
டீ என்பது இன்றைய இந்தியாவின் மில்லியன் டாலர் வியாபாரம் என்றால் அது மிகையல்ல... அது மிகவும் குறைவு தான். பில்லியன் டாலர்களை தாண்டி தேநீர் பொருளாதாரம் இந்தியாவில் உள்ளது. டீ என்பது ஒரு பானம் என்பதை விட அது ஒரு எமோஷன் என்று சொல்லப்படுவது உண்டு.
பெரும்பாலான இந்தியர்கள் காலையில் எழுந்த உடனே டீ குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். மீதம் உள்ள இந்தியர்கள் காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்... அவ்வளவு தான் வித்தியாசம். இரு நண்பர்கள் இந்தியாவில் சந்தித்து கொண்டால் முதலில் போவது டீக்கடைக்கு தான். நீங்கள் வேறு கடையை யோசிக்க வேண்டாம்.
மற்ற நாடுகளில் டீ என்பது வெறும் சுடு தண்ணீரில் தேயிலைத் தூள் மட்டுமே கலந்து, சர்க்கரை, பால், மசாலா பொருட்கள் சேர்க்கப்படாமல் செய்வது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் டீயில் பாலும், சர்க்கரையும் சேர்ப்பது கட்டாயம்.
இதனால் டீ கலோரி நிறைந்ததாக மாறுகிறது. அதிலும் சிலருக்கு டீயில் இஞ்சி, சுக்கு, ஏலக்காய் கலந்து குடிப்பது விருப்பமானது. இந்த டீயை ஒரு மாத காலம் நிறுத்தினால் ஒருவரின் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.
பொதுவாக பாலில் கால்சியம், புரதம், வைட்டமின்கள், கொழுப்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது என்றாலும், அதை தேயிலை தூளுடன் கலந்து குடிப்பது ஆரோக்கியமான தேர்வாக இருக்காது. பாலில் தேயிலை தூள்களை சேர்க்கும் போது அதில் உள்ள டானின் மற்றும் காஃபின் இணைந்து மோசமான கலவையாக மாறுகிறது. இதனுடன் தேநீரில் சர்க்கரையையும் சேர்க்கிறார்கள். இது உடலுக்கு அதிக கலோரிகளை கொடுத்து தீங்கு விளைவிக்கிறது.
உயிரி தொழில்நுட்ப தகவல்களுக்கான தேசிய மையம், தேநீர் மற்றும் காபி போன்ற பானங்களில் காஃபின் நிறைந்துள்ளது. இந்த பானங்களை தொடர்ச்சியாக அருந்துபவர்களுக்கு பதட்டம், வயிற்று வலி, போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.
தேநீர் குடிப்பதை நிறுத்தினால் ஆரம்ப காலக்கட்டத்தில் ஒரு சிலருக்கு தலைவலி ஏற்படத் தொடங்கும். அவர்கள் சோர்வாகவும் பதட்டமாகவும் காணப்படுவார்கள். இதனால் சில நாட்கள் கவனச் சிதறலும் ஏற்படலாம். ஆனால் , விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள். ஒரு மாதத்திற்கு தேநீரை தவிர்த்தால் நல்ல தூக்கம் வரும். அதன் பின்னர், நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணருவீர்கள்
அதிகமாக தேநீர் நுகர்வில், ஊட்டச்சத்துக்கள் உடலில் சரியாக உறிஞ்சப்படுவதில்லை. இது செரிமானத்தையும் பாதித்து மலச்சிக்கல் மற்றும் அமிலத் தன்மையை ஏற்படுத்துகிறது. ஒரு மாதத்திற்கு தேநீர் அருந்துவதை நிறுத்திய பின்னர் செரிமானம் மேம்படுகிறது. எடை குறைப்பிற்கு வழி வகுக்கிறது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறிய அளவில் சர்க்கரை அளவும் குறைகிறது. உடலில் கொழுப்புக்கள் சேர்வது கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. ஹார்மோன் சமநிலை, மேம்பட்ட பல் ஆரோக்கியம், உடலில் ஊட்டச்சத்துக்களை முறையாக உறிஞ்சுதல், பதட்டமின்மை மற்றும் தெளிவான சருமம் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.