவசரத்தில் அடிக்கடி ஓட்மீல் சாப்பிடுவோம். அதுவும் ஃப்ளேவர் சார்ந்த ஓட்ஸை காலையில் எடுத்துக்கொள்ளவே கூடாது. இதில் நிறைய செயற்கையான ஃபிளவேர்களும் அதிக இனிப்பும் சேர்க்கப்பட்டு இருக்கும். இது கலோரிகளும் அதிகம். சர்க்கரை அளவையும் அதிகரிக்கும்.
ஸ்மூத்தி:
பொதுவாக பழ வகை ஸ்மூத்திகள் உடலுக்கு நல்லது என்று கூறுவார்கள். ஆனால், ஊட்டச்சத்து நிபுணர்கள் காய்கறிகள் மற்றும் கீரை ஸ்மூத்தி வகைகளை காலையில் குடிப்பது ரத்த சர்க்கரையை நிச்சயம் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.
செரல்:
லைட் உணவான இதில் நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன. ரெடிமேட் செரல் வகைகளில் சர்க்கரை மற்றும் பதப்படுத்திகள் சேர்க்கப்பட்டிருக்கும். ஆகையால், காலையில் எடுத்துக்கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள். பாலுடன் சேர்த்து எளிமையாக சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்பதை இனி மறந்துவிடுங்கள்.
புரோட்டீன் பார்:
புரோட்டீன் பாரை வாங்கி பேக்கில் போட்டுவிட்டு, போகிற வழியில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று எத்தனை பேர் நினைத்து சாப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் அவற்றில் நிறைய சர்க்கரை (வெல்லம்), ஆரோக்கியமற்ற கொழுப்புகள் சேர்க்கப்பட்டிருக்கும். அதிலும் குறிப்பாக காலை மற்றும் வேலை வேளைகளில் இதை எடுத்துக் கொள்ளவே கூடாது.
யோகர்ட்:
காலையில் யோகர்ட் எடுத்துக்கொள்வது நல்லதுதான். ஆனால், கடைகளில் வாங்கும் பிளேவர்டு யோகர்ட்டுகளை சாப்பிடக் கூடாது. அதில் பதப்படுத்திகள், சர்க்கரை, சில எசன்ஸ் வகைகள் சேர்க்கப்பட்டு இருக்கும். கலோரிகளையும் அதிகரிக்கும்.
ப்ரெட் ரோஸ்ட்:
பலர் அதிகம் விரும்பி சாப்பிடும் ஒன்று ப்ரெட் ரோஸ்ட். இப்போது கடைகளில் வாங்கும் ப்ரெட், ரிஃபைண்ட் செய்யபபட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுவது. அதில் எந்தவித ஊட்டச்சத்துக்களும் இல்லை. இதை காலை வேளையில் எடுக்கும்போது ரத்தத்தின் சர்க்கரை அளவு தான் அதிகரிக்கும். ஆகையால், பிரெட் ரோஸ்ட், சாண்ட்விச் போன்றவற்றைத் தவிர்த்துவிடலாம்.