

இன்ட்ரோவர்ட் (Introvert) என்பது தனியாக இருக்கும்பொழுது மனநிறைவையும் ஆற்றலையும் பெற்று, மற்றவர்களுடன் அதிகம் பழகும் பொழுது அல்லது கூட்ட நெரிசலில் இருக்கும் பொழுது தன் ஆற்றலை இழந்து சோர்வடையும் ஒரு வகையான உள்முக ஆளுமைப் பண்பைக் குறிக்கும். இதனை உள்முக சிந்தனையாளர் அல்லது அகம் சார்ந்தவர் என்று கூறலாம்.
தனிமையை விரும்புபவர்கள், தங்களுக்குள் சிந்திப்பவர்கள் மற்றும் அமைதியான சூழலில் இருந்து தங்களின் ஆற்றலை (Energy) பெறுபவர்களைக் குறிக்கும் ஒரு ஆளுமைத் திறனாகும் (Personality Type). இவர்கள் வெளி உலகத்தை விட தங்களது உள் உலகிற்கு (எண்ணங்கள், உணர்வுகள்) அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
1920களில் புகழ்பெற்ற உளவியலாளர் கார்ல் யுங் (Carl Jung) என்பவர் தான் இந்த இன்ட்ரோவர்ட் மற்றும் எக்ஸ்ட்ரோவர்ட் என்ற ஆளுமைப் பண்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஒருவர் இன்ட்ரோவர்ட்டாக அல்லது எக்ஸ்ட்ரோவெர்ட்டாக இருப்பதற்கு முக்கிய காரணம் இயல்பாகவே அவர்களின் மூளையின் அமைப்புதான் என்கிறது அறிவியல்.
ஞாபக சக்தி, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, திட்டமிடுவது போன்றவற்றிற்கு பயன்படுத்தும் மூளையின் முன் பகுதியில் அதிக ரத்த ஓட்டம் இருப்பவர்கள் இன்ட்ரோவர்ட்டாக இருப்பார்கள். தவிர வாழ்க்கையில் துன்பமான நிகழ்வுகளைக் கடந்து வருபவர்களும் இன்ட்ரோவர்ட்டாக இருப்பார்கள்.
இன்ட்ரோவர்ட் நபர்களுடைய முக்கிய குணநலன்கள்:
தனிமையை விரும்புபவர்கள்:
கூட்டமான இடங்களை விடத் தனியாக இருக்கும் போது அல்லது தங்களுக்குப் பிடித்த ஒன்று அல்லது இரண்டு நபர்களுடன் இருக்கும் பொழுது அதிக வசதியாக உணர்வார்கள். தனிமையில் அமைதியாக நேரம் செலவழிப்பது இவர்கள் மனதுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
ஆற்றல் மேலாண்மை:
எக்ஸ்ட்ரோவர்ட்கள் மற்றவர்களுடன் பழகுவதன் மூலம் ஆற்றலைப் பெறுகிறார்கள். ஆனால் இன்ட்ரோவர்ட்டுகளோ சமூக நிகழ்வுகளில் அல்லது கூட்டங்களில் பங்கேற்ற பிறகு மனரீதியாக சோர்வடைந்து, அதை மீட்டெடுக்கத் தனிமையை நாடுவார்கள்.
ஆழ்ந்த சிந்தனையாளர்கள்:
எதையும் அவசரப்பட்டுப் பேசாமல் நன்றாக சிந்தித்துவிட்டுப் பேசுவார்கள். அதேபோல் எதையும் செய்வதற்கு முன்பு ஆழமாகச் சிந்திக்கும் குணம் கொண்டவர்கள்.
சிறந்த கேட்பாளர்கள்:
தேவையின்றி அதிகம் பேசுவதைத் தவிர்த்து, மற்றவர்கள் கூறுவதை கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் இவர்களிடம் அதிகம் இருக்கும்.
இன்ட்ரோவர்ட் பற்றிய பொதுவான தவறான புரிதல்கள்:
இன்ட்ரோவர்ட் நபர்களைப் பற்றி சமூகத்தில் பல தவறான புரிதல்கள் நிலவுகின்றன. இன்ட்ரோவர்ட் என்றால் கூச்சம் என்று அர்த்தமல்ல. கூச்சம் என்பது மற்றவர்களைப் பார்த்தோ அல்லது சமூகச் சூழலைப் பார்த்தோ ஏற்படும் பயம் அல்லது தயக்கம். ஆனால் இன்ட்ரோவர்ட் என்பது ஆற்றலை நிர்வகிக்கும் முறை. இவர்கள் இயல்பாகவே தனிமையை விரும்புவார்கள். இவர்கள் யாரோடும் பேச விரும்பாதவர்கள் அல்லது திமிர் பிடித்தவர்கள் அல்ல; அர்த்தமுள்ள ஆழமான உரையாடல்களை மட்டுமே இவர்கள் விரும்புவார்கள். இன்ட்ரோவர்ட் என்பது ஒருவரது ஆற்றல் சார்ந்த விஷயம். அவர்கள் பயத்தினால் அமைதியாக இருப்பதில்லை. அமைதியை விரும்புவதால் அமைதியாக இருக்கிறார்கள்.
இவர்கள் யாரோடும் பழக மாட்டார்கள், சமூகத்திற்கு எதிரானவர்கள் என்ற தவறான புரிதல் உள்ளது. உண்மையில் அவர்களுக்கு மனிதர்களைப் பிடிக்கும். ஆனால் பெரிய கூட்டங்களுக்கு செல்வதை விட, நெருக்கமான தங்களுக்குப் பிடித்த சில நண்பர்களுடன் ஆழமான உரையாடல்களை மேற்கொள்ளவே விரும்புவார்கள் (Quality over Quantity).
இவர்கள் அமைதியாக இருப்பதால் ஏதோ கவலையில், மன அழுத்தத்தில் அல்லது சோகமாக இருப்பார்கள் என்று தவறாக எண்ணுகிறார்கள். உண்மையில் அவர்கள் தனியாக இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்பார்கள். தங்களின் சிந்தனைகளில் மூழ்கியிருப்பது அவர்களுக்குப் பிடிக்கும்.
இவர்களால் மற்றவர்களுடன் பழகவே முடியாதா? என்றால் நிச்சயம் முடியும். இவர்களால் நல்ல தலைவர்களாக இருக்க முடியாது என்ற எண்ணமும் தவறு. இன்ட்ரோவர்ட்டுகள் மிகச்சிறந்த தலைவர்களாக இருக்க முடியும். இவர்கள் மற்றவர்கள் சொல்வதை உற்று கவனிப்பவர்களாகவும் (Good listeners), சிந்தித்து முடிவெடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.
இன்ட்ரோவர்ட்களாலும் மேடைகளில் பேச முடியும். கூட்டங்களை வழிநடத்த முடியும். ஆனால் அது முடிந்ததும் தங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கு அவர்களுக்குச் சற்று தனிமை தேவைப்படும். மனிதர்களில் யாரும் 100% முழுமையாக இன்ட்ரோவர்ட்டாக அல்லது எக்ஸ்ட்ரோவர்ட்டாக இருக்க முடியாது. இது ஒரு அளவுகோல் போன்றது. இதன் மையப் பகுதியில் இருப்பவர்களை 'ஆம்பிவெர்ட்' (Ambivert) என்று அழைக்கிறார்கள்.