இரவு 10 மணிக்கு மேல் சாப்பிடுகிறீர்களா? உங்கள் கல்லீரல் என்ன சொல்கிறது?

தாமதமாக இரவு உணவு சாப்பிடும் பழக்கம் சர்காடியன் ரிதம்மைப் பாதித்து, எவ்வாறு கொழுப்பு கல்லீரல் நோயை (MASLD) உருவாக்குகிறது?
Fatty Liver Disease | கல்லீரல்
Fatty Liver Disease | கல்லீரல்Image Credit: ChatGPT
முனைவர். த. சரவணக்குமார்

முனைவர் த.சரவணக்குமார், மதுரை தியாகராசர் கல்லூரியில் இயற்பியல் உதவிப் பேராசிரியர். நானோகிரிஸ்டல் ஆய்வில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்; Q1 தரவரிசை இதழில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார். அறிவியலை எளிமையாக விளக்குவதோடு, கவிஞர், பாடலாசிரியர், நாட்டுப்புறப் பாடகராகவும் இயங்குகிறார்.

Updated on: 

"இன்னைக்கு வேலை விட்டு வர ரொம்ப லேட்டாயிடுச்சு...

வீட்டுக்குப் போய்தான் நிம்மதியா சாப்பிடணும்."

இப்படி நினைத்து இரவு 10 அல்லது 11 மணிக்குத்தான் சாப்பிடுகிறீர்களா?

இன்றைய வாழ்க்கை முறையில் இது புதிதல்ல. அலுவலக வேலை, கல்லூரி வேலை, போக்குவரத்து நெரிசல், வியாபாரம்... எதுவாக இருந்தாலும், இரவு உணவு தள்ளிப்போவது பலருடைய அன்றாட வாழ்க்கையாகிவிட்டது.

ஒரு நாள் லேட்டாகச் சாப்பிட்டதால் கல்லீரல் பாதிக்கப்படாது.

ஆனால்… தினமும் இதுவே பழக்கமாக மாறினால்?

அதைத்தான் இன்றைய மருத்துவ உலகம் கவனமாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது.

கல்லீரல் தூங்காது... ஆனால் அதற்கும் ஒரு "கடிகாரம்" இருக்கிறது!

நம்முடைய உடலில் 'சர்காடியன் ரிதம் (Circadian Rhythm)' என்ற 24 மணி நேர உயிரியல் கடிகாரம் இயங்கிக்கொண்டே இருக்கிறது.

எப்போது விழிக்க வேண்டும்...

எப்போது தூங்க வேண்டும்...

எப்போது செரிமானம் வேகமாக நடக்க வேண்டும்...

எப்போது உடல் ஓய்வெடுக்க வேண்டும்...

இவை அனைத்தையும் இந்த உயிரியல் கடிகாரம்தான் கட்டுப்படுத்துகிறது.

பகல் நேரத்தில் உடல் உணவில் இருக்கும் குளுக்கோஸைச் சிறப்பாகப் பயன்படுத்தும்.

ஆனால் இரவு நேரம் 7 மணியை நெருங்கும்போது உடல் மெதுவாக ஓய்வு நிலைக்குச் செல்லத் தொடங்குகிறது. அப்போது வளர்சிதை மாற்றத்தின் வேகமும் மாறுகிறது.

Fatty Liver Disease | கல்லீரல்
Fatty Liver Disease | கல்லீரல்Image Credit: ChatGPT

இரவு லேட்டாகச் சாப்பிட்டால் என்ன நடக்கிறது?

நீங்கள் இரவு 10.30 மணிக்கு… அதுவும் நிறைய சாதம், பிரியாணி, இனிப்பு அல்லது எண்ணெய் அதிகமான உணவுகளைச் சாப்பிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த நேரத்தில் உடலின் இன்சுலின் செயல்திறன் (Insulin Sensitivity) பகல் நேரத்தைவிட சற்று குறைவாக இருக்கும். அதனால், குளுக்கோஸை உடனடியாகச் செல்கள் பயன்படுத்தும் திறனும் குறையலாம்.

அப்படியென்றால், பயன்படுத்தப்படாத கூடுதல் சக்தி எங்கே போகும்?

கல்லீரல் அதை முதலில் கிளைகோஜன் (Glycogen) ஆகச் சேமிக்க முயற்சிக்கும்.

அதற்கும் மேலாக சக்தி அதிகமாக இருந்தால், அதை டிரைகிளிசரைடு (Triglyceride) என்ற கொழுப்பாக மாற்றி கல்லீரலில் சேமிக்கத் தொடங்கும்.

இந்தச் செயல்முறை தொடர்ந்து நீண்ட காலம் நடந்தால், கல்லீரலில் கொழுப்பு படிய ஆரம்பிக்கும். இதுவே இன்று MASLD (Metabolic Dysfunction-Associated Steatotic Liver Disease) என்று அழைக்கப்படும் கொழுப்பு கல்லீரல் நோய் உருவாகும் காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இரவு உணவைத் தவிர்த்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?

இல்லை.

'சாப்பிடாம இருந்தா சரியாகிடும்' என்று நினைப்பதும் தவறு.

கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது என்பது ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதில் இல்லை.

மாறாக, சரியான அளவு உணவு

சரியான நேரத்தில் உணவு

உடல் எடையைக் கட்டுப்படுத்துதல்

தினசரி உடற்பயிற்சி

சர்க்கரை நிறைந்த பானங்களைக் குறைத்தல்

இவைகள்தான் முக்கியமானவை என்று மருத்துவ வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

2 – 3 மணி நேர இடைவெளி ஏன் சொல்கிறார்கள்?

பலர் கேட்கும் கேள்வி இது.

சாப்பிட்ட உடனேயே படுத்துக்கொண்டால், செரிமான அமைப்பிற்கு போதிய நேரம் கிடைக்காமல் போகலாம்.

மேலும், சிலருக்கு நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகளும் அதிகரிக்கலாம்.

அதனால்தான், தூங்குவதற்கு குறைந்தது 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடித்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

ஒரு சின்ன மாற்றம்... பெரிய பலன்!

இதையும் படியுங்கள்:
சீரியல் பார்த்தால் மூளை வடிவம் மாறுமா? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு!
Fatty Liver Disease | கல்லீரல்

இரவு உணவை முடித்தவுடன் உடனே படுக்கைக்குச் செல்லாதீர்கள்.

சிறிது நேரம் நடந்து கொடுங்கள்.

கனமான, எண்ணெய் அதிகமான உணவுகளுக்குப் பதிலாக காய்கறிகள், முழுத்தானியங்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுங்கள்.

வாரம் 5 முறையாவது சுறுசுறுப்பாக உடற்பயிற்சி செய்யுங்கள்.

இந்தச் சிறிய பழக்கங்களே கல்லீரலுக்குப் பெரிய பாதுகாப்பாக மாறலாம்.

ஒரு நிமிடம் யோசிச்சுப் பாருங்க...

நாம் பொதுவாக,

'என்ன சாப்பிடுறோம்?' என்று மட்டுமே யோசிக்கிறோம்.

ஆனால்... 'எப்போது சாப்பிடுறோம்?' என்ற கேள்வியும் அதே அளவு முக்கியமானது.

ஒரு நாள் லேட்டாகச் சாப்பிட்டதால் பயப்பட வேண்டாம்.

ஆனால்...

அது தினசரி பழக்கமாக மாறிவிடாதபடி பார்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.

சாப்பாடு வயிற்றை மட்டும் நிரப்பக்கூடாது... நம் கல்லீரலையும் காக்க வேண்டும்!

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் கால் விரல் இடுக்கில் அரிப்பு, வெள்ளையாகத் தோல் உரிதல்: சேற்றுப்புண்ணா? 
Fatty Liver Disease | கல்லீரல்

Reference: